Published:Updated:

உயிர் பிழை - (புற்றுநோயை வென்றிட)

உயிர் பிழை - (புற்றுநோயை வென்றிட)
பிரீமியம் ஸ்டோரி
உயிர் பிழை - (புற்றுநோயை வென்றிட)

மருத்துவர் கு.சிவராமன்

உயிர் பிழை - (புற்றுநோயை வென்றிட)

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
உயிர் பிழை - (புற்றுநோயை வென்றிட)
பிரீமியம் ஸ்டோரி
உயிர் பிழை - (புற்றுநோயை வென்றிட)

சித்த மருத்துவர் என்ற அடையாளத்தில் இருந்து சமூக மருத்துவர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர் கு.சிவராமன். சித்த மருத்துவத்தை மற்றவர்களைப் போல இவரும் முதலில் ஆர்வமாக, தொழிலாகப் படிக்கத் தொடங்கி இருப்பார். ஆனால், அவர் பார்த்த சமூகம் அவரை அப்படி இருக்க விடவில்லை. தொழிலைத் தாண்டி வரவைத்தது. வந்த சிவராமன், இன்றைய தமிழ்ச் சமூகத்துக்குச் செய்துவரும் சேவை என்பது இன்னொரு கால் நூற்றாண்டுகள் கழித்துத்தான் முழு முக்கியத்துவத்தை அடையும். உணவில், மனதில், சுற்றுப்புறச்சூழலில் அவர் இன்று முன்வைத்து வரும் பல்வேறு கருத்தாக்கங்கள் கொஞ்சம் ஓவராகக் கூடத் தெரிந்தாலும், அந்த அபாயத்தை ஊர் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

உயிர் பிழை - (புற்றுநோயை வென்றிட)

ஆனந்த விகடன் இதழில் ‘ஆறாம் திணை’யாகத் தொடங்கிய மருத்துவர் சிவராமனின் விழிப்பு உணர்வுப் பயணம், ‘உயிர் பிழை’யாக இப்போது வந்து நின்று கொண்டு இருக்கிறது. மனிதனின் ஆகப் பெரும் துன்பமாக மாறிவிட்ட புற்றுநோய் குறித்து சிவராமன், விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்தப் புத்தகம். ‘‘பேரிடர்களை எல்லாம் பிணக்குவியல்களுக்கு மடியில் இருந்து விவாதிப்பதும் அழுகுரலின் ஊடே அமர்ந்து அனுமானங்களை வரையறுப்பதும் பொதுவாய் சமீபத்திய நம் வரலாறு காட்டும் வாடிக்கைகள்” என்ற வருத்த வார்த்தைகளில் இருந்துதான் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வு கட்டுரைகள் விரிகின்றன.

சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு ஆகிய நோய்கள் கொஞ்சம் அக்கறையும் கூடுதல் கரிசனமும் இருப்பவர்களால் வெல்லக்கூடியவை. ஆனால் புற்றுநோய்? அக்கறை மட்டும் போதாது; கவனிப்பு மட்டும் காணாது; பணம் மட்டுமே போதாது. இந்த மூன்றையும் தாண்டி என்ன இருக்கிறது? வேறு வழியே இல்லை என்பதுதான் யதார்த்தம். அப்படியானால், என்ன செய்ய முடியும்? நோயை வெல்வதைவிட, நோய்வராமல் தடுக்கும் வழியைக் கண்டுபிடிப்பதே முக்கியமானது என்ற உண்மையான சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவை இந்தக் கட்டுரைகள். நோயாளிகளை, அதாவது ஆள் பிடிப்பதற்காக எழுதவில்லை. நோய் உங்களை அண்டிவிடக் கூடாது என்ற நோக்கத்துக்கு வழிகாட்டுகிறார் சிவராமன்.

‘இந்த ஒரு தலைமுறை தான் தன் அடுத்த தலைமுறையின் மரணத்தை அருகில் இருந்து பார்க்கப்போகும் துரதிர்ஷ்டமான தலைமுறை’ என்று மருத்துவர் சாந்தா சொன்னதை அடிக்கடி மேற்கோள் காட்டும் சிவராமன், அந்த அடுத்த தலைமுறைக்கு என்ன சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், என்ன காய்கறி சாப்பிட வேண்டும், எப்படிப்பட்ட பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும், எது மகிழ்ச்சி, எது உண்மையான மகிழ்ச்சி என்ற சொற்களின் மூலமாக நமக்கு வாழ்க்கைப் பாடத்தை எடுக்கிறார். இதைச் சித்த மருத்துவம் மூலமாக மட்டும் அல்ல... அனைத்து வகையான மருத்துவ முறைகளையும் ஒன்றிணைத்து இந்த நோயை வெல்லலாம் என்பதில்தான் சிவராமனின் பரந்துபட்ட பார்வை அடங்கி இருக்கிறது.

புற்றுக்கு எதிராக மக்கள் அனைவரும் புறப்பட வேண்டிய காலம் இது. அதற்கான திறவுகோல் இந்தப் புத்தகம்.