`பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பயப்படுகிறார்கள்' - குக்கர் தடை விவகாரத்தில் தினகரன் காட்டம்! | TTV Dinakaran slams OPS and EPS about cooker symbol issue

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (28/03/2018)

கடைசி தொடர்பு:18:40 (28/03/2018)

`பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பயப்படுகிறார்கள்' - குக்கர் தடை விவகாரத்தில் தினகரன் காட்டம்!

எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் எங்களைக் கண்டு பயப்படுவதால்தான் உயர் நீதிமன்றம் குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கிய பிறகும் மேல்முறையீடு செய்கிறார்கள். மேலும், குக்கர் சின்னத்துக்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்றும், நிறுத்திதான் வைத்துள்ளது எனவும் தஞ்சையில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

 டி.டி.வி தினகரன்

தினகரன் தரப்பினர் நாங்கள் தேர்தலை சந்திப்பதற்கு எங்களுக்கு தனி கட்சியும், குக்கர் சின்னம் மற்றும் புதியகொடி பயன்படுத்துவோம் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை ஏற்று நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு குக்கர் சின்னம் மற்றும் கட்சி பெயர் வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும், ஜெயலலிதா படம் போட்ட கொடியுடன் கட்சியின் சின்னமாகக் குக்கரைப் பயன்படுத்தி வந்தனர் தினகரன் தரப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் குக்கர் சின்னத்துக்கு இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டது. 

இது குறித்து பேசிய தினகரன், "குக்கர் சின்னத்துக்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திதான் வைத்துள்ளது. எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளனர். அதற்குள் தனி அமர்வு இரண்டு வாரத்துக்குள் அமைத்து ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சசிகலாவும் நானும் தொடர்ந்த மூல வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்குகளை நாங்கள் போராடி வெற்றி பெற்று, அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக ஆவோம். திடீரென தேர்தல் வந்தால், நீதிமன்றத்தை அணுகுவோம். 

மேலும் தீர்ப்பு விபரங்களை முழுமையாக படித்த பிறகே முழு விபரமும் தெரியும். எங்களைக் கண்டு எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் பயப்படுகின்றனர். அதனால்தான் முதலில் கட்சி கொடியில் உள்ள கலரைச் சொன்னார்கள். அதன் பிறகு, கொடியில் ஜெயலலிதா படத்தைப் போடக் கூடாது என்றார்கள். அவர்கள் கொடியில் உள்ள அண்ணாவுக்கும் எங்கள் கொடியில் உள்ள ஜெயலலிதாவுக்கும் மக்கள் வித்தியாசம் தெரியாமல் இருப்பார்களா. ஆளும் அரசு எங்களைக் கண்டு அதிகம் பயப்படுவதால்தான் நீதிமன்றத்துக்குச் சென்று இது போன்ற இடையூறுகளைச் செய்கிறார்கள்" எனப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க