வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (29/03/2018)

கடைசி தொடர்பு:16:45 (29/03/2018)

`காவிரி விவகாரத்தில் தற்கொலை எனக் கூறுவதெல்லாம் அரசியல் பித்தலாட்டம்!' - கமல் சாடல் #WeWantCMB

காவிரி விவகாரத்தில் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இதனால், மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. அதேவேளையில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் வலுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஓட்டுக்காக காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``காவிரி விவகாரத்தில் எங்கள் தரப்பு கோரிக்கையை வலியுறுத்துவதாக தமிழக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்யாமல் மக்களுக்குத் தேவையானது என்ன என்பதையே பார்க்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மக்களுக்காக அமைத்தே தீர வேண்டும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு முன்னரே அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். 

மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. மத்திய அரசு நினைத்தால் செய்யலாம். அரசியலுக்காக தற்கொலை வார்த்தையைப் பயன்படுத்துவது பித்தலாட்டம். மேலாண்மை வாரியத்துக்காக ராஜினாமா செய்தால் அதனை நான் பாராட்டுவேன். கர்நாடக தேர்தலுக்காகத்தான் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. வரும் ஞாயிற்றுகிழமை ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டக் களத்துக்குச் செல்கிறேன். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் போதுமான அளவு பணத்தை சம்பாதித்துவிட்டனர். இனிமேலாவது மக்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும். போபாலில் நடந்தது போல தூத்துக்குடியில் நிகழ்ந்துவிடக் கூடாது" என்றார்.