வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (30/03/2018)

கடைசி தொடர்பு:18:05 (30/03/2018)

`அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா செய்வதில் மகிழ்ச்சி' - டெல்லியை அதிரவைத்த அ.தி.மு.க எம்.பி!

`காவிரி குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார்' என அ.தி.மு.க எம்பி முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் வகையில் காவிரிக்கான போராட்டத்தைத் தமிழகக் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி. முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "காவிரி மேலாண்மை வாரியத்துக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். நாடாளுமன்றத்தில் அவைத்தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன். வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யும் முடிவில் மாற்றமில்லை. காவிரி விஷயத்தை மோடி, அமித் ஷா இருவரிடமும் வலியுறுத்தினேன். காவிரிக்காகப் போராடிய ஜெயலலிதா அளித்த பதவியை ராஜினாமா செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்களுக்குத் தண்ணீர் கிடைக்காதபோது பதவி எதற்கு?. எம்.பி. என்ற முறையில் என்னால் இயன்றவரைப் போராடினேன். எனது முடிவு குறித்து சக எம்.பி-க்களுடன் பேசுவேன். எனினும் கட்சித் தலைமை கோரினால் ராஜினாமா முடிவு குறித்து ஆலோசிப்பேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க