'வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்' - ஸ்டாலின் அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின்

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் அடுத்தகட்டமாக நேற்று 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மத்திய அரசுக்கு எதிரான பதாகையை ஏந்தியவாறு கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, மத்திய அரசு, ஆளும் அ.தி.மு.க அரசின் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தி.மு.க அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து, இன்று மு.க ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், `வருகிற 5-ம் தேதியில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகள் மட்டுமல்லாமல் மற்ற கட்சி தலைவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். அதேபோல், வணிகர்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஆதரவு வேண்டும்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், `தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக வருகிற ஏப்.,3-ம் தேதியில் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் அழைப்பு விடுத்திருந்து. இந்த தேதியைமாற்றி, நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜாவிடம் வைத்துள்ளோம். அவரும், பரீசிலிப்பதாகச் சொன்னார். மேலும், காவிரி உரிமையை மீட்பதற்காக, காவிரி டெல்டா பகுதியில் இருந்து விழிப்புணர்வு பயணத்தை அனைத்துக்கட்சி தலைமையில் நடத்த உள்ளோம். இதுகுறித்து பின்னர், கலந்து ஆலோசிக்கப்படும்' எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!