Published:Updated:

பெங்களூரு திகுதிகு காட்சிகள்!

அது நல்லமநாயுடு கொண்டு வந்து வைத்தது!

பெங்களூரு திகுதிகு காட்சிகள்!

அது நல்லமநாயுடு கொண்டு வந்து வைத்தது!

Published:Updated:
##~##

'சட்டம் ஓர் இருட்டறை’ என்பது ஊடகங்களுக்கு மட்டும்தானோ? ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிமன்றத்துக்குள் உள்ளே அரங்கேறிய அத்தனை காட்சிகளும் மீடியாக்களின் வெளிச்சத்தில் துளிகூடப் படவே இல்லை! 

கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜரானார். இந்தச் செய் தியை லைவ் பண்ண இந்தியாவின் மீடியாக்கள் எல்லாம் பெங்களூரு நோக்கிப் படையெடுத்தன. ஆனால், பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி ஒரு கி.மீ. தூரத்திலே நிறுத்திவைக்கப்பட்டனர். இருந் தும், உள்ளே அரங்கேறிய வெளிவராத காட்சிகளை அருகில் இருந்து பார்த்த சிலர் மூலமாக நம்முடைய கவனத்துக்கு வந்தன. அவை இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வெளியில் பார்க்கிற ஜெயலலிதாவுக்கும், நீதிமன்றத்தில் பார்த்த ஜெயலலிதாவுக்கும் அவ்வளவு வித்தியாசம். மிக அமைதியாகப், பொறுமையாகப் பேசினார். ஒவ்வொரு கேள்விக்கும் நிறுத்தி...

பெங்களூரு திகுதிகு காட்சிகள்!

நிதானமாக ஆங்கிலத் தில் தெளிவாகப் பதில் சொன்னார். சில கேள்விகளுக்கு மட்டும் சிரித்தபடி பதில் சொன் னார். சில சமயங்களில் குரலை உயர்த்திப் பேசினார்.  ஆனால், விநாடி வினா மாதிரி உடனுக்குடன் பதில் சொன்னார்.  

நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் குரல் மென்மையானது. அதனால் அவர் கேட்கும் கேள்வி, குற்றவாளிக் கூண்டுக்குள்  உட்கார்ந்து இருக்கும் ஜெயலலிதாவுக்கு கேட்காது என்பதால், நீதிபதிக்கு முன்னால் வந்து அமர்ந்து கேட்க வசதியாக கோர்ட் எழுத்தரின் பக்கத்தில் வந்து ஜெயலலிதா உட்கார்ந்தார். அப்போது அவருக் காக சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட எஸ் டைப் ஒயர் இருக்கை தரப்பட்டது.  

ஒவ்வொரு கேள்வி முடியும் அதே நிமிடத்தில், ஜெயலலிதாவிடம் இருந்து கணீர் கணீர் எனப் பதில்கள் வந்து விழுந்தன. ஆனால், நிறையக் கேள்விகளுக்கு அவரின் பின்னால் இருந்து வழக்கறிஞர் பி.குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், வேகமாகப் பதில்களைத் தேடி... மெதுவாகச் சொல்வதும், 'யெஸ்... நோ...’ என சொல்வதும், சைகை களைக் காட்டுவதுமாக உதவினர். ஜெயலலிதாவும், பல கேள்விகளுக்கு வழக்கறிஞர்களின் முகங்களைப் பார்த்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு பதில் அளித்தார்.

போயஸ் கார்டன் வீட்டை புதுப்பித்தது, ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், கொடநாடு எஸ்டேட், திருநெல்வேலியில் வாங்கப்பட்ட நிலங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்தது... எனப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. முதல் நாள் கேட்கப் பட்ட 379 கேள்விகளுக்குப் பெரும்பாலும் 'ஐயம் நாட் அவேர் ஆஃப் தட்’ எனப் பதில் அளித்தார். 'ஐ டோன்ட் நோ’ என்று கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவருக்கு வழங்கப்பட்ட காசோலை, பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட சில கேள்விகளுக்கு மட்டும் விரிவாகப் பதில் சொன்னார். உண்மையில் அவரது ஆங்கிலப் புலமையை எண்ணி அனைவரும் வியந்திருக்க வேண்டும்.

முதல் நாள் மதிய இடைவேளை வரை 112 கேள்விகள் மட்டுமே கேட்க முடிந்தது. எனவே, நேரத்தைச் சேமிக்க இரண்டு மூன்று கேள்வி களை ஒன்றாகச் சேர்த்து நீதிபதி கேட்க ஆரம்பித்தார். அப்போதுதான் ஜெயலலிதா ரொம்பவும் சிரமப்பட் டார். இதைப் பார்த்த ஜெ-யின் வழக்கறிஞர், தனித் தனிக் கேள்வி யாகவே கேளுங்கள் என நீதிபதியிடம் விண்ணப்பித்தார். அதற்கு நீதிபதி மறுத்துவிட்டார். போயஸ்

பெங்களூரு திகுதிகு காட்சிகள்!

கார்டன் வீட்டைப் புதுப்பிக்கப் பயன்படுத்திய விலை உயர்ந்த தேக்கு, டைல்ஸ் பற்றிய கேள்விகளுக்கு, 'கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எனக்கு எதிராக நல்லம்ம நாயுடு என்ற அதிகாரி, தவறான மதிப்பீடுகளைச் செய்து என் மீது தேவை இல்லாத அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள், அத்தனையையும் மிகைப்படுத்தியே சொல்லி இருக்கிறார்கள்’ என விரிவாகப் பதில் அளித்தார். பின்னர் அவர் சொன்ன பதில்களைத் தன் கைப்படவே நீதிபதி மல்லிகார்ஜுனையா தனித் தனி பேப்பர்களில் எழுதினார். 379 கேள்விகளுக்கும் 379 கையெழுத்துகளைப் போட்டார். இதற்கே அரை மணி நேரத்துக்கு மேலானது. லஞ்ச் நேரம் தவிர்த்து விசாரணை நடந்த ஐந்தரை மணி நேரமும் தண்ணீர்கூட குடிக்காமல் முழு ஒத்துழைப்பு அளித்தார் ஜெயலலிதா...'' என்று முதல் நாள் சம்பவங்களை விவரிக்கிறார்கள்.

''இரண்டாம் நாள்... அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, 'உங்களுக்கு கர்நாடக போஸீஸ் இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. ஆனாலும், பரப்பன அக்ரஹாராவைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஊரடங்கு போடப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் ரொம்ப அவதிப்படுகிறார்கள்...’ எனச் சொல்ல, வழக்கறிஞர் பி.குமார் பேச எழுந்தார். அவரை அமரச் சொல்லிவிட்டு ஜெயலலிதாவே, ''எனக்கு  விளையாட்டாக ஒன்றும் பாதுகாப்புக் கொடுக்கவில்லை. எனது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து உண்டு. அது மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் இயங்கி வந்த தமிழ்த் தீவிரவாத அமைப்புகளை அடியோடு ஒழித்திருக்கிறேன். தேசிய அளவில் நக்ஸலைட், மாவோயிஸ்ட்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால், அவர்களாலும் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது...'' எனப் பொறிந்து தள்ளிவிட்டார்.  

முதல் நாளைவிட இரண்டாம் நாள் சற்றுப் பதற்றமாகவே காணப்பட்டார் ஜெயலலிதா. காரணம், சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை அபாய கண்டமாகப் பார்க்கப்படுவது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம், விலையுயர்ந்த வாட்ச்சுகள், காலணிகள், புடவைகள்,  உடைகள் ஆகியவைபற்றிய கேள்விகளும், அவைபற்றிய மதிப்பீடுகளும்தான். எனவே, 'இவை எல்லாம் எங்கிருந்து வாங்கப்பட்டன? எதற்காக வாங்கப்பட்டன? எப்படி வாங்கப்பட்டன?’ ஆகிய கேள்விகளை நீதிபதி  கேட்டார்.

'உங்களிடம் இருந்து 24 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு இருக்கிறதே?’ எனக் கேட்டு முடிக்கும் முன்னே, 'என்னிடம் 21,000 கிராம் தங்க நகை மட்டுமே இருந்தது. நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். பிரபல நடிகையாக இருந்து சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கியவை. அவை அத்தனையும் புதிதாக வாங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அது சுத்தப் பொய். என்னிடம் இருந்த பழைய நகைகளை உருக்கிச் செய்தது. எனது நகைகளை மதிப்பிட்ட தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடு வேண்டும் என்றே என் மீது பழி போட்டுள்ளார். அதே போல, எங்கிருந்தோ கொண்டுவந்த நகைகளை என் வீட்டில்வைத்துப் படம் எடுத்து எனது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறி, பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு என் பேருக்குக் களங்கம் ஏற்படுத்தி இருக்கிறார்’ என காரசாரமாகப் பேசினார். அதே போல, 918 வாட்ச்சுகள் பற்றிய கேள்விக்கு, 'என்னிடம் இருந்த பழைய வாட்ச்சுகளையும் புதிய வாட்ச்சுகளாக மதிப்பிட்டு இருக்கின்றனர். ஒருவர் எப்படி அவ்வளவு வாட்ச்சுகளையும் பயன்படுத்த முடியும்?’ என எதிர்க் கேள்வி கேட்டு மடக்கினார். 914 புடவைகள், 6,195 சுடிதார் மற்றும் இரவு உடைகள்பற்றிய கேள்வியை நீதிபதி கேட்க, 'அவர்கள் சொல்வதுபோல் நூற்றுக்கணக்கான புடவைகள் என்னு டையவை அல்ல. அவை அனைத்தும் அவர்களே கொண்டுவந்து என் வீட்டில்வைத்தவை’ என அழுத்தமாகச் சொன்னார். மேலும், 'நான் அரசியலுக்கு வந்து எதையும் புதிதாக சம்பாதிக்கவில்லை. ஏற்கெனவே சம்பாதித் ததுதான்!’ என ஜெயலலிதா சொன்னதையும் நீதிபதி குறித்துக் கொண்டார்.

சிக்னோ என்டர்பிரைசஸ், ஜெ.ஜெ. டி.வி, ஜெ. ஜெ. குரூப் ஆஃப் கம்பெனிஸ் உள்ளிட்ட கம்பெனிகளில் உள்ள ஷேர் பற்றிய கேள்விக்கு, 'நான் முழு நேர அரசியலில் இருக்கிறேன். அந்தந்த கம்பெனிகளின் அன்றாடச் செயல் கள்பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. நான் வெறும் சைலன்ட் பார்ட்னர் மட்டுமே’ எனப் பதில் அளித்தார்.

மூன்றரை மணி ஆனபோது, 'மேடம் களைப்பாக இருக்காங்க. நேரமும் ஆகிவிட்டது. இப்போது பதில்களைப் படித்துப் பார்த்துக் கையெழுத்துப் போட ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும்’ என வழக்கறிஞர் பி.குமார் கூற, 'இல்லை... நேற்று போல் ஒவ்வொரு கேள்வி-பதிலுக்கும் ஒரு பக்கம் என்று ஒதுக்காமல், இன்று தொடர்ச்சியாகக் கேள்வி-பதில்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆகவே கேள்விகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு பக்கத்துக்கு ஒரு கையெழுத்துவீதம் போட்டால் போதும்!’ என நீதிபதி சொன்னார். முதல் நாளில் 379 கேள்விகளும் இரண்டாம் நாளில் 188 கேள்விகளுமாக மொத்தம் 567 கேள்விகள் கேட்கப்பட்டன.'' என்றும் சொல்கிறார்கள்.

அடுத்து நவம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக ஜெயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மறுபடியும் முதல்ல இருந்தா..?

- இரா.வினோத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism