Published:Updated:

கம்பிக்குள் இருந்து வருவாரா கனிமொழி?

பாட்டியாலா பரபர!

கம்பிக்குள் இருந்து வருவாரா கனிமொழி?

பாட்டியாலா பரபர!

Published:Updated:
##~##

டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனியின் முகத்தில் டென் ஷனைப் பார்க்கவே முடியாது. எல்லாவற்றையும் சிரித்த முகத்தோடு கேட்பார்... அமைதியாகவே பதிலும் கொடுப்பார். ஆனால், அவர் கடந்த 22-ம் தேதி 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 14 குற்றவாளிகள் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது குற்றப்பதிவு செய்து உத்தரவு இட்டபோது, எரிமலைக் குழம்பாக வெடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனை ஆவேசத்துடன் இருந்தார். 

சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரி கையை முழுமையாக ஆராய்ந்து, இரு தரப்பு வாதங்களையும் எடுத்துக்காட்டி, பல்வேறு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, 456 பக்கங்களில் குற்றப் பதிவுகளைச் செய்தார் நீதிபதி ஷைனி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், வழக்கைக் கடுமையாக்க குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 409-வது பிரிவை சி.பி.ஐ. சேர்த்தது. நம்பிக்கை மோசடிக்கான இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படும். மேலும் குற்றவாளிகள் ஜாமீனில் செல்வதும் எளிதல்ல. அமைச்சர் மற்றும் அதிகாரிகளான ஆ.ராசா, சித்தார்த் பெஹூரா, ஆர்.கே.சந்தோலியா போன்றோர், அரசுக்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையைத் தவறான வழிகளில் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்த விவகாரத்தில் இந்தக் குற்றப் பிரிவை சி.பி.ஐ. சேர்த்தது. இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும், நீதிபதி ஷைனி அனைத்துக் குற்றவாளிகளும் இதற்கு உட்படுவதாக அறிவித்தார்.

கம்பிக்குள் இருந்து வருவாரா கனிமொழி?

ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவரோடு பணியாற்றிய சித்தார்த் பெஹூரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோரை... குற்றம் செய்யும் நோக்கத்துடன் தொலைத் தொடர்புத் துறைக்கு அழைத்து வந்தது; சுற்றுச்சூழல் துறையில் ராசாவுக்கு அறிமுகமான யுனிடெக் ரியல் எஸ்டேட் அதிபர் சஞ்சய் சந்திராவுக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கியது போன்றவற்றை நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதனால் சதித் திட்டம் தீட்டியது (120B), மோசடி செய்தது (420), மற்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுக்காமல் தடுத்து, தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதற்காகப் பொய்யாக ஆவணம் புனைந்தது (468), இது உண்மையான ஆவணம்தான் என்று காட்டியது (471) போன்ற இந்திய தண்டனைச் சட்டங்களோடு... கலைஞர் டி.வி-க்கு

கம்பிக்குள் இருந்து வருவாரா கனிமொழி?

200 கோடி கிடைக்கச் செய்ய ஆதாயம் அடைந்த வகையில் லஞ்ச ஊழல் சட்டத்தின்படி குற்றம் புரிய அந்த சட்டத்தின் {13(2), 13(1) பீ)} ஆகிய பிரிவுகளின்படியும் எல்லாக் குற்றவாளிகளும் தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என நீதிபதி அறிவித்தார்.

''இந்தப் பணம் முழுக்க முழுக்கத் தகுதியே இல்லாத ஸ்வான் டெலிகாமுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவே பெறப்பட்டுள்ளது. இது கடனாகக் கொடுக்கப்பட்டது என்று காட்ட, நீதிமன்றத்துக்கு வழக்கு வந்த பின்னர் இவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து உள்ளனர்...'' என்கிற குற்றச்சாட்டை வைத்து, 193 ஐ.பி.சி. தண்டனைப் பிரிவை சேர்த்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சி.பி.ஐ. வாதாடும் போதுகூட, ஆ.ராசா சார்ந்த கட்சி என்றே தி.மு.க-வை சில இடங்களில் குறிப்பிட்டது. ஆனால், நீதிபதி ஷைனி தனது குற்றப் பதிவில், ஆ.ராசா சம்பந்தப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கலைஞர் டி.வி-க்கு

கம்பிக்குள் இருந்து வருவாரா கனிமொழி?

200 கோடி சட்ட விரோதமாக லஞ்சம் [illegal gratification]  கொடுக்கப்பட்டதாகவே குறிப்பிட்டார். நீதிபதி ஷைனி இந்த வழக்கில், சி.பி.ஐ-யையும் தாண்டிக் கடுமையாகவே இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் போன்றவர்களும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாக ஆ.ராசா சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட்டார். இதே மாதிரி ஸ்பெக்ட்ரம் மதிப்பை உயர்த்த வேண்டாம் என்றும் மற்றும் இதனை ஏலம்விடத் தேவை இல்லை என்று டிராய் (தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) சொன்னதாகவும் கருத்துகளை முன்வைத்தார். ஆனால், நீதிபதி அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றப் பத்திரிகையின் 'கட் அண்ட் பேஸ்ட்’ என்றே 'குற்றப் பதிவை’ச் சொல்லலாம்.

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை அடுத்து வழக்கின் அடுத்தக் கட்டம் வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கேட்கும் படலம்தான் அது. உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி ஜாமீன் கேட்டபோது, 'குற்றச்சாட்டு பதிவு முடிந்ததும் சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்’ என்ற அனுமதியை ஏற்கெனவே கொடுத்து இருந்தது. அந்த அடிப்படையில் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஷைனி முன் இந்த மனு கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. அடக்கி வாசித்ததுதான் ஆச்சர்யத்துக்கு உரியது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதற்கான தீர்ப்பை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

'சி.பி.ஐ. தரப்பு தனது வாதங்களில் கனிமொழியின் ஜாமீனைக் கடுமையாக எதிர்க்காததால், அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்றே நினைக்கிறோம். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில்... ஜாமீன் கேட்பது குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் உரிமைதான்!'' என்று கனிமொழி தரப்பு இப்போது சொல்ல ஆரம்பித்து உள்ளது. அப்படியே ஜாமீன் கிடைத்தாலும் கனிமொழி டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றம் விதிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

'ஜாமீன் மனுவை எதிர்த்து சி.பி.ஐ. சரியாக வாதாடவில்லை என்று சுவாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு போடத் தயாராக இருக்கிறது’ என்றும் சிலர் சொல்லி, பீதியைக் கிளப்ப ஆரம்பித்துள்ளனர். எனவே, கனிமொழி வெளியே வந்தால் மட்டுமே, இனி நம்மால் எதையும் நம்ப முடியும்!

- சரோஜ் கண்பத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism