காவிரி விவகாரம்: சென்னையில் பழனிசாமி, பன்னீர் செல்வம் உண்ணாவிரதம்..! 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, அ.தி.மு.க சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் இன்று நடைபெற்றுவருகிறது. 

உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவருகிறது. மேலும், மேலாண்மை வாரியம் அமைக்க, மேலும் 3 மாதம் அவகாசம் வேண்டும் எனவும், ஸ்கீம் வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. இதை எதிர்த்து, மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, வரும் 9-ம் தேதி விசாரணை செய்யப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் எனத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க சார்பிலும் மத்திய அரசைக் கண்டித்து ஒருநாள் உண்ணாவிரதம் நடக்கும் என சமீபத்தில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். 

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே வெளியான உண்ணாவிரதப் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறாமல் இருந்த நிலையில், திடீரென இருவரும் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். இதேபோல, வணிகர் சங்கப் பேரமைப்பின் சார்பில், காவிரி மேலாண்மை வாரியத்துக்காக இன்று கடையடைப்புப் போராட்டமும் தொடங்கியுள்ளது. இதனால், கோயம்பேடு உள்ளிட்ட  பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!