சூரப்பா( VC Of Anna University) நியமனம் ஏன்? தமிழிசையின் அடடே விளக்கம் | Why Surappa Appointed As VC Of Anna University - Explains Tamilisai Soundararajan

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (06/04/2018)

கடைசி தொடர்பு:12:55 (06/04/2018)

சூரப்பா நியமனம் ஏன்? தமிழிசையின் அடடே விளக்கம்

துணைவேந்தர் நியமனத்தில் பாகுபாடு காட்டப்படவில்லை என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழிசை

கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குக் கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். ஏற்கெனவே, சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தற்போது தமிழகக் கட்சிகளிடம் எதிர்ப்புகளை உண்டாக்கியுள்ளது. 

இந்நிலையில், பாஜக நிறுவிய நாளையொட்டி அதன் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பாஜக அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  ``இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் மாற்றம் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தை போராட்டக் களமாக வைத்துக்கொள்ளவே பலரும் நினைக்கிறார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.கவால் மறுக்கப்பட்ட காவிரி, பா.ஜ.க ஆட்சியில்தான் பாய்ந்தோடப் போகிறது. அதற்கு சில வாரங்கள் ஆகும். 

தமிழகத்தின் உரிமையைத் தொலைத்தவர்களே, நடைபயணம் செல்கிறேன், ஆர்ப்பாட்டம் செய்கிறேன் எனக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். மக்கள் உணர்வுகளோடு நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். பல்கலைக்கழகங்களைக் காவி மயமாக்கவில்லை. கல்வி மயமாக்கவே முயற்சி செய்கிறோம். சூரப்பாவை நியமித்துள்ளதை அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பினர் வரவேற்றுள்ளனர். துணைவேந்தர் நியமனத்தில் பாகுபாடு காட்டப்படவில்லை. பல்கலைக்கழகங்களுக்குள் உங்கள் அரசியலைப் புகுத்தாதீர்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க