காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கும் - தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் | Stalin Announces Rally For Cauvery Management Board Held on Tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (06/04/2018)

கடைசி தொடர்பு:16:53 (06/04/2018)

`இரண்டு குழுக்களாகக் காவிரி உரிமை மீட்புப் பயணம்' - ஸ்டாலின் அறிவிப்பு!

`இரண்டு குழுக்களாகக் காவிரி உரிமை மீட்புப் பயணம்' - ஸ்டாலின் அறிவிப்பு!

'நாளை, திருச்சி முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கும்' என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், நேற்று நடந்த முழுஅடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றது.  இவ்விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அதில்,  ``முழு அடைப்புப் போராட்டம் வரலாறு காணாத அளவில் வெற்றிபெற்றுள்ளது. இதற்குத் துணை நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கெனவே நடந்த கூட்டத்தில், சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி காவிரி உரிமை மீட்புப் பயணத்தை டெல்டா பகுதியில் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. அதை எப்படி நடத்துவது என இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

அதன்படி, இரு குழுக்களாகப் பிரிந்து, காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்துவது என முடிவுசெய்யப்பட்டு, திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்து ஒரு பயணமும்,  வரும் 9-ம் தேதி, அரியலூர் மாவட்டத்திலிருந்து இன்னொரு பயணமும் புறப்படும். இதில், அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். எஸ்.சி, எஸ்.டி பாதுகாப்புச் சட்ட விவகாரத்தில், 16-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

ஸ்டாலின்

காவிரிப் பிரச்னைக்காகப் போராடிய எங்கள்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எந்த வழக்கையும் சந்திக்கத் தயார். காவிரிப் பிரச்னையில் எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத்  தயாராக இருக்கிறோம்.  ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. போட்டியை ஏற்பாடுசெய்துள்ளவர்கள், தமிழர்களின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்" என்றார் .

நீங்க எப்படி பீல் பண்றீங்க