`மோடியைப்போல் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் யாரும் இல்லை' - சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

`மோடியைப்போல் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் யாரும் இல்லை' - சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

கறுப்புக்கொடி போராட்டம் என்பது பிரதமருக்கு எதிரானது அல்ல, தமிழர்களுக்கு எதிரானது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். 

பொன்.ராதாகிருஷ்ணன்

திருச்சி மாவட்டம், முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் இன்று தொடங்கவுள்ளார். இதில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில், ஸ்டாலினின் இந்த நடைப்பயணத்தை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,   ``தி.மு.க-வினரின் போராட்டம் தமிழர்களுக்காகவா அல்லது கூட்டணிக் கட்சியினருக்காகவா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேஷம் போடுகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் தமிழகத்தில் தொழில்வாய்ப்பு குறையும். ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொள்வது காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அல்ல. திசை தெரியாமல் சென்றுகொண்டிருக்கிறார்கள். இது அரசியலுக்காக நடத்தப்படும் நடைப்பயணம். பெங்களூருவை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டால் ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருப்பேன். 

கர்நாடக காங்கிரஸுக்கு ஆதரவாகச் சோனியா, ராகுல் செயல்பட்டுவருகின்றனர். இதைத் திருநாவுக்கரசர் கேட்கமாட்டார். தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமாட்டேன் என சித்தராமையா கூறுகிறார். இதை, காங்கிரஸ் தலைவர்கள் கைதட்டி ரசிக்கின்றனர். ஸ்டாலினும் காங்கிரஸ் தலைவர்களும் மிக மோசமான முறையில் தமிழர்களை ஏமாற்றிவருகின்றனர். கர்நாடகாவைப் பொறுத்தவரை மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வரக் கூடாது. தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராகத் தி.மு.க கறுப்புக்கொடி காட்டப்போவது தமிழர்களுக்கு எதிரானது. மோடியைத் தவிர, இதுவரை வந்த பிரதமர்களில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்தவர் யாரும் இல்லை. இதுவரை நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வேண்டாமா. தமிழர்களை முட்டாளாக்கி 1967-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. 50 வருஷமா தமிழர்களை ஏமாற்றிவருகிறார்கள். இனிமேல் அது நடைபெறாது. நாங்களும் தமிழர்கள்தான். தமிழர்கள் வாழ்வில் நாங்கள் மாற்றத்தைக் கொண்டுவருவோம்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!