Published:Updated:

“வால்மீகி சிலை இங்கே எதற்கு?”

“வால்மீகி சிலை இங்கே எதற்கு?”
பிரீமியம் ஸ்டோரி
News
“வால்மீகி சிலை இங்கே எதற்கு?”

வள்ளுவரைக்கூடத் தெரியாத வட இந்திய சாமியார்கள்!சர்ச்சை

வான்புகழ் வள்ளுவரை ஹரித்துவார் கங்கைக் கரை பூங்காவில் கிடத்திவிட்டு கறைபட்டு நிற்கிறது வட மாநிலம். தென் எல்லையாம் குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் உலகப் பெரும் கவிஞனுக்கு எங்கள் மாநிலத்தில் உன்னதம் செய்யப் போகிறோம் என்று கிளம்பியவர்கள், அதைச் செய்துகாட்டுவதற்கு முதுகெலும்பு இல்லாமல் போனதன் விளைவு, மூடிக் கிடத்தப்பட்டு உள்ளது அறிவு ஆசான் சிலை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அறிவுப் பகைமை தொடரும் என்பதற்கு உதாரணம் இது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ பி.ஜே.பி எம்.பி-யான தருண்விஜய் ஏற்பாடு செய்தார். இதற்காகத் தமிழகத்தில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தயாரிக்கப்பட்டு, ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டது.

“வால்மீகி சிலை இங்கே எதற்கு?”

ஹரித்துவாரில் உள்ள ‘சங்கராச்சாரியார் சவுக்’ பகுதியில் சிலையை நிறுவ உத்தரகாண்ட் அரசு அனுமதி அளித்திருந்தது. ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், 28-ம் தேதி சில சாதுக்கள் அந்த இடத்தில் சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

என்ன நடந்தது என உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவ்வைத்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணமாச்சாரியிடம் கேட்டோம். ‘‘விழாவுக்கு முதல் நாள் 28-ம் தேதி இரவு சாதுக்கள் வந்தனர். ‘இங்கே வால்மீகி சிலை எல்லாம் வைக்கக் கூடாது’ என்றனர். ‘இது திருவள்ளுவர் சிலை’ என்று நாங்கள் சொன்னோம். ‘திருவள்ளுவர் சிலையா, தென்மாநிலத்தில் இருந்து கொண்டு வந்திருக்கிறீர்களா? இங்கே வைக்கக் கூடாது’ என்றனர். அங்கே, பூரி சங்கராச்சாரியாரின் 3 அடி சிலை இருக்கிறது. அதைவிடப் பெரியதாக 12 அடி உயர திருவள்ளுவர் சிலையை அங்கு வைப்பதை சாதுக்கள் ஏற்கவில்லை. எதிர்ப்பால், சிலைவைக்கக் கொடுக்கப்பட்ட அனுமதியை மாநில அரசு ரத்து செய்தது. மேலும், கும்பமேளா அலுவலகத்தின் பின்னால் (டாம் கோதி) சிலையைத் தற்காலிகமாக வைக்க அனுமதித்தது. அங்குதான், 29-ம் தேதி விழா நடைபெற்றது. வைக்கப்பட்ட சிலையை சிலர் அகற்றி மூடிவைத்திருக்கின்றனர். சிலையை மரியாதையான உரிய இடத்தில் வைக்காதது தவறுதான். இதனை மதப்பிரச்னையாக நாங்கள் கருதவில்லை. திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் அலுவலகத்தில் மனுக்கொடுத்து உள்ளோம்” என்றார்.

“வால்மீகி சிலை இங்கே எதற்கு?”

அகில இந்திய தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் முகுந்தன் மற்றும் உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகி ஜோசப், “சிலை நிறுவுவதற்கான  விழாவை முறையாகத் திட்டமிடாததால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையைவைக்க உரிய இடம் வழங்க வேண்டும் என உத்தரகாண்ட் முதல்வரிடம் கோரியுள்ளோம்” என்றனர்.

பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் இல.கணேசன், “திருவள்ளுவர் மீது மதிப்பு வைத்துள்ள அனைவருக்குமே இது வேதனை. தருண்விஜய் இந்த விவகாரத்தில் உரிய முறையில் தலையிட்டு சிலையை உரிய இடத்தில் அமைக்க வேண்டும். மற்றபடி ஒட்டுமொத்தமாக வட நாட்டவர்கள் திருவள்ளுவருக்கு எதிரானவர்கள் என்று சிந்திக்க முயற்சிப்பது நல்லதல்ல” என்றார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கெளரவத்தலைவர் அருணன், “தமிழ், திருவள்ளுவர் என தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளர்க்க ஒரு தந்திரவாதியாக தருண்விஜய் செயல்படுகிறார். இவருடைய தந்திரத்தை ஹரித்துவாரில் உள்ள மதப் பழமைவாதிகள், சாதுக்கள் ஏற்கவில்லை. ‘ஆதிசங்கரருக்கு இணையாக எப்படி ஒரு சிலையை இங்கே வைக்கலாம்’ என்ற பழமைவாதச் சிந்தனையில் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திருவள்ளுவருக்கு அங்கு மரியாதை கிடைப்பது சிரமம். எனவே, சிலையை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து வைத்துவிடலாம்” என்றார். 

“வால்மீகி சிலை இங்கே எதற்கு?”

சர்ச்சைகளை அடுத்து இப்போது திருவள்ளுவர் சிலையை, கும்பமேளா அலுவலக வளாகத்திலேயே நிற்க வைத்துள்ளனர். மேலும், ‘திருவள்ளுவர் சிலையை முழு மரியாதையுடன் ஒருவாரத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர்  ஹரீஷ் ராவத் கூறியுள்ளார். 150-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வள்ளுவருக்கு வட நாட்டில் கிடைத்த மரியாதை இவ்வளவுதான். ‘‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்’’ - என்று சொன்னவரை எப்படி அவர்கள் ஏற்பார்கள்?

- கே.பாலசுப்பிரமணி