Published:Updated:

சிஷ்யா... கபாலி... மகிழ்ச்சி!

சிஷ்யா... கபாலி...  மகிழ்ச்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
சிஷ்யா... கபாலி... மகிழ்ச்சி!

சந்தோஷம்

சிஷ்யா... கபாலி...  மகிழ்ச்சி!

சென்னை அடையாறில் உள்ள ‘சிஷ்யா’ பள்ளி மாணவர்கள் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் போனார்கள்.

இது ஒரு செய்தியா?

அப்படிப்போன மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள் என்றால், அதுவும் செய்தியா எனக் கேட்கக் கூடாது. சிஷ்யா பள்ளி மாணவர்களை தலைமைச் செயலகத்தில் தனது அலுவலகத்துக்கு அழைத்து உரையாடி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

முதல்வர் அறையில் ஜெயலலிதாவை மாணவர்கள் ஒவ்வொருவராகச் சந்தித்தனர். அவர்களுக்கு dairy milk சாக்லேட்களைக் கொடுத்தார். ஜெயலலிதாவைச் சந்தித்ததே இன்ப அதிர்ச்சியான மாணவர்களுக்கு அவரின் கையில் இருந்து சாக்லேட் வேறு கிடைத்ததும் அவர்களின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பு. ஜெயலலிதா சிரித்தபடியே சாக்லேட்களை நீட்ட... அதை வாங்கிய மாணவர்கள் மறக்காமல் ‘தேங்ஸ்’ என்றார்கள். சாக்லேட் கொடுத்தபோது ஒரு மாணவிக்கு மட்டும் ஜெயலலிதாவின் முத்தம் கிடைத்தது. மாணவர்களோடு வந்த டீச்சர்கள் மூன்று பேருக்கும் சாக்லேட்களைக் கொடுத்தார் ஜெயலலிதா. அதன்பிறகு, மாணவர்களோடு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். அதில், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவும், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனும் இருந்தார்கள். மாணவர்களின் யூனிஃபார்ம் நிறத்திலேயே ராம மோகன ராவும் டிரஸ் போட்டிருந்ததால், அவரும் மாணவர்போலவே இருந்தார். 

சிஷ்யா... கபாலி...  மகிழ்ச்சி!

முதல்வர் சேம்பருக்குச் செல்லும் வராண்டாவில்தான் குரூப் போட்டோ எடுக்கும் வைபவம் நடந்தது. ரொம்ப ஜாலி மூடில் இருந்த ஜெயலலிதா, மாணவர்களிடம் உரையாற்றினார். “உங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததற்கு ‘மகிழ்ச்சி’ அடைகிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வருகை தந்துள்ளீர்கள். உங்களுடன் கலந்துரையாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களைத் திறமைமிக்கவர்களாக உங்கள் ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளார்கள். உங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு இதுதான் சரியான தருணம். படிப்பு மட்டும் அல்லாமல் விளையாட்டிலும் உங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என அறிவுரை வழங்கினார் ஜெயலலிதா.

செய்தி முடிந்தது, மேட்டருக்கு வருகிறோம். அந்த மாணவர்கள் குழுவில் ‘கபாலி’ ரஜினியின் பேரனும், தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகனுமான யாத்ரா இருந்தார். அவர், இதே சிஷ்யா பள்ளியில்தான் படிக்கிறார். அவரும் ஜெயலலிதாவைச் சந்தித்தார். இந்த நிகழ்ச்சியை ஜெயா டி.வி மட்டுமே கவர் செய்தது. சந்திப்பு முடிந்ததும் யாத்ராவைத் தேடிப்பிடித்து அவரிடம் பேட்டியும் வாங்கியது ஜெயா டி.வி. “அம்மா சாக்லேட் கொடுத்தாங்க... வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சி” என ‘மகிழ்ச்சி’யாகச் சொன்னார் யாத்ரா.

சிஷ்யா... கபாலி...  மகிழ்ச்சி!

டெய்ல் பீஸ்

‘கபாலி’: இந்தப் படத்தின் டி.வி உரிமையை ஜெயா டி.வி வாங்கியிருக்கிறது. படத்தின் சென்னை விநியோகம் முக்கியப் புள்ளி ஒருவருக்குத் தரப்பட்டு இருக்கிறது. இந்தச் செய்திக்கும் மாணவர்கள் சந்திப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

சிஷ்யா: திரைப்புள்ளிகள், அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள் என ‘பிக் ஷாட்களின்’ பிள்ளைகள் படிக்கும் பள்ளிதான் சிஷ்யா. இங்கே 2019-ம் ஆண்டுக்கான எல்.கே.ஜி அட்மிஷன் முடிந்துவிட்டது. 2020-ம் ஆண்டுக்கான அட்மிஷன் விரைவில் தொடங்குமாம். குழந்தை கருவில் இருக்கும்போதே அட்மிஷன் போட்டுவிட வேண்டும்.

ஆர்.கே.நகர்:
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களும் அம்மாவைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்!

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி