Published:Updated:

பரீட்சையில் பிட்... ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பரீட்சையில் பிட்... ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...
பரீட்சையில் பிட்... ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...

சிக்கலில் மாணவர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
பரீட்சையில் பிட்... ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...

ரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ வகுப்புகளில் மாணவர்களை மாநில அளவில் அதிக மார்க் எடுக்கவைக்கப் பலவிதத் தந்திரங்களில் ஈடுபடும் ‘பிராய்லர் கோழி’ பள்ளிக்கூடங்களுக்கு இப்போது சிக்கல் வந்திருக்கிறது.

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த மார்ச் 14-ம் தேதி பிளஸ் டூ மாணவர்கள் வேதியியல் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். அங்கு, ‘மாஸ் காப்பியிங்’ நடப்பதாக வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் விரைந்து சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த ஆசிரியர்கள், ‘பிட்’ பேப்பர்களைத் தூக்கி வீசுமாறு மாணவர்களுக்கு சிக்னல் கொடுக்க... மாணவர்களும் பிட்டுகளை ஜன்னல் வழியாகத் தூக்கி வீசினர். அந்த பிட் பேப்பர்கள் எல்லாம், அங்கு சோதனைக்கு வந்த அதிகாரிகளின் தலைகள் மீது மழைபோல பொழிந்தன. அதைக்கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர். அந்த விவகாரம் இப்போது பூதாகரம் ஆகி இருக்கிறது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்களில் பேசினோம். “ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில், தேர்வுப் பணியில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் ‘மாஸ் காப்பியிங்’ நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக உண்டு. இந்த முறை, ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு கண்காணிப்புக்காக இணை இயக்குநர் கருப்பசாமி (தற்போது மெட்ரிக் பள்ளி இயக்குநர்) அனுப்பப்பட்டார். ஈரோட்டில் ஐடியல், ஆதர்ஸ் என்ற பிரபலமான தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளன. ஐடியல் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் டூ தேர்வை மாணவர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். அங்கு மாஸ் காப்பியிங் நடப்பதாகத் தகவல் வந்ததால் இணை இயக்குநர் கருப்பசாமி அந்தப் பள்ளிக்கு விரைந்தார். அப்போதுதான், அவரது தலையில் பிட் பேப்பர்கள் விழுந்தன. அதே சமயத்தில், இந்தக் களேபரம் எதுவும் தெரியாமல் மற்றொரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் பிட் பேப்பர்களை வெளிப்படையாக வைத்துத் தேர்வு எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆதர்ஸ் பள்ளியில் கணிதத் தேர்வில் மாஸ் காப்பியிங் நடந்ததையும் அவர் கண்டுபிடித்தார். இது தொடர்பாக அரசுத் தேர்வுத் துறைக்கு ஒரு ரகசிய ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறார். அதன் பிறகு நடந்த விவகாரம்தான் பிளஸ் டூ தேர்வுகளில் நடக்கும் உள்ளடி வேலைகளும், மோசடிகளும் வெளிச்சத்துக்கு வந்தன.

பரீட்சையில் பிட்... ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...

பிளஸ் டூ தேர்வு முடிந்தவுடன், திருச்சி மாவட்டம் லால்குடியில் ஒரு பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. வேதியியல், கணக்கு, உயிரியல் ஆகிய 3 பாடங்களில் ஒரு மாணவர் 200-க்கு 200 மார்க் வாங்கியிருக்கிறார். ஆனால், அந்த விடைத்தாளில் 3 மார்க், 5 மார்க், 10 மார்க் விடைகள் வேறு கையெழுத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், 5 மாணவர்களின் விடைத்தாள்களிலும் ஒரே மாதிரியான கையெழுத்து இருப்பதையும் ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர். இவர்களும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றிருந்தனர். இது தொடர்பாக, அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவியிடம் முறையிடப்பட்டது. பிறகு நடந்த விசாரணையில், அந்த 5 மாணவர்களும் மாஸ் காப்பியிங் சர்ச்சையில் சிக்கிய ஐடியல், ஆதர்ஸ் பள்ளிகளைச் சேர்ந்தவர்களின் விடைத்தாள்கள் என்பது தெரியவந்தது. அந்த விடைத்தாள்கள் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், 5 பேருடைய விடைத்தாள்களிலும் இருப்பது ஒரு நபருடைய கையெழுத்துதான் என்பது உறுதியானது. மேலும், அந்தப் பள்ளிகளில் பிளஸ் டூ தேர்வு நடந்தபோது, ஓர் அறையில் ஓர் ஆசிரியர் அந்தப் பாடங்களுக்கான விடைகளை எழுதி, பிறகு அந்த விடைத்தாள்களை மாணவர்களின் விடைத்தாள்களோடு இணைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அந்த விடைத்தாள்களில் இருந்த கையெழுத்துத் தங்களுடையது இல்லை என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணனிடம் இருந்து தேர்வுத் துறை அறிக்கை பெற்றது.

இந்த விவகாரம், பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் சபீதாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும், சட்டசபைத் தேர்தல் நெருங்கிய நேரம் என்பதால், அந்தப் பிரச்னையை வெளியே வராமல் அதிகாரிகள் மூடிமறைத்துவிட்டனர். தேர்தல் முடிந்த பின், ஐடியல் மற்றும் ஆதர்ஸ் பள்ளிகளில் தேர்வுப் பணியில் ஈடுபட்ட மாத்தூர் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நசீர், டி.ஜி.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சகாயராஜ், பவானி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உயிரியல் முதுநிலை ஆசிரியர் முருகன், இயற்பியல் ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோரைப் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சஸ்பெண்ட் செய்தார்” என்றனர்.

பரீட்சையில் பிட்... ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...

இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று சொல்லப்படுகிறது. பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுப் பணிகளில் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நான்கு ஆசிரியர்களும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதர்ஸ் மற்றும் ஐடியல் பள்ளிகளில் மாறி மாறித் தேர்வுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்த மோசடியில் முதன்மைக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

மேலும், பிளஸ் டூ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 5 மாணவர்களின் பெற்றோர்களின் பின்னணித் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

‘‘ஒரு மாணவனின் தந்தை வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். ஒரு மாணவியின் தாயார் ஆலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர். இன்னொரு மாணவரின் தாயார் செம்புளிச்சம்பாளையம் அரசுப் பள்ளியின் ஆசிரியர்” என்றும் சொல்கிறார்கள்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி ஆர்வலர்கள் சிலரிடம் பேசியபோது, “இந்தப் பள்ளிகளைப்போலவே அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் உள்ள ஐந்து தனியார் மெட்ரிக் பள்ளிகள் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை வளைத்துப் போட்டுக்கொண்டு இதைச் செய்கிறார்கள்” என்றனர்.

இதுதொடர்பாக ஐடியல் மற்றும் ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளிகளின் தாளாளர் சிவலிங்கத்திடம் பேசினோம். “கடந்த 35 ஆண்டுகளாகக் கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கவில்லை. அதிகாரிகள் வேண்டுமென்றே எங்கள் பள்ளியைப் பழிவாங்கும் நோக்குடன் செயல்படுகிறார்கள். தொழில் போட்டி காரணமாக பிற பள்ளி நிர்வாகத்தினர் எங்கள் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள்” என்றார்.

பரீட்சையில் பிட்... ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...

இது தொடர்பாக, அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவியிடம் பேசினோம். “முதற்கட்ட விசாரணையில், காப்பி அடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நான்கு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அதில் ஈரோடு, நாமக்கல் மாவட்டப் பள்ளிகளில் இதுபோன்ற முறைகேடுகள் குறித்து வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. பிளஸ் டூ தேர்வில் மோசடியில் ஈடுபட்ட அந்த இரு பள்ளிகளின் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ தேர்வுக்கான தேர்வு மையம் அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளது. விரைவில் அந்தப் பள்ளிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

கல்வியை ஒரு விற்பனைப் பொருளாக மாற்றியதன் விளைவு இது என்பதை ஆட்சியாளர்கள் உணர்வார்களா?

- வீ.மாணிக்கவாசகம், எம்.கார்த்தி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு