Published:Updated:

குழந்தைகள் விலை 6 லட்சம் - கடத்தல் நெட்வொர்க்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தைகள் விலை 6 லட்சம் - கடத்தல் நெட்வொர்க்
குழந்தைகள் விலை 6 லட்சம் - கடத்தல் நெட்வொர்க்

ஜூலை-30 மனிதர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தினம்Special ஸ்டோரிஅதிர்ச்சி

பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகள் விலை 6 லட்சம் - கடத்தல் நெட்வொர்க்

மிழ்நாட்டில் தினமும் கைக் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். ஏன் தெரியுமா? ஒரு குழந்தையின் விலை 6 லட்சம் ரூபாய்.

அதிர்ச்சியாக இருக்கிறதா? இதைவிட மேலும் சில அதிர்ச்சிகள் இதோ...

சில மாதங்களுக்கு முன், சென்னையில் நடைபாதை ஒன்றில் பெற்றோருடன் உறங்கிக்கொண்டு இருந்த விமல் என்கிற எட்டு மாதக் குழந்தை கடத்தப்பட்டது. அடுத்த சில நாட்களில், பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த சரண்யா என்ற ஒன்பது மாதக் குழந்தை கடத்தப்பட்டது. சென்னையில் நடைபாதைகளில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அடுத்தடுத்து மாயமானார்கள். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி இருந்த ஒரு காட்சியைப் பார்த்து போலீஸாரே அதிர்ந்துபோனார்கள். சென்னை வால்டாக்ஸ் சாலை நடைபாதையில் ஒரு தாய் தன் 10 மாதக் குழந்தையைத் தன் புடவையுடன் முடிச்சுப்போட்டு கட்டிவைத்து உறங்கியிருக்கிறார். நடைபாதை அருகே ஒரு கார் வந்து நிற்கிறது. அதில் இருந்து இறங்கிய ஒரு கும்பல், நைஸாக அந்த முடிச்சை அவிழ்த்து, தாய்க்குத் தெரியாமல் குழந்தையை அலேக்காகத் தூக்கிச் சென்றது.

மதுரை கே.கே.நகரில் உள்ள காப்பகம் ஒன்றில் ஒரு ஆண் குழந்தையை விற்பதற்கு முயற்சி நடப்பதாக போலீஸுக்கு தெரியவந்தது. போலீஸார், சாதாரண ஆட்களைப் போல, காப்பக நிர்வாகிகளைத் தொடர்புகொண்டபோது, குழந்தையின் விலை ரூ.6 லட்சம் என்று பேரம் பேசியுள்ளனர். கடைசியில் அந்தக் குழந்தை மீட்கப்பட்டு, காப்பக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச அளவில் சட்ட விரோதச் செயல்களுக்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்கள் உலகம் முழுவதுமே அதிகரித்து வருகின்றன. ஆனாலும், நம்முடைய மாநிலத்தில், நம்முடைய ஊரில் குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்களைக் கேள்விப்படும்போது, நம்முடைய பதற்றம் கூடுதலாகவே இருக்கிறது.

ஆண் குழந்தை விலை அதிகம்!

திருச்செந்தூர் வரும் பக்தர்களின் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ச்சியாக நடந்தன. கடத்தல் கும்பல் தலைவியான நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவரை சமீபத்தில் போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டன. ராஜம்மாளின் கடத்தல் கும்பல், ஆண் குழந்தைகள் என்றால் ஒரு லட்சம் ரூபாய், பெண் குழந்தைகள் என்றால் 60 ஆயிரம் ரூபாய் என பேரம் பேசி விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

திருச்சியில் சில மாதங்களுக்கு முன்பு, குழந்தைகளைக் கடத்தி வந்த ஒரு கும்பல் ரயில் நிலையத்தில் போலீஸாரைப் பார்த்ததும் பயந்து ஓடிவிட்டது. அவர்கள் கடத்தி வந்த மூன்று குழந்தைகள் ரயில் நிலையத்தில் அனாதைகளாக விடப்பட்டிருந்தனர். போலீஸார் அந்தக் குழந்தைகளை மீட்டனர். அதேபோல, திருச்சி மத்திய பஸ் நிலையத்தில், ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் போலீஸார் நெருங்கினர். அதை அறிந்துகொண்ட அந்தப் பெண், தான் வைத்திருந்த மூன்று வயதுக் குழந்தையை அங்கிருந்த துப்புரவுப் பெண் தொழிலாளர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு, ‘பாத்ரூம் போய்விட்டு வருகிறேன்’ எனச் சொல்லி மாயமாகிவிட்டார். அந்தக் குழந்தை எங்கிருந்து கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

குழந்தைகள் விலை 6 லட்சம் - கடத்தல் நெட்வொர்க்

தவிக்கும் பெற்றோர்!

தன்னுடைய இரண்டே முக்கால் வயது குழந்தை அஸ்வாக் அகமதுவை பறிகொடுத்துத் தவித்து வருகிறார், செய்யாறைச் சேர்ந்த சமியுல்லா. கடந்த பிப்ரவரி 27-ம் தேதி குழந்தைக் காணாமல்போனது. சமியுல்லாவிடம் பேசினோம். “எங்கள் வீட்டின் பக்கத்து போர்ஷனில் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தான். திடீரென, குழந்தையைக் காணவில்லை. செய்யாறு முழுவதும் தேடினோம். எங்குமே கிடைக்கவில்லை. ஐந்து மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. குழந்தையைக் காணாமல் இரவில் தூங்காமல் தவிக்கிறோம். தம்பி வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு என் மகள் இருக்கிறாள். அவளுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது. இரவு எவ்வளவு நேரம் ஆனாலும், தினமும் நான் வீட்டுக்கு வரும் வரை காத்திருந்து, என்னைப் பார்த்தவுடன், தம்பி எப்பப்பா வருவான் என்று என் மகள் கேட்கிறாள். அதுபோன்ற நேரங்களில் எங்களுக்கு நரக வேதனையாக இருக்கிறது. போலீஸார் இன்னும் தீவிரமாக விசாரணை நடத்தி விரைவில் என் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும். அதுவரை எங்களுக்கு எந்த நிம்மதியும் இல்லை” என்று கண்ணீர்விட்டார்.

பாலியல் தொழிலுக்காக...

தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். “மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் 2009-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியா முழுவதும் 30 லட்சம் பெண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். 1997-ம் ஆண்டுக்கும் 2004-ம் ஆண்டுக்கும் இடையேதான் 50 சதவிகிதம் அளவுக்கு பாலியல் தொழில் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. யாருமற்ற அனாதைகளாகும் பெண் குழந்தைகளையும், சிறுமிகளையும் மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு நிழல் உலக புரோக்கர்கள் கடத்திச் செல்கின்றனர். அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதேபோல, தமிழகத்தில் சென்னை, மதுரை, புதுக்கோட்டை, மாமல்லபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சில நகரங்களில் வெளிமாநிலப் பெண்கள் கடத்தி வரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு காவல் துறையில் உள்ள சிலரின் ஆதரவு உள்ளது” என்றும் அதிர்ச்சியோடு சொன்னார்கள்.

பிச்சை எடுக்க....

பிச்சை எடுக்க, விபசாரத்தில் ஈடுபடுத்த, குழந்தை இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ய, உடல் உறுப்புகளுக்காக, குழந்தைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்த, பணம் கேட்டு மிரட்ட எனப் பல்வேறு காரணங்களுக்காகப் பச்சிளம் குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் கடத்தப்படுகிறார்கள். சென்னை, மதுரை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில்தான் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன. இங்கிருந்து கடத்தப்படும் குழந்தைகள் 1,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்றனர்.

குழந்தைகள் விலை 6 லட்சம் - கடத்தல் நெட்வொர்க்

கடத்தல் தடுப்புப் பிரிவு!

3:1 என்ற அளவிலேயே காவல் நிலையங்களில் ஆட்கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. நீதிமன்றத்தின் உத்தரவுகள் அல்லது கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் முயற்சிகள் ஆகியவற்றின் பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இல்லாவிட்டால், ஆள்கடத்தல் வழக்குகளில் போலீஸார் அக்கறை காட்டுவது இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு அமைக்குமாறு 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி தமிழக டி.ஜி.பி-யால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பிரிவில் சமூகநலத் துறை பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் இருப்பார்கள். இதற்கு ஒரு இன்ஸ்பெக்டர் தலைமை வகிப்பார். இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், நான்கு போலீஸ்காரர்கள் இருக்க வேண்டும். இந்தப் பிரிவில் இருப்பவர்களில் 50 சதவிகிதம் பேர் பெண்களாக இருப்பார்கள். மாவட்டங்களில் எஸ்.பி., மாநகரங்களில் போலீஸ் கமிஷனர் இந்தப் பிரிவை கண்காணிப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தக் குழுக்கள் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்பது தெரியவில்லை.

குறையும் அனாதைக் குழந்தைகள்!

சென்னை சிவானந்தா குருகுலத்தின் நிர்வாகி எஸ்.ராஜாராமனிடம் பேசினோம். ‘‘10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தவறான உறவுமுறைகளால் பிறந்து அனாதை இல்லங்களுக்கு வரும் குழந்தைகள் சட்டப்படி தத்துக் கொடுக்கப்படும். இப்போது, பல காரணங்களால் அனாதைக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், குழந்தைகள் இல்லாத பெற்றோர் தத்துப் பெறுவதற்குக் கூட குழந்தைகள் இல்லை. எனவே, மருத்துவமனைகளில் ஏழை, எளியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பிளாட் பாரத்தில் பேருந்து நிலையங்களில் உறங்கும் பெற்றோரின் குழந்தைகளைக் கடத்திச் செல்கின்றனர். கடத்திச் செல்லும் குழந்தைகளைப் பல லட்சம் ரூபாய்க்கு விற்பதற்கு ஒரு பெரிய நெட் வொர்க்கே செயல்படுகிறது” என்றார்.

ஒருங்கிணைந்த நெட்வொர்க்!

குழந்தைக் கடத்தல் தொடர்பான வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் நடராஜனிடம் பேசினோம். “2011 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் இருந்து 1,500 குழந்தைகள் காணவில்லை என்றும், அவர்களில் 1,400 குழந்தைகளைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் போலீஸார் கூறுகின்றனர். கண்டுபிடிக்க முடியாத குழந்தைகள் 7 பேர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், போலீஸ் நிலையத்துக்கே வராமல் 20 சதவிகித வழக்குகள் இருக்கின்றன. ஒருங்கிணைந்த வகையில் ஒரு நெட்வொர்க் வைத்துத்தான் குழந்தைகளைக் கடத்துகின்றனர்” என்றார்.

- கே.பாலசுப்பிரமணி, செ.சல்மான், சி.ய.ஆனந்தகுமார், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்


குற்றவாளி போலீஸ்குமார்!

குழந்தைகளைக் கடத்தி வந்து திருச்சியில் திருட்டுத் தொழில் கற்றுக்கொடுக்கிறார்கள். பிறகு, அந்தக் குழந்தைகளை வட மாநிலங்களில் விற்றுவிடுகிறார்கள். இந்தக் கும்பலின் தலைவனான போலீஸ்குமார் உட்பட 15 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்தக் கும்பலால் இதுவரை 63 குழந்தைகள் கடத்தி வரப்பட்டு உள்ளன. அந்தக் குழந்தைகளுக்கு உடல் எங்கும் சூடு போட்டுள்ளனர். இவர்கள் பிடியில் இருந்து கடந்த சில மாதங்களில் 6 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடத்தல் மையங்கள்!

மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகே உள்ள பகுதிகளில் நீண்டகாலமாக வசிப்பவர்களில் சிலர், குழந்தைகள் கடத்தல் கும்பலின் தொடர்பில் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பகுதியைக் கண்காணித்தபடியே இருப்பார்கள். அனாதையாகத் தவிக்கும் குழந்தைகளைத் தூக்கிவந்து உடனே, கடத்தல் கும்பலுக்குத் தகவல் சொல்லி விடுவார்கள். அடுத்த சில மணி நேரங்களில் அந்தக் குழந்தைகள் பல கிலோ மீட்டருக்கு அப்பால் கடத்திச் செல்லப்படுகின்றன.

மீனாட்சியின் குழந்தை!

மதுரை மாவட்டம் பொம்மபட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி. 2013-ல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனை ஊழியர்போல் ஒரு பெண் வந்தார். ‘‘குழந்தையைப் பரிசோதிக்க டாக்டர் கேட்கிறார்’’ என்று குழந்தையை வாங்கிச் சென்றார். பிறகு, அந்தப் பெண் திரும்பி வரவில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. குழந்தையைக் கண்டுபிடித்துத் தரும்படி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். ‘உடனே குழந்தையை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என்று காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், மூன்று வருடங்களாகியும், இன்னும் மீனாட்சியின் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

542 பேருக்கு இழப்பீடு!

எக்ஸ்னோரா அமைப்பின் இளைஞர் பிரிவுத் தலைவர் கிருஷ்ணகுமார், “நாங்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளது. குழந்தைகள் காணாமல்போய், 7 ஆண்டுகளுக்கு மேல் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம், ஓர் ஆண்டு முதல் 5 ஆண்டுகள்வரை கண்டுபிடிக்க முடியாத குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் என இடைக்கால இழப்பீடு வழங்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால், 2011 முதல் 2015 வரை கடத்தப்பட்டு, கண்டுபிடிக்க முடியாத 542 குழந்தைகளின் பெற்றோருக்கு இந்தத் தொகை இழப்பீடாகக் கிடைக்கும்.”

3 மாதங்களில் 271 குழந்தைகள்...

* குழந்தைகள் காணாமல்போவது குறித்துக் கவனித்து நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

* 2016-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 271 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள் என்று சொல்கிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.

* பிறந்த குழந்தைகளைக் கடத்தும் சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளில்தான் 74 சதவிகிதம் நடக்கின்றன.

* இளம்வயதினரைவிட குழந்தைகள் கடத்தல்தான் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு