Published:Updated:

மருத்துவக் கல்விக்கு மனசு வைக்குமா அரசு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மருத்துவக் கல்விக்கு மனசு வைக்குமா அரசு?
மருத்துவக் கல்விக்கு மனசு வைக்குமா அரசு?

1018 / 1200 - அகதி மாணவியின் ஆசை!கோரிக்கை

பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் கல்விக்கு மனசு வைக்குமா அரசு?

மிழகத்தில் குடியேறியிருக்கும் அகதிகளின் பிள்ளைகள் 12-ம் வகுப்பில் 1,000-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தும் அவர்களால் மருத்துவம் சார்ந்த துறைகளில் படிக்க இடம் கிடைப்பதில்லை. காரணம், குடியுரிமை இல்லாததுதான்.

மருத்துவக் கல்விக்கு மனசு வைக்குமா அரசு?

இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அகதிகள் முகாமைச் சேர்ந்த துஷாந்தியிடம் பேசினோம். ‘‘கடந்த 2005-ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரில் என் அப்பா விஜித் காணாமல் போய்விட்டார். அவர், உயிரோடு இருக்கிறாரா என்றுகூடத் தெரியவில்லை. என் அம்மாதான் எங்களைத் தமிழகத்துக்கு அகதிகளாக அழைத்துக்கொண்டு வந்து, பனியன் கம்பெனியில் வேலை செய்து படிக்கவைக்கிறார். தற்போது அவருக்கும் உடல்நிலை சரியில்லை. பிளஸ் டூ-வில் 1,200-க்கு 1,018 மார்க் வாங்கியிருக்கிறேன். நர்ஸிங் படிக்க விரும்புகிறேன். நான் படித்தால்தான் வேலைக்குப் போய் எனது தங்கைகளைப் படிக்கவைக்க முடியும். குடியுரிமை இல்லாத எங்களுக்குக் கல்வி உரிமை கிடைக்க முதல்வர்தான் வழிவகை செய்ய வேண்டும்’’ என்றார் கண்ணீருடன்.

2010-ல் திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவர் நாகராஜ், 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை. இந்த விவகாரத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் வழக்கறிஞர் சிவக்குமார். இதையடுத்து, பொறியியல் விண்ணப்பப் படிவத்தில் இலங்கை அகதிகளுக்கு என தனி இடத்தை உருவாக்கிக் கொடுத்தார் கருணாநிதி. இதனால், நாகராஜைப் போன்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பொறியியல் கனவுகள் நிறைவேறி வருகின்றன.

2014-ல் ஈரோடு அகதிகள் முகாமைச் சேர்ந்த நந்தினி, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1,170 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், குடியுரிமை காரணமாக அவர் கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல் போனது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நந்தினிக்கு கல்வி உரிமை வழங்கக் கோரி அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் அறிக்கைவிட்டார்கள். ஆனாலும் இதற்கான தீர்வு எட்டப்படவில்லை.

2000-ம் ஆண்டுவரை இலங்கை அகதிகளுக்கு என்று 20 இடங்கள் மருத்துவப் படிப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையிலேயே 1996-ம் ஆண்டு ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தனின் மகள், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்றுள்ளார். அதன் பிறகு அகதிகளின் குழந்தைகளுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2005-ம் ஆண்டில் மத்திய அரசு அதை முழுவதுமாக நீக்கியுள்ளது. அப்போதிலிருந்து நந்தினி போன்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். திபெத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்புக்கு அனுமதிக்கும்போது இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகக் கூறுகிறார்கள்.

உலக தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், ‘‘இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக முதலமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசின் அறிவிப்புக்காகக் காத்திருக்காமல் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள தகுதியுடைய மாணவர்களையும் மருத்துவம், நர்சிங், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர்க்க வேண்டும் என அரசாணை ஒன்றை முதலமைச்சர் வெளியிட வேண்டும்’’ என்றார்.

தொல்.திருமாவளவன், ‘‘மற்ற நாடுகளில் அடைக்கலம் தேடி வருகிற அகதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் போன்றோ, பாதுகாப்பு போன்றோ இந்தியாவில் கடைப்பிடிப்பது இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அகதிகளின் பெற்றோருக்கு இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும். அதேபோன்று இரட்டைக் குடியரிமை விரும்புகிறவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும். சட்டம், மருத்துவம் போன்றவற்றில் இவர்களுக்கு என்று தனிப்பிரிவை ஏற்படுத்தி அதில், ஒரு சதவிகிதமோ அல்லது இரண்டு சதவிகிதமோ இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன்பிறகு, இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

மருத்துவத் தேர்வுக்குழுச் செயலாளர் செல்வராஜ், ‘‘ ‘அகதி மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி இல்லை’ என்று விதிகள் உள்ளன. நர்ஸிங் படிக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அகதி மாணவர்கள் விண்ணப்பித்தால், அதை நாங்கள் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கிறோம்’’ என்றார்.

- கே.புவனேஸ்வரி

படம்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு