Published:Updated:

டாய்லெட்!

கடலூர் ஆர்த்திக்கு சென்னை அக்‌ஷயா கொடுத்த பரிசு!

பிரீமியம் ஸ்டோரி
டாய்லெட்!

பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஜாலியாக செலவழிப்பது தான் நம்மில் பலரின் வழக்கம். ஆனால், சென்னை மாணவி ஒருவர், ஏழை மாணவியின் வீட்டுக்கு தனது பிறந்த நாள் பரிசாகக் கழிப்பறை கட்டித் தந்திருக்கிறார். அனைவரும் பின்பற்றத்தக்க நல்ல முயற்சி இது.

சென்னை அடையாறைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரது மகள் அக்‌ஷயா. இவர் சென்னை எம்.சி.டி. எம்.சிதம்பரம்  செட்டியார் இன்டர்நேஷனல் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் சுத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற ஏழைப் பள்ளி மாணவி வீட்டில் கழிப்பறை ஒன்றைக் கட்டி, அந்த மாணவியின் குடும்பத்துக்குப் பரிசாகக் கொடுத்து தனது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார் அக்‌ஷயா.

இதுகுறித்து மாணவி ஆர்த்தியிடம் பேசினோம், “ஒரு நாள், எங்க பள்ளித் தலைமையாசிரியர் தேவசேனா, எங்க கிளாஸ்க்கு ஒரு தொண்டு நிறுவனத்திலிருந்து இரண்டு பேரைக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. ‘யார் யார் வீட்டில் டாய்லெட் இல்ல. அவங்க எல்லாம் கையைத் தூக்குங்க’னு சொன்னாங்க. அப்போ நாங்க ஆறு பேர் கையைத் தூக்கினோம். எல்லோருடைய பேரையும் எழுதிக்கிட்டுப் போய்ட்டாங்க. அப்புறம் ஒரு நாள், அந்த இரண்டு பேரும் எங்க ஊருக்கு வந்து எங்க வீட்டையும், தோட்டத்தையும் சுற்றிப் பார்த்துட்டு,  இந்த வீட்டுக்குத்தான் டாய்லெட் கட்டணும்னு சொல்லி ஒரே வாரத்தில டாய்லெட் கட்டிக் கொடுத்தாங்க. இயற்கை உபாதை எதுவாக இருந்தாலும் நாங்க வயல்வெளிக்குத்தான் ஓடணும். இப்ப எங்க வீட்டில் டாய்லெட் கட்டப்பட்டதால் எங்களுக்கு எந்த விதமான தொந்தரவும் இல்லை. ரொம்பச் சந்தோஷமா இருக்கு. எங்களுடைய கஷ்டத்தைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டு, அதற்கான வசதி செய்து கொடுத்த அக்‌ஷயாவுக்கும், அவங்க குடும்பத்துக்கும் ரொம்ப நன்றி” என்றார்.

டாய்லெட்!

சி.எஸ்.டி தொண்டு நிறுவனச் செயலாளர் ஆறுமுகம், “அக்‌ஷயா குடும்பத்தினர் எங்களைத் தொடர்புகொண்டு, ‘கிராமப்புறத்தில் ஓர் ஏழைப் பள்ளி மாணவியின் வீட்டுக்குக் கழிப்பறை கட்டிக் கொடுக்கணும்னு ஆசைப்படுகிறோம். அதற்குத் தகுதியான மாணவி ஒருவரை நீங்களே தேர்வு செய்து, அதைக் கட்டிக் கொடுத்திடுங்கள்’ என்று 25 ஆயிரம் ரூபாய் அனுப்பிவைத்தார்கள். அதன்பிறகுதான், பெருமாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதவியோடு மாணவி ஆர்த்தியைத் தேர்வு செய்தோம். அந்தக் குடும்பத்தை நேரில் பார்த்ததும் மனசுக்குள் ஒருவிதமான வலி ஏற்பட்டுச்சு. அஞ்சு பொம்பளப் புள்ளைங்க. சுற்றி மறைப்புக்கூட இல்லாத பிஞ்சிப்போன குடிசை. அதுக்குள்ளத்தான் எல்லாமே. அந்த அளவுக்கு ஏழ்மையான குடும்பம். அவங்களுக்கு ஒரு கழிப்பறை கட்டி கொடுத்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது, சரியான நபரைத்தான் தேர்வு செய்திருக்கிறோம் என்று மனசுக்கு கொஞ்சம் சந்தோஷம்” என்றார் புன்னகையோடு.

டாய்லெட்!

மாணவி அக்‌ஷயாவிடம் பேசினோம். “ஒரு நாள் திருச்சியில் இருந்து காரில் சென்னைக்கு வந்துகொண்டிருந்தேன். அப்போது பீரியட் டைம். அப்போ, உடை மாற்றிக்கொள்ள  வெட்டவெளிக்கோ, விடுதிக்கோ போக முடியவில்லை. ரொம்பச் சிரமப்பட்டேன். இதை எங்க அம்மாகிட்டேயும், தாத்தாகிட்டேயும் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டேன். அதற்கு எங்க தாத்தா, ‘ஒரு நாளைக்கே உனக்கு இவ்வளவு கஷ்டம் என்றால், வாழ்நாள் முழுவதும் கிராமங்களில் பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று நினைத்துப் பார்த்தாயா’ என்றார்.

அப்ப முடிவு செய்தேன். என் பிறந்தநாளுக்குச் செலவிடும் பணத்தை என் வயதுள்ள ஓர் ஏழைப் பள்ளி மாணவிக்குப் பரிசாகக் கழிப்பறை கட்டித் தரவேண்டும் என்று. அது இப்போது நிறைவேறி விட்டது. எனக்கு மட்டுமல்ல, என் குடும்பத்துக்கே ரொம்ப சந்தோஷம். கடந்த 22-ம் தேதி என் பிறந்த நாளின்போது டாய்லெட்டை திறந்துவைத்தேன். ஆர்த்தியின் வீட்டில் அவர் குடும்பத்தோடு சேர்ந்து என் பிறந்தநாளைக் கொண்டாடினேன். இத்தோடு நிறுத்திவிடாமல் ‘டீன் கிளீன்’ (பருவப் பெண்கள் சுத்தமாக இருத்தல்) என்ற அமைப்பை உருவாக்கி கிராமப்புற மாணவிகளுக்கு இன்னும் 100 டாய்லெட்கள் கட்டித்தரத் திட்டமிட்டிருக்கிறேன். அதிகப் பணம் செலவழித்து பல வருடங்கள் பிறந்தநாள் கொண்டாடியிருக்கேன். ஆனால், இந்த வருடம் இப்படியொரு பிறந்தநாள் கொண்டாடிய திருப்தியும், சந்தோஷமும் வேற எந்த வருடப் பிறந்த நாளிலும் இருந்ததில்லை” என்றார்.

அக்‌ஷயாவுக்கு ஒரு ராயல் சல்யூட்!

- க.பூபாலன், இரா.ஜெயக்குமார்
படங்கள்: எஸ்.தேவராஜன், எம்.வஸீம் இஸ்மாயில்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு