Published:Updated:

கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - எங்கெங்கே, எந்தெந்தத் தலைவர்கள், எப்போது?

கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - எங்கெங்கே, எந்தெந்தத் தலைவர்கள், எப்போது?
கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - எங்கெங்கே, எந்தெந்தத் தலைவர்கள், எப்போது?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது உட்பட பல காரணங்களுக்காக, மத்திய அரசைக் கண்டித்து, நாளை தமிழகத்துக்கு வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் என்னென்ன அமைப்புகளின் சார்பில் எவ்வெப்போது போராட்டம் நடக்கும் எனும் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரிப் பிரச்னை தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவதற்காக, கடந்த 1-ம் தேதியன்று தி.மு.க தலைமையகமான அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், ஏப்ரல் 5-ல் பொது வேலைநிறுத்தம், டெல்டா பகுதியிலிருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி, பிரதமர் வருகைதரும் 12-ம் தேதி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

பொது வேலைநிறுத்தத்தை அடுத்து, காவிரி டெல்டா பகுதியிலிருந்து தொடங்கி, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கெடுத்துவரும் பேரணி, ஆளுநர் மாளிகை நோக்கி, ’காவிரி உரிமை மீட்புப் பயணம்’ மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், வேண்டுமென்றே நடுவர் மன்றம் அமைக்காமல் இருக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ’கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்’ நடத்துவது என்றும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

வேளச்சேரியில் வைகோ

ம.தி.மு.க. சார்பில் காலை 10 மணி அளவில் சென்னை, வேளச்சேரி சாலை, சின்னமலை, வி.எஸ்.டி. மோட்டார் அருகில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் இல்லங்கள்தோறும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டுமெனவும் கறுப்பு உடையோ கறுப்பு பட்டையோ அணிய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

சைதாப்பேட்டையில் தி.க.

அதன்படி, திராவிடர் கழகம் சார்பில் சைதாப்பேட்டையில் கருணாநிதி வளைவு அருகில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழர் இன அரசியல் அமைப்புகளைக்கொண்ட காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில், நாளை காலை 8 மணியளவில்  சென்னை விமானநிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

விமானநிலையத்தில் சீமான், இயக்குநர்கள்!

``உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ ஆய்வு, ஸ்டெர்லைட் ஆலை, அணு உலை, சாகர்மாலா உள்பட பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துவருகிறது. அதற்கு எதிராக நடத்தப்படும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், மருது மக்கள் இயக்கத் தலைவர் முத்துப்பாண்டி உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்கின்றனர். மேலும், இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக இயக்குநர்கள் அமீர், வ.கௌதமன், இராம், வெற்றிமாறன், கோபி நயினார் உட்பட பலரும் பங்கேற்கிறார்கள்” என்று மீட்புக்குழுத் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

ஆலந்தூர், மெட்ரோ ரயில்நிலையம் அருகில் வேல்முருகன்

பிரதமர் மோடி அவர்களின்  விமானம் தரையிறங்கும் நேரத்தில் காலை 8 மணி – 9 மணிக்குள்  தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற உள்ளது என அக்கட்சியின் நிறுவனர் தலைவர் ச.வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

வீடுகளில் விவசாய சங்கம் கறுப்புக்கொடி!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ மத்திய அரசின் தமிழக விரோதப் போக்கைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிவருகையில், பிரதமர் மோடி இங்கு வருவது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல உள்ளது. எனவே, பிரதமர் தமிழகம் வரும் நாளைய தினம் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக இல்லங்கள்தோறும் கறுப்புக்கொடியை ஏற்றிவைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

பொது வேலைநிறுத்தத்தில் எப்படி தமிழகம் முழுவதும் மக்கள் பங்கெடுத்தார்களோ அந்த அளவுக்கு பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க எல்லா பகுதிகளிலும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு அறிவித்துள்ளார்.