Published:Updated:

முகங்கள் - குயில்மொழி

முகங்கள் - குயில்மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
முகங்கள் - குயில்மொழி

முகங்கள் - குயில்மொழி

முகங்கள் - குயில்மொழி

பொதுவாக வர்ணங்களில் இறைவனைத் தலைவனாக நினைத்து அவன் மீது காதல் கொண்டு தலைவியின் போக்கைச் சுட்டிக்காட்டும் பாட்டுகள்தான் அதிகம்.

ஆனால், ‘பெண் எனும் பேராற்றல்’ என்ற பாட்டு, தோல்வியில் துவண்டு துயரில் மருளும் பெண்களைத் தனது ஆற்றலைக் காட்ட எழுமாறு கொற்றவைத் தாய் அழைக்கும் கம்பீரப் பாட்டாக இருந்தது.

பாட்டை எழுதியவர் பிரபல வழக்கறிஞர் அருள்மொழி. பாட்டுக்கு வர்ணம் பிடித்து ஆடியவர் அவர் மகள் குயில்மொழி. பேச்சில் கலக்குபவர் தாய். மகளோ, நடனத்தில் கலக்குகிறார். சென்னை பாரதிய வித்யாபவனில் அவரது நடன அரங்கேற்றம் சமீபத்தில் நடந்தது. அரசியல் தலைவர்களும் இலக்கிய கர்த்தாக்களும் பங்கெடுத்துப் பாராட்டிய நாளுக்கு, அடுத்த நாள் குயில்மொழியைச் சந்தித்தோம்.

‘‘நீங்கள் கலை பற்றிய படிப்பு படித்தவரா?”

‘‘இல்லை. சென்னை எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்தபின் சென்னை சீர்மிகு சட்டக் கல்லூரியில் (School of Excellence in Law)  பி.எல் (Honours) முடித்தேன். கலை என்பது என் படிப்பு அல்ல. ஆர்வம்... தேடுதல்.”

‘‘திராவிடர் கழகப் பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்த உங்களுக்கு நடனம் மீதான ஆர்வம் எப்படி வந்தது?”

‘‘என் அம்மாவுக்கு பாட்டு, நடனம் ஆகிய கலைகளின் மீது  ஆர்வம் அதிகம். சிலப்பதிகாரம் அவர்களுக்குப் பிடித்த காப்பியம். அது இயல், இசை, நாடகம் ஆகிய முக்கலைகளும் சேர்ந்த தமிழ்க் காவியம். எனவே, அவர்களுக்கு சமூகம், அரசியல் தாண்டிய கலை ஈடுபாடும் உண்டு. அதனால் சிறுவயதில் இருந்தே என்னையும் பாட்டு, நடனம் கற்றுக்கொள்ளப் பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிட்டார்கள். அப்படிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததுதான் பரதமும். அம்மா சொன்னதற்காக இல்லாமல் எனக்கும் அந்தக் கலை ஆர்வம், சிறுவயதில் இருந்தே இருந்தது.

அதற்காக முழுமையாக நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எல்லாம் முதலில் இல்லை. பள்ளிப் படிப்பு முடித்திருந்த நேரத்தில், என் மாமா மகிழ்நனின் மகள் யாழ்திலீபாவின் திருமணத்தில் நர்த்தகி அம்மாவின், ‘தமிழமுது’ நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்தேன்.

அவருடைய நடனத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கும் முழுமையாக நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக நர்த்தகி அம்மாவிடம்தான் நடனம் கற்று வருகிறேன். கல்லூரியிலும் பல நடனப் போட்டிகளில் கலந்துகொண்டது எனக்கு உறுதுணையாக இருந்தது.”

‘‘நர்த்தகி நடராஜின் தனிச்சிறப்பு என்ன?”

‘‘நர்த்தகி அம்மா, சக்தி அம்மா... இவர்கள் இரண்டு பேரும்தான் எனக்கு எல்லாமும். இந்த இரண்டு திருநங்கைகளும் நடனக்கலையைக் கற்றுக் கொள்ள எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை எங்களிடம் மணிக்கணக்காகச் சொல்லி இருக்கிறார்கள். நடனமேதை எனச் சொல்லப்படும் கே.பி.கிட்டப்பா பிள்ளையின் நேரடி மாணவிதான் நர்த்தகி அம்மா. 15 ஆண்டுகள் அவரிடம் நடனம் கற்றுக்கொண்டார்கள். இன்றைக்கு அவர்களுடைய காலடித்தடம் படாத நாடுகளே கிடையாது. தமிழ்க் கலை, நர்த்தகி அம்மா மூலமாக உலகம் முழுக்கப் பரவி வருகிறது. நர்த்தகி அம்மாவும், சக்தி அம்மாவும் சேர்ந்து ஆரம்பித்ததுதான் ‘வெள்ளியம்பலம்’ நடனப் பள்ளி. அதில்தான் நானும் படித்தேன்.

எங்கே நடனம் ஆடப்போனாலும் எங்களையும் கூடவே அழைத்துக்கொண்டு போவார்கள்.நாங்களும் ஆடுவோம். பாட்டுக்கு  நடனம் ஆடுவது என்று இல்லாமல் அந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம், என்ன கதை  என்பதையும் சொல்வார்கள். நடனக்கலையில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் தன்னிடம் பயிலும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்கள்.”

‘‘பரதம் என்றால் முழுமையான பக்திப் பாடல்களாக இருக்கும் நிலையில் சிலப்பதிகாரப் பாடல்களைவைத்து நடனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?”

‘‘நர்த்தகி அம்மா ஆடும் நடனக் காட்சிகளும் பல்வேறு வகைப்பட்டதாகத்தான் இருக்கும். அதற்கான பாடல்களாகத்தான் தேர்வு செய்வார்கள். ‘நான் திராவிடர் கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவள். நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்’ என்று சொன்னபோது நர்த்தகி அம்மா அதைப் புரிந்துகொண்டார். எனவே, எங்கள் கருத்துகளுக்கு விரோதம் இல்லாதவாறு பாட்டைத் தேர்வு செய்தார். கபிலரின் குறிஞ்சிமலை வர்ணனை, பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் தேர்வுசெய்தோம். ‘பெண் எனும் பேராற்றல்’ என்பது என் அம்மா எனக்காக எழுதிய பாட்டு. இதை கவிஞர் முத்துலிங்கம் ஐயா சீர் பிரித்துத் தந்தார். இது போன்ற சமூக விழிப்பு உணர்வுப் பாடல்கள் இந்தக் கலையில் பயன்படுத்தப்பட வேண்டும்.”

‘‘நடனக் கலை வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்?”

‘‘தமிழ்ப் பாடல்கள் இந்தக் கலையில் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்.   எனது அரங்கேற்றத்துக்கு வந்தவர்கள் அனைவரும், ‘மூன்று மணிநேரம் தமிழ் கேட்டதே இனிமையாக இருந்தது’ என்றார்கள். தமிழ் மூலம் இந்தக் கலையை உயிர்ப்பிக்க வேண்டும். இந்தக் கலை மூலம் தமிழைத் தக்கவைக்க வேண்டும்.  அனைத்துப் பள்ளிகளிலும் நடன வகுப்புகள் வரவேண்டும். அதில் சமூகச் சீர்திருத்தம் இழையோட பாடல்கள் சேர்க்க வேண்டும். அப்போதுதான் நடனக் கலை செழிக்கும்.”

‘‘உங்களோட எதிர்காலக் கனவு என்ன?”

‘‘ஏ.சி.எஸ் தேர்வு எழுத இருக்கிறேன். அதற்கான பயிற்சி  எடுத்து வருகிறேன். நடன அரங்கேற்றம் முடிந்துவிட்டது. அடுத்து மார்கம், தஞ்சாவூர் பாணியில் உள்ள அரியாய் போன்ற பயிற்சிகளை எடுக்க வேண்டும். வழக்கறிஞர் ஆனபிறகும் நடனமும் தொடர வேண்டும் என்பது என்னுடைய ஆசை.”

- சு.நந்தினி