Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்-க்கு துரோகம் செய்வதுதான் தொழில்' - டி.டி.வி.தினகரன் விளாசல்!

`ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்-க்கு துரோகம் செய்வதுதான் தொழில். அவர்கள் எப்படி 8 கோடி மக்களுக்கு நல்லது செய்வார்கள்' என டி.டி.வி. தினகரன் பேசியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு டி.டி.வி. தினகரன் தலைமையேற்றுப் பேசினார்.

டி டி வி தினகரன்

டி.டி.வி தினகரன் பேசுகையில், ``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மார்ச் 15-ம் தேதி மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து தர்மபுரி, சேலம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். இன்றைக்கு ஈரோடு, காவிரிக் கரையை ஒட்டியுள்ள கரூர், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருக்கிறோம். மக்கள் விரும்பாத திட்டங்களைத் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. தன்னுடைய இறுதி மூச்சு வரை மக்களுக்காக உழைத்தார். அப்படி இருந்தவர், 2016 டிசம்பர் 5-ல் இறந்தார். சின்னம்மா நினைத்திருந்தால், அன்றைய இரவே முதலமைச்சராகியிருக்க முடியும். அதைப் போலவே, அம்மா அவர்களால் நேரடி அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட என்னையும் சின்னம்மா நினைத்திருந்தால் முதலமைச்சராக ஆக்கியிருக்க முடியும். 

ஆனால், தன்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் பதவி பெறக்கூடாது என்ற காரணத்திற்காக ஓ.பி.எஸ்ஸை முதலமைச்சராக்கினார். ஆனால் அவரோ, மத்திய அரசுக்கு காவடி தூக்கி, எடுபிடியாக இருந்ததால் அவரை நீக்கிவிட்டு, ஈ.பி.எஸ்ஸை முதலமைச்சராக்கினோம். அவரும் ஓ.பி.எஸ் வழியில் அவரை முதலமைச்சராக்கியவர்களுக்கே துரோகம் செய்தார். ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்-க்கு துரோகம் செய்வதுதான் தொழில். தன்னை ஆளாக்கியவர்களுக்கே துரோகம் செய்த இவர்கள், எப்படி 8 கோடி மக்களுக்கு நன்மை செய்வார்கள். அவர்களுடன் சகுனி போல 4-5 அமைச்சர்கள் சேர்ந்து தவறு செய்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி, எங்களை மாமியார் வீட்டுக்கு அனுப்புவோம் என்கிறார்கள். இங்கு எங்களைப் பார்த்துப் பயந்துகிடக்கிறார்கள். 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்தது தவறு என நிச்சயமாக நியாயம் கிடைக்கும். அப்போது, இந்த மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரும்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், "என்னை எப்படியாவது கைதுசெய்து ஜெயிலுக்குள் தூக்கிப் போடணும்னு ஏதேதோ முயற்சி செய்யுறாங்க. என் மேல மான நஷ்ட வழக்கு போட்ருக்காங்க. நீங்க என்னை தேவையில்லாம கூண்டுல ஏத்துறீங்க. கூண்டுல நின்னுக்கிட்டு சரமாரியா கேள்வி கேக்கப்போறேன். மிச்சசொச்ச காலம் வீட்டுல உட்காருவீங்கன்னு பார்த்தா... சும்மா இருக்க மாட்டேங்குறீங்க. எந்த காவல்துறையை வைத்துக்கொண்டு இன்றைக்கு நீங்கள் ஆட்டம் போடுகிறீர்களோ, அதே காவல்துறையை வைத்து உங்களை குண்டுக்கட்டாகத் தூக்கும் காலம் வெகு தூரம் இல்லை. 

டி டி வி தினகரன்

கருணாநிதி கொடுத்த குடைச்சல்களுக்குப் பதிலடியாக ஜெயலலிதா முதலமைச்சரானதும், நடு இரவில் கைதுசெய்து எப்படிக் கதற வைத்தார் என உங்களுக்குத் தெரியும். அதே நிலைமைதான் நாளை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்-க்கும். எனவே, தமிழகத்தை வஞ்சிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராடினால்தான் மத்திய அரசு அதை அமைக்கும்" என முடித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement