`இதற்காக தான் மோடியை எதிர்க்கிறார்கள்' - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்!

பா.ஜ.க தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன்

மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசுகையில்  “திமுக, காங்கிரஸ்  ஏறக்குறைய 45 ஆண்டுகளாக அவர்கள் செய்து உள்ள தவறுகளை மறைக்க எடுத்திருக்கக் கூடிய ஆயுதம் தான் காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. தமிழகத்துக்குப் பல நன்மைகளைச் செய்யக்கூடிய பிரதமர் நரேந்திர மோடி மீது இவர்கள் குற்றச்சாட்டு வைப்பதற்குக் காரணம் 21 மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்பது தான். பிரதமர் நேற்று வந்தது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் இராணுவ தளவாட தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழகத்துக்குப் தர வேண்டும் என்கிற நல்ல நோக்கில் கலந்து கொண்டார்.

பிரதமர் வந்துள்ளதை எதிர்த்து உள்ளார்கள் என்றால் .இது தமிழகத்துக்கு எதிரான எதிர்ப்பு. அவர்கள் காட்டிய கறுப்புக்கொடி தமிழகத்துக்கு பல்லாயிரக்கணக்கான முதலீடுகள் தேவையில்லை என்று சொல்வது போல் ஆகும். தமிழையும், தமிழனையும் வளர்க்கவில்லை, ஆனால் தமிழகத்தின் வீழ்ச்சிக்கு தி.மு.க காரணமாக இருந்துள்ளது. 1967-ல் ஆட்சிக்கு வரும்போது மக்களை எப்படி ஜாதி, மத, இன ரீதியாகப் பிரித்தார்களோ அதை மீண்டும் நிறைவேற்றக் களத்தில் இறங்கி உள்ளார்கள். தி.மு.க-வின் முரசொலி நாளிதழில் 6-ம் தேதி சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் போராட்டம் நடத்தியதாக வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகா அர்ஜுன கார்கே போராடியது போன்று வந்துள்ளது. ஆனால் இவர்கள் போராடியது தலித் வன்கொடுமை சட்டத்திற்காக ஆகவே முரசொலி நாளிதழ் வழியே தி.மு.க தமிழக மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. 

தமிழக மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். தமிழ் உணர்வாளர்கள் என சில தமிழர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க சென்ற பெண்களை ஆபாச வார்த்தைகளால் பேசி உள்ளனர். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியினை அரசியல் கட்சியின் தலைவர்கள் எத்தனைப் பேர் குடும்பத்துடன் சென்று பார்த்து உள்ளார்கள் எனத் தெரியுமா? ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை பார்க்க கூடாது எனச் சொல்லும் தமிழ் உணர்வாளர்கள் திரைப்படங்களை, தொலைக்காட்சியைப் பார்க்க கூடாது எனச் சொல்லமுடியுமா? இணையம் துறைமுகம் மட்டுமல்ல தமிழகத்தில் எந்தத் திட்டமும் கொண்டு வரக் கூடாது என ஒரு கூட்டம் போராடி வருகிறது. இதனைத் தமிழக அரசு கவனிக்க தவறியுள்ளது. 

தமிழகத்தைப் பயங்கரவாதிகளின் பயிற்சிக் களமாக மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. காவிரியில் நமது உரிமை நிலை நாட்டப்பட்ட வேண்டும். கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகளை இணைத்து தாமிரபரணி வரை கொண்டு செல்ல வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளும் இணைக்க வேண்டும் இதற்காகத் தான் பிரதமர் நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 10 வருடங்களாக 13 அமைச்சர்கள் மத்திய அரசில் இருந்தவர்கள் நதிநீர் இணைப்பு குறித்து பேசினார்களா, தலைவர்கள் தொண்டர்களை தூண்டி விட்டுத் தீ குளிக்க வைத்து உள்ளார்கள், மக்கள் இதை நம்ப வேண்டும். காவிரிக்காக யார் வேண்டுமானாலும் போராடலாம், ஆனால் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது” என கூறினார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!