`சூடுபிடிக்கும் நிர்மலா தேவி விவகாரம்’ - செய்தியாளர்களைச் சந்திக்கும் ஆளுநர்!

அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். 

பன்வாரிலால் புரோகித்

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறானச் செயலுக்கு அழைப்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்றிரவு பேராசிரியை கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக சார்பிலும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விசாரணைக் குழு, போலீஸார் விசாரணை என நடந்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பல்வேறு வி.ஐ.பி-க்களுக்குத் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆளுநருக்குத் தொடர்பிருப்பதாக மார்க்ஸிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் ஏதும் வெளியாகவில்லை. இந்தநிலையில், ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நியமித்துள்ள விசாரணைக் குழு எதற்கு என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதற்கான விளக்கங்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆளுநர் தெரிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் நியமனம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்டவை  குறித்தும் ஆளுநர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக ஆளுநராகக் கடந்த அக்டோபரில் பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித், முதன்முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!