`என் தொகுதியைப் புறக்கணிக்கின்றனர்!' - யோகி ஆதித்யநாத்தைச் சாடிய ராகுல் | rahul says yogi adityanath boycott his parliamentary constituency

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (18/04/2018)

கடைசி தொடர்பு:17:00 (18/04/2018)

`என் தொகுதியைப் புறக்கணிக்கின்றனர்!' - யோகி ஆதித்யநாத்தைச் சாடிய ராகுல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி. `அடுத்த பத்தாண்டுகளில் என்னுடைய அமேதி தொகுதியை, சிங்கப்பூருடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்' எனப் பெருமைப்பட்டுக்கொண்டார். 

ராகுல்

அமேதி நகரில் தொடர்ந்து மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, அதே மாநிலத்தில் உள்ள சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி நகருக்கும் விசிட் அடித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ராகுல், நேற்று அமேதியில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அவரிடம் மாணவி ஒருவர் பேசும்போது, `அரசின் நலத்திட்டங்கள் கிராமங்களுக்குச் சரியான முறையில் சென்று சேருவதில்லை. இதற்கு என்ன காரணம்' எனக் கேட்டார். இதற்குப் பதில் அளித்த ராகுல், ` சட்டம் இயற்றுவதுதான் எங்கள் வேலை' என விநோதமாகப் பதில் அளித்தார். இந்தப் பதில் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதையடுத்து, இன்று அமேதி நகரில் நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கி வைத்துப் பேசிய ராகுல், `மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க அரசு, அமேதி தொகுதிக்குக் கிடைக்க வேண்டிய பல்வேறு திட்டங்களைக் கிடைக்கவிடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்' என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசையும் பிரதமர் மோடியையும் குற்றம்சாட்டிப் பேசினார். தொடர்ந்து பேசியவர், 'சிங்கப்பூர் மற்றும் கலிஃபோர்னியா உள்ளிட்ட நாடுகளைக் குறிப்பிட்டு பேசும் மக்கள், இனிவரும் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில், அமேதி நகரையும் அந்நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்' எனப் பெருமைப்பட்டுக் கொண்டார்.