வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (22/04/2018)

கடைசி தொடர்பு:18:45 (22/04/2018)

`மருந்து விலை தீர்மானிப்பதில் அரசு தோல்வி' - மோடிக்கு கண்டனம் தெரிவித்த மருத்துவர்கள் சங்கம்!

லண்டன் சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறது. 

மோடி

முதல் இரண்டு நாள் ஸ்வீடன் அடுத்த மூன்று நாள் லண்டன் என்று திட்டமிட்டு, ஐந்து நாள் சுற்றுப்பயணமாக கடந்த 16-ம் தேதி அன்று புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு தொழில் அதிபர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிரதமரின் வருகையையடுத்து லண்டனில் 'பராத் கி பாட் சபேக் சாத்' என்ற மருத்துவ நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, மருந்து நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை எடுத்துக்காட்டும் விதமாக, `மருந்து நிறுவனங்களை ஊக்குவித்து, அவற்றை வளர்ச்சி அடையச் செய்வதற்காகத்தான் வெளிநாடு மருத்துவ மாநாடுகளில் மருத்துவர்கள் பங்கேற்று வருகின்றனர். பெரும்பாலான இந்திய மருத்துவர்கள், ஜெனரிக் (அடிப்படை மூலக்கூறு) மருந்துகளைப் பரிந்துரை செய்வது இல்லை' எனக் குற்றம்சாட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், `சராசரி மக்களின் நலன் கருதி, சந்தைகளில் விலை அதிகமாக விற்கப்படும் அடிப்படைத் தேவை மருந்துகளை மானிய விலையில் 'ஜெனரிக் மருந்தகம்' என்ற திட்டத்தின் மூலம் வழங்கி வருகிறோம். இதனால், 100 ரூபாய்க்கு விற்ற மருந்து தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது' என்றார்.  

டாக்டர் ரவி வாங்கிதேகர்

மோடியின் இத்தகைய பேச்சு இந்திய மருத்துவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டாக்டர் ரவி வாங்கிதேகர் `இந்திய மருத்துவர்கள் குறித்து லண்டனில் பிரதமர் பேசியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மருத்துவதுறை 70 சதவீதம் இந்திய மருத்துவர்களால் நடத்தப்படுகிறது. மருந்து விலையை நிர்ணயம் செய்வது எங்கள் கையில் இல்லை. அதை அரசுதான் தீர்மானிக்கிறது. அதனால், கூறிய கருத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரைக் கேட்டுக்கொள்கிறோம்' எனக் கொதிப்புடன் கூறுகிறார். 

கடிதம்

முன்னதாக, மும்பை மருத்துவ ஆலோசகர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து, மருத்துவர்களைப் பற்றின மோடியின் கருத்துக்கு தங்களின் எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறது. மேலும், 'மருத்துவர்களை அவமானப்படுத்தும் விதமான அறிக்கை இது', 'மருந்தின் விலை தீர்மானிப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது, அதனால், மருத்துவர்கள் மீது குற்றம் சாட்டுகிறது' என்று கூறி மோடி மீதும் மத்திய அரசு மீதும் மருத்துவர்கள் அக்கடிதத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.