`சம்பளம் பெரிதல்ல... தரமான கல்விதான் வேண்டும்!' - புதிய கட்சி தொடங்கிய ஐ.ஐ.டி முன்னாள் மாணவர்கள்

`புதிய ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறோம்' என்ற முழக்கத்தோடு அரசியலில் கால்பதிக்க உள்ளனர் ஐ.ஐ.டி முன்னாள் மாணவர்கள் சிலர். ' பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்' என்கின்றனர் புதிய கட்சியின் நிர்வாகிகள். 

ஐஐடி

மும்பை, சென்னை, புவனேஸ்வர், டெல்லி உள்பட நாடு முழுவதும் பதினைந்துக்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஐ.ஐ.டியில் அட்மிஷன் பெறுவதற்கான போட்டியைப் பரவலாகப் பார்க்க முடியும். அதே சமயம், வட மாகாணங்களை ஒப்பிடும்போது, ஐ.ஐ.டிகளின் தமிழக மாணவர்களின் சேர்க்கை மிகவும் குறைவு. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டுத் தொழில்நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. இந்நிலையில், பல்வேறு ஐ.ஐ.டிகளில் படித்த மாணவர்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஐம்பது பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளனர். 

`பகுஜன் ஆசாத் கட்சி' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சி குறித்துப் பேசிய முன்னாள் ஐ.ஐ.டி மாணவர் குமார், ``2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது எங்களின் நோக்கம் அல்ல. பழங்குடியினர், பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அதனால்தான், புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறோம். கட்சி அங்கீகாரத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளோம். விரைவில் ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் கட்சிப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறோம். முதல்கட்டமாக, 2020-ம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இருக்கிறோம். அதன்பின், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளோம்" என்றார். 

தேர்தல்

`நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்றவர்களைக் குறை சொல்லிக் காலத்தை கடத்தி வருகின்றன. இவர்களின் செயலால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்களின் நலன்தான் புதிய கட்சியின் தாரக மந்திரம். டாக்டர் அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரது படங்களைக் கட்சியின் போஸ்டர்களில் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். இளைஞர்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் எங்கள் நோக்கம்" என்கின்றனர் புதிய கட்சியின் நிர்வாகிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!