வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (23/04/2018)

கடைசி தொடர்பு:16:10 (23/04/2018)

`வெங்கைய நாயுடுவுக்கு அதிகாரம் இல்லை!' - தலைமை நீதிபதி விவகாரத்தில் பிரசாந்த் பூஷண்

உச்ச நீதிமனந்த் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு நிராகரித்துவிட்டார். `நோட்டீஸை நிராகரிக்கும் அதிகாரம் வெங்கைய நாயுடுவுக்கு இல்லை' எனக் கொதிக்கிறார் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். 

வெங்கய்ய நாயுடு

`வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தன்னுடைய அதிகாரத்தை தலைமை நீதிபதி தவறாகப் பயன்படுத்துகிறார்' எனக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சிலர். இந்திய நீதித்துறை வரலாற்றில், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியது, பா.ஜ.க வட்டாரத்தை அதிர வைத்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, குடியரசுத் துணைத் தலைவரான வெங்கைய நாயுடுவை நேற்று சந்தித்துப் பேசினர். எதிர்க்கட்சிகளின் நோட்டீஸை பெற்றுக்கொண்ட வெங்கைய நாயுடு, அதைப் பரிசீலனை செய்து நிராகரித்துவிட்டார். நாயுடுவின் செயலால் ஏமாற்றமடைந்த எதிர்க்கட்சிகள், இதுகுறித்துக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

பிரசாந்த் பூஷன்

இதுகுறித்து ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ள வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ``உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக 64 எம்.பி-கள் கையெழுத்திட்ட நோட்டீஸை, எதன் அடிப்படையில் வெங்கைய நாயுடு நிராகரித்தார்? நீதிபதிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் இல்லை என்று கூறுவதற்கு, அவருக்கு அதிகாரம் இல்லை. அதைப் பற்றி விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு உள்ளது. எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸில் 50 எம்.பி-க்களின் கையெழுத்து இருக்கிறதா என்றுதான் அவர் பார்க்க வேண்டும்' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரசாந்த் பூஷண், `அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் இது. நோட்டீஸ் நிராகரிப்புக்கான காரணம் என்னவென்று நமக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சட்ட வல்லுநர்களுடன் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும்' என்றார்.