`இது அம்பேத்கரை அவமதிக்கும் செயல்!' - ராகுலை விமர்சித்த அமித்ஷா

`நீதித்துறையில் மோடி அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று கண்டனம் தெரிவித்த ராகுல் காந்திக்கு, `அரசியலமைப்பின் புனிதத் தன்மையைக் காங்கிரஸ் அழித்துவிட்டது' எனப் பதில் கொடுத்திருக்கிறார் அமித்ஷா. 

அமித் ஷா

டெல்லி, டக்கடோரா மைதானத்தில் `அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்' என்ற முழக்கத்தோடு நாடு தழுவிய பிரசாரப் பேரணியை இன்று தொடங்கி வைத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. பேரணியில், மோடி அரசைக் கடுமையாக விமர்சித்தார். பேரணிக்கு முன்னதாக, ட்விட்டரில் பதிவிட்ட பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, `அரசியலமைப்பின் புனிதத்தன்மையை அழித்தது காங்கிரஸ் கட்சிதான். அவர்கள் ஜனநாயக ஆட்சியை விரும்பவில்லை. வம்சாவழி ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். ஆகையால்தான், ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பிரவேசம் எடுத்துள்ளார்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

ராகுல்

அமித்ஷாவின் கருத்துக்குப் பேரணியில் பதில் அளித்த ராகுல், `அரசியல் அமைப்புச் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து வழங்கியது. அதைப் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்சியினர் சீர்குலைக்கின்றனர்' எனப் பேசினார். 

அமித் ஷா

இந்தக் கருத்துக்கு அமித்ஷாவிடமிருந்து உடனடியாகப் பதில் வந்தது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமித்ஷா, `அரசியலமைப்பை நாங்கள்தான் இயற்றினோம் எனத் தொடர்ந்து காங்கிரஸ் கூறி வருகிறது. இது, அம்பேத்கரை அவமதிக்கும் செயல். காந்தி மற்றும் நேரு குடும்பத்தினர் அம்பேத்கரை அவமதிக்கின்றனர். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் அவமானமாகக் கருதியிருப்பார்' எனப் பதிவிட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!