Published:Updated:

புதுக்கோட்டை நகரை ஸ்தம்பிக்க வைத்த மனிதச் சங்கிலி போராட்டம்! - பாராட்டிய மு.க. ஸ்டாலின்

பாலஜோதி.ரா
புதுக்கோட்டை நகரை ஸ்தம்பிக்க வைத்த மனிதச் சங்கிலி போராட்டம்! - பாராட்டிய மு.க. ஸ்டாலின்
புதுக்கோட்டை நகரை ஸ்தம்பிக்க வைத்த மனிதச் சங்கிலி போராட்டம்! - பாராட்டிய மு.க. ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரியும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும் தி.மு.க உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் மனிதச் சங்கிலி போராட்டம் மாநிலம் முழுவதும் நேற்று மாலை நடைபெற்றது.

புதுக்கோட்டை நகரில் நடைபெற்ற  மனிதச் சங்கிலி போராட்டத்தில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்  பங்கேற்றார். நகரின் முக்கிய நான்கு வீதிகளிலுமாக 5,000-க்கும் மேற்பட்டோர் கரம் பிடித்து நின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த சில வாரங்களாக பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். தி.மு.க உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கடையடைப்பு, தொடர் மறியல், தமிழகத்துக்கு வந்த பிரதமருக்கு கறுப்புக்கொடி மற்றும் பலூன் பறக்க விடுதல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்  சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது, அதில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, நேற்று மாலை அனைத்து மாவட்டங்களில் உள்ள தலைநகரில் தி.மு.க உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மனக்ச் சங்கிலி போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி 23-ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு மனிதச் சங்கிலியைத் தொடங்கிவைத்தார், இந்த மனிதச் சங்கிலியானது  புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தில் தொடங்கி, பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், மேல ராஜவீதி, திலகர் திடல், பால்பண்ணை, பி.எல்.ஏ கார்னர், அரசு மகளிர் கலைக்கல்லூரி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் முக்கிய நகரப்பகுதி சாலைகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கைகோத்து நின்றனர். இதில் கலந்துக்கொண்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக்கோரி முழக்கமிட்டனர். மனிதச் சங்கிலி நடைபெறும் பகுதிகளை ஸ்டாலின் திறந்த வழி ஜீப் மூலம் பார்வையிட்டு எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திரண்டிருந்த பெண்களைக் கண்டதும் வேனை விட்டு இறங்கி, அவர்களுடன் கைகோத்து நின்றார் ஸ்டாலின். பெண் தோழர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

ஸ்டாலினும் அவர்களுடன் இணைந்து கோஷமிட்டார். இதில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சி,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு விவசாய அமைப்பினரும் கல்லூரி மாணவ, மாணவிகளும் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். 

மேலும், தி.மு.க எம்.பி திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், பெரியண்ணன் அரசு  உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெற்றிகரமாக இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தியமைக்காக மு.க. ஸ்டாலின் அனைவரையும் பாராட்டினார்.