Published:Updated:

தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிடச் சென்ற அமைப்பினர் கைது!  கந்தர்வகோட்டையில் பரபரப்பு

பாலஜோதி.ரா
தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிடச் சென்ற அமைப்பினர் கைது!  கந்தர்வகோட்டையில் பரபரப்பு
தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிடச் சென்ற அமைப்பினர் கைது!  கந்தர்வகோட்டையில் பரபரப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் விமானப்படை தளத்தை முற்றுகையிடுவதற்காகச் சென்ற தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினரை போலீஸார் கைதுசெய்தனர்.

புதுக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி என்றொரு அமைப்பு செயல்பட்டுவருகிறது. இதன் தலைவர் ஷெரீப். இந்தக் கட்சியின் சார்பாக, இவர் புதுக்கோட்டை நகரில் அவ்வப்போது நடத்தும் போராட்டங்கள் வித்தியாசமாகவும் அதிரடியாகவும் இருக்கும். அரசு ஆஸ்பத்திரியில் பேய்கள் விரட்டும் போராட்டம். இருண்டுகிடக்கும் மகப்பேறு மருத்துவமனைக்கு விளக்கேற்றும் வீதிப் போராட்டம், காவிரிப் பிரச்னைக்காக வங்கியில் தண்ணீரை டெபாசிட் பண்ணும் போராட்டம் போன்றவற்றை நடத்தி, புதுக்கோட்டை நகர மக்களை மிரளவைத்தார். இது போதாதென்று, இந்த அமைப்பினர் பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரை அதிரச்செய்ய நேற்று முடிவெடுத்தனர். அந்த வகையில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும்விதமாக, தஞ்சாவூரில் உள்ள விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதற்காக, அந்தக் கட்சியின் செயலாளர் எஸ்.நியாஸ், மாநில வர்த்தக அணிச் செயலாளர் எஸ்.சக்கரைக்கனி, புதுக்கோட்டை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பாண்டியன் மற்றும் பெண்கள் உட்பட, கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், புதுக்கோட்டையிலிருந்து இன்று முற்பகலில் புறப்பட்டு தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தை நோக்கி  வாகனங்களில் சென்றார்கள்.

கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கோஷமிட்டபடி வாகனங்களில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு புதுக்கோட்டை மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் மன்னர் மன்னன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காத்திருந்தனர். வரிசைகட்டி வந்த அந்த அமைப்பின் வாகனங்களை வழிமறித்து, அத்தனை பேரையும் கைதுசெய்து, கந்தர்வகோட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலை ஆறு மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.