கிராமத்துக்கு திடீர் விசிட் அடித்து சாப்பிட்ட யோகி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக்குச் சென்று, குடும்பத்தினருடன் இரவு உணவில் கலந்துகொண்டுள்ளார். "வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே முதல்வர் யோகி இப்படி நடந்துகொள்கிறார்" என நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவருகின்றனர். 

யோகி ஆதித்யநாத்

'கிராம் ஸ்வரஜ்யா யோஜ்னா' திட்டத்தை, ஐம்பதாயிரம் ஊராட்சிகளில் வாழும் கிராமப்புற மக்களிடம் கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது, அம்மாநில அரசு. நலத் திட்டங்கள் அனைத்தும் உரிய நேரத்தில் மக்களிடம் முறையாகச் சென்றடைகிறதா என்பதைக் கண்காணிக்க, பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கந்தாபூர் கிராமத்தில் முதல்வர் யோகி நேற்று ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, திடீரென பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தயாராம் வீட்டுக்குச் சென்றுள்ளார். முன்னதாக, மோடி அரசுக்கு எதிராக டெல்லி டக்கடோரா மைதானத்தில் `அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்' என்ற பேரணியை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி நேற்று தொடங்கினார். அதில், `மோடி அரசு, பட்டியலின சமூக மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கும் உரிய அங்கீகாரம் கொடுப்பதில்லை. இந்திய அரசியலமைப்பைச் சீர்குலைத்து, பட்டியலின மக்கள்மீது தாக்குதல்களைத் தொடங்கிவருகின்றனர்' எனக் குற்றம்சாட்டிப் பேசினார். 

யோகி

இந்த நிலையில்தான், தயாராம் என்பவரின் வீட்டுக்குச் சென்ற யோகி ஆதித்யநாத், அவரின் குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டார் என கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய தயாராம், `'வீட்டின் உள்ளே முதல்வர் வந்த உடன் என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்து நின்றோம். எங்களுடன் இரவு உணவில் கலந்துகொண்டது, எங்களுடன் சரிசமமாக அமர்ந்து உணவு உட்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார். 

யோகி

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் யோகி, `கிராம் ஸ்வரஜ்யா யோஜ்னா' திட்டம், அடிப்படை மக்களிடமும் சென்றடைய வேண்டும். அதனால், கட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்' என்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல், பட்டியலின மக்களுக்கு மோடி எதிரானவர் என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்க யோகி மறுத்துவிட்டார். 

இதையடுத்து, தனது ஆய்வு விசிட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. `வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைக் குறிவைத்துத்தான் முதல்வர் யோகி இப்படி நடந்துகொள்கிறார். பட்டியலின மக்களுடன் உணவு சாப்பிட்டதை புகைப்படங்களாக பகிர வேண்டிய அவசியம் என்ன?’ என நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!