``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்

தி.மு.க தலைவரை சந்திக்க வேண்டும் என அனுமதி கேட்டபோது, ``இன்று சூரசம்ஹாரம்.  கருணாநிதியைச் சந்திக்க உகந்த நாள் இல்லை” என ஸ்டாலின் தரப்பில் இருந்து பதில் வந்ததாக விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் குறித்து ஒர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அரசியல் குறித்தும் தி.மு.க குறித்தும் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த விஜயகாந்த்,  ``ஸ்டாலின் தலைமையில் நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில், அவரை முன்னிலைப் படுத்தியே அனைத்துச் செயல்களும் நடைபெறுகின்றன. மற்ற கட்சிகளுக்கும் தனி நிலைப்பாடு உள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு நான் ஏன் ஸ்டாலின் துதி பாடவேண்டும்? அவர் என்ன கருணாநிதியா? இதுவே கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியிருந்தால் நான் முதல் ஆளாகச் சென்றிருப்பேன். ஸ்டாலின் தன்னை கருணாநிதியாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார். 

கருணாநிதியை மற்றவர்கள் சந்திக்கும் முன் நான் சந்திக்க விரும்பினேன். அதற்காக எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். பல்வேறு முறைகளையும் கையாண்டேன். இறுதியில் கருணாநிதியைச் சந்திக்க ஸ்டாலினிடம் இருந்து பதில் வரும் எனக் கூறினார்கள். அதைத்தொடர்ந்து அவர் தரப்பிடம் இருந்து ஒரு போன் வந்தது. அதில், `இன்று சூரசம்ஹாரம். அதனால் இன்று கருணாநிதியைச் சந்திக்க உகந்த நாள் இல்லை” எனத் தெரிவித்தார்கள். அதன் பின் அவர்கள் என்னைத் தொடர்புகொள்ளவே இல்லை. எனக்கும் கருணாநிதியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் போய்விட்டது. நான் கருணாநிதியைச் சந்திக்க வேண்டும் என எண்ணியதை, ஸ்டாலின் ஏன் தடுத்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. கருணாநியிடம் உடல் நலம் விசாரிக்க மட்டுமே நான் விரும்பினேன். ஆனால், ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் எனத் தெரியவில்லை. 2016 தேர்தலின்போதே ஸ்டாலின் முதல்வராகி இருக்க வேண்டியது. அப்போது நாங்கள் கேட்ட சீட்டை எங்களுக்கு அளிக்க மறுத்ததால் நாங்கள் அவருடன் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. அப்படி நடந்திருந்தால் இந்த நேரம் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருப்பார். அருமையான வாய்ப்பை ஸ்டாலின் தவறவிட்டு விட்டார்.” என கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!