` 'என்மீது கோபத்தைக் காட்ட இதுதான் காரணம்'- திவாகரனுக்கு எதிராக சீறும் தினகரன் | Dinakaran slams diwakaran

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (25/04/2018)

கடைசி தொடர்பு:14:15 (25/04/2018)

` 'என்மீது கோபத்தைக் காட்ட இதுதான் காரணம்'- திவாகரனுக்கு எதிராக சீறும் தினகரன்

சசிகலாவின் சகோதரர் திவாகரன் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள டி.டி.வி.தினகரன், 'பல நாள்களாக, மைக்கை பார்த்தால் ஏதோ பேசிவருகிறார் திவாகரன்' என்று கிண்டலடித்துள்ளார்.

தினகரன்

கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திவாகரன், பல நாள்களாக மைக்கை பார்த்தால் ஏதோ பேசிவருகிறார். கட்சி என்பது  வேறு, உறவு என்பது வேறு. தனி நபர் கட்சியை ஆளப் பார்க்கிறார்கள். சசிகலா தம்பி என்பதால்தான் திவாகரனுடன் உறவினர்கள் பழகிவருகிறார்கள். திவாகரனை நான் மதிக்கிறேன். உறவுகள்மீது அன்பாக இருப்பேன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில், 'அண்ணாவும் திராவிடமும் இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது' என திவாகரன் கூறிவருகிறார். அவர் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படிப் பேசுகிறார். 

1984 - ம் ஆண்டு, எம்.ஜி.ஆருக்கு எதிராக எஸ்.டி.சோமசுந்தரம் நடத்திய நமது கழகத்தில் திவாகரன் செயல்பட்டவர். அந்த நமது கழகத்தில் அண்ணாவும் திராவிடமும் இல்லை என்பது திவாகரனுக்குத் தெரியாதா? திவாகரன், சில நாள்களாக சசிகலாவையும், தினகரனையும் தவறாகப் பேசிவருவதாகப் பலரும் சொன்னார்கள். அதுபற்றிக் கவலை இல்லை. கட்சியில் தனிநபருக்கு அனுமதி இல்லை. ஜெயலலிதா இருக்கும் போதிலிருந்து நான் அரசியலில் இருந்துவருகிறேன் என்பதற்காக சசிகலா என்னை துணைப் பொதுச் செயலாளராக ஆக்கினார். இதற்காக, சசிகலா மீது உள்ள கோபத்தை என் மீது காட்டிவருகிறார். இதனால் எனக்கு எந்த பாதிப்பும் வராது. 

உறவினர் என்கிற முறையில் திவாகரனுக்கு மரியாதை உண்டு. மன்னார்குடியில், வரும் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாபெரும் வெற்றிபெறுவார். திவாகரன், தற்போது ஏஜென்ட் போன்று சிலரை வைத்துக்கொண்டு தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார். அரசியல்குறித்து திவாகரனிடமும் உறவினர்களிடமும் பேசவில்லை. திவாகரன் சுபாவம் எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு முறைகூட சிறையில் இருக்கும் சசிகலாவை சென்று அவர் பார்க்கவில்லை. இது, கட்சி கிளை அலுவலகம் திறக்க கம்பெனிகள் இல்லை. கட்சியைக் கட்சியாக நடத்துவோம்" என்று கூறினார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க