வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (26/04/2018)

கடைசி தொடர்பு:18:59 (26/04/2018)

மோடி, ஜெயலலிதா ஃபார்முலா... இவருக்குக் கைகொடுக்குமா?! #VikatanInfographics

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வரை முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இந்திய அரசியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடக் காரணம் என்னவாக இருக்கும்?

மோடி, ஜெயலலிதா ஃபார்முலா... இவருக்குக் கைகொடுக்குமா?! #VikatanInfographics

ரசியல் தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது காலங்காலமாய் இந்திய அரசியலின் உத்திகளில் ஒன்று. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசியிலும், வதோதராவிலும் ஜெயித்த மோடி வாரணாசியைத் தேர்ந்தெடுத்தார். காங்கேயமா, பர்கூரா என்றால் பர்கூரைத் தேர்வு செய்தார் ஜெயலலிதா. இந்திரா காந்தி தொடங்கி மோடிவரை எல்லாருக்கும் கைகொடுத்த இந்த இரட்டைத் தொகுதி ஃபார்முலாவை இப்போது கையில் எடுத்திருப்பவர் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

காவிரிப் பிரச்னை சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தில், கர்நாடக சட்டசபைத் தேர்தல் பிரசாரமும் சூடுபிடித்திருக்கிறது என்றே கூறலாம். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான சித்தராமையா, தனக்கு அரசியல் அந்தஸ்து வழங்கிய மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியிலும், கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பதாமி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இரண்டு சட்டசபைத் தொகுதிகளில் சித்தராமையா போட்டியிடுவதாகத் தகவல் வெளியானவுடன், பி.ஜே.பி. முதல்வர் வேட்பாளரான பி.எஸ். எடியூரப்பா, ''கட்சி மேலிடம் உத்தரவிட்டால் நானும் இரண்டு தொகுதிகளில், குறிப்பாக சித்தராமையாவை எதிர்த்து, அவருடைய தொகுதியிலேயே போட்டியிடத் தயார்" என்றார். அப்படி எதுவும் நடந்திருந்தால், முதல்வர் பதவிக்கான வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் மோதிக் கொள்வது கர்நாடக மாநிலத்தில் முதல்முறையாக நடந்திருக்கக்கூடும். ஆனால், அதுபோன்ற சூழல் ஏதும் இப்போது இல்லை.

சித்தாராமையா - எடியூரப்பா

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான அலை வீசிக்கொண்டிருந்த சமயத்தில், இரண்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்  மோடி. உத்தரப்பிரதேசத்தில் உள்ள புனித ஸ்தலமான வாரணாசி மற்றும் தன் சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள வதோதரா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் அபார வெற்றி பெற்று, பிரதமர் பதவிக்கான அரியணை ஏறினார் மோடி. பின்னர், வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியை பிரதமர் மோடி ராஜினாமா செய்தார்.

தமிழகத்தில் 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பர்கூர், காங்கேயம் ஆகிய இரண்டு பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. 2001-ம் ஆண்டு தேர்தலில் புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி, புவனகிரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்து அதிர்ச்சியளித்தார் அவர். ஆனால், இரண்டுக்கு மேற்பட்ட தொகுதி மற்றும் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நான்கு தொகுதிகளிலும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

மோடி , ஜெயலலிதா, சோனியா

1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் அடங்கிய அமேதி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இரண்டிலும் வெற்றி பெற்றார். குறிப்பாக, பெல்லாரி தொகுதியில் பாரதிய ஜனதாவின் மூத்தத் தலைவரான சுஷ்மா ஸ்வராஜைத் தோற்கடித்தார் சோனியா. இவ்வாறு மறைந்த பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வரை முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இந்திய அரசியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடக் காரணம் என்னவாக இருக்கும்?

பெரும்பாலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுபவர்கள், அந்தக் கட்சியின் நட்சத்திர வேட்பாளராகத்தான் இருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக முதல்வர் அல்லது பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியக் காரணம், தங்களின் கட்சி மெஜாரிட்டி தொகுதிகளில் வெற்றிபெற்று, பிரதமர் அல்லது முதல்வர் வேட்பாளர் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதால்தான். அதுமட்டுமல்லாமல் ''இரண்டு தொகுதிகளில் ஸ்டார் வேட்பாளர்களை நிறுத்தினால் வாக்காளர்களை எளிதாகத் திரட்டி, தங்கள் கட்சியின் பெருமையை நிலைநாட்ட நல்ல வாய்ப்பாக அமையும்" என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். மேலும் குறிப்பிட்ட தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்பட்டால், அது அரசுக்குக் கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடுகிறார்கள்.

சட்டம் என்ன சொல்கிறது?

1951-ல் இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33 (7) பிரிவின் கீழ், பொதுத் தேர்தலில் நிற்பவர்கள் இரண்டு தொகுதிகளுக்கு மிகாமல் நிற்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 1985-ம் ஆண்டு என்.டி.ராமா ராவ் மூன்று இடங்களில் நின்று வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் என்ன செய்வார்கள்?

'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 70-வது பிரிவின் கீழ், ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றால் 10 நாள்களுக்குள் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். பின் அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படவேண்டும். கர்நாடகத் தேர்தலில், சித்தராமையாவைத் தவிர்த்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமியும் ராம்நகரா மற்றும் சன்னாபட்னா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவ்வாறு இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மனுவில், ''இரண்டு தொகுதிகளில் போட்டியிடுபவர், இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் மறுதேர்தல் நடத்துவதற்கு மக்களின் வரிப் பணம் வீணாகச் செலவிடப்படும். மறுதேர்தல் நடத்துவதற்கு ஆள் பலமும் வீணாகச் செலவழிக்கப்படுவது தேவையற்ற ஒன்றாகும். மேலும், மக்கள் நம்பி வாக்களித்த ஒருவர், தன் பதவியை ராஜினாமா செய்தால் அது வாக்களித்தவர்களுக்கு இழைக்கும் அநீதி. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழுள்ள 33 (7)-வது பிரிவை மாற்றியமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

மேலும், ''இச்சட்டம் மாற்றியமைக்கப்படவில்லை என்றால், மறுதேர்தல் நடத்துவதற்கு ஏற்படும் செலவை ராஜினாமா செய்யும் வேட்பாளரே ஏற்க வேண்டும்" என்றும் தேர்தல் ஆணையம் அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்குமானால், கர்நாடக சட்டசபைத் தேர்தலே, ஒரே வேட்பாளர், இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் கடைசித் தேர்தலாக இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்