வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (26/04/2018)

கடைசி தொடர்பு:19:37 (26/04/2018)

''அவரை அமைச்சர் வேலை மட்டும் பார்க்கச் சொல்லுங்க!'' - அமைச்சர் ஜெயக்குமார் மீது பாயும் ஶ்ரீபிரியா

''நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த சில நாள்களிலேயே ஒரு வக்கீல் விலகிவிட்டார். அடுத்து, நடிகை ஶ்ரீபிரியாவும் விலகப்போவதாகச் செய்தி வந்துகொண்டிருக்கிறது. தன் சொந்தக் கட்சியில் இருக்கும் 16 பேரையே கட்டிக்காக்க முடியாத கமல்ஹாசனால் தமிழ்நாட்டை எப்படி நிர்வகிக்க முடியும்?'' என்று கிண்டலாகக் கேட்டுள்ளார், அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார். 'அப்படியா?' என்ற ஒற்றைக் கேள்வியை ஶ்ரீபிரியாவிடம் கேட்டோம். அவரின் பதில், அவர் வார்த்தைகளிலேயே...

ஶ்ரீபிரியா

''முதல்ல, நாலு மாசம் கழிச்சு நீங்க எந்தக் கட்சியில் இருப்பீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா ஜெயக்குமார்? ஓ.பி.எஸ்ஸா, ஈ.பி.எஸ்ஸா? இல்லைன்னா தினகரன் கட்சியிலா? இதையே சொல்லமுடியாத நீங்க, எங்க கட்சி பற்றி விமர்சனம் செய்யலாமா?

 உங்க கோட்டையே சரிஞ்சுட்டிருக்கு. அதைப் பாருங்க முதல்ல. அதுல விழும் கல்லை எடுத்து சரி பண்ணப் பாருங்க. உங்க வேலையை மட்டும் பார்த்தா நல்லா இருக்கும். நான் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியைவிட்டு விலகப்போறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா? இல்ல ஊடகங்கள்கிட்ட சொன்னேனா..?  நான் கட்சியைவிட்டு விலகப்போறேங்கிறது உங்களுக்கு வந்த தகவலா, இல்லே நீங்களே உருவாக்கும் கதையா?

கட்சி என்பது பொறந்த வீடோ, புகுந்த வீடோ கிடையாதுங்க, நினைச்சா வெளியேறிப் போறதுக்கு. இது நானா விரும்பிச் சேர்ந்த கட்சி. இதுக்கு முன்னாடி எத்தனையோ அரசியல் கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்திருக்கு. மக்கள் நீதி மய்யத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன்னா..,. மக்களுக்கு நேர்மையா ஏதாவது பண்ணணும் என்கிற ஆர்வம் எனக்கும் இருந்துச்சு. அதனால்தான் ஒத்தக் கருத்து இருக்கிற மக்கள் மய்யத்தில் சேர்ந்தேன். உங்களுக்குத் தலைமையே யாருன்னு தெரியாது. நான், ஒரு நல்ல தலைமை இருக்கும் கட்சியில் இருக்கேன். அதனால், நான் கட்சியைவிட்டு விலகப்போறேன்னு சொல்றது, அதை பரப்புறது இதெல்லாம் உங்களுக்குத்தான் கேவலம்.

நடிகை

16 பேரை வெச்சு கட்சி நடத்தத் தெரியாதவர் மக்களை எப்படிக் காப்பாத்தப் போறார்னு கேட்கற நீங்க, சென்னையில்தானே குடியிருக்கீங்க? உங்க ஆட்சி நடக்கிற ஒரு நாட்டோட தலைநகர் சென்னை. அங்கே இதோ ஆழ்வார்பேட்டையில் இருக்கும் ஒரு கட்சியின் மேல் நிலை உறுப்பினர்களில் ஒருத்தர் போயிட்டாங்களா, இருக்காங்களான்னே தெரியலை... இந்த அளவுக்கு விவரம் தெரியாம இருக்கிற நீங்களும், உங்க கட்சியும் மட்டும் தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்றப் போறீங்க? நல்ல உதவியாளர், நல்ல பி.ஆர்..ஓ. வெச்சு ஒரு விஷயத்தை கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு பேசினீங்கன்னா நல்லது. தவிர, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து யாரு விலகப்போறாங்க, யாரு இருக்கப்போறாங்கன்னு பார்க்கிறதுதான் உங்க வேலையா? அமைச்சரான நீங்க தயவுபண்ணி உங்க வேலையை மட்டும் பாருங்க. அதுக்குத்தானே மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. 

உங்க கட்சியில் வாரத்துக்கு ஒரு அஜெண்டா வெச்சிருக்கீங்க. 'எருமை மாடு குளிச்சாலும் கூட்டம் வரும். நடிகர் வந்தால் கூட்டம் வராதா?'னு கேட்கிறீங்க? நீங்க வந்தால், அந்த எருமை மாடும் வராதே. அப்புறம் உங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்த ஒரு சாதாரண பழமொழிகூட தெரியலை. பூனை சூடு போட்டுக்கிட்டா புலியாகுமான்னுதான் சொல்வாங்க. நீங்க யானையாகுமான்னு கேட்குறீங்க. யாராவது உங்களுக்குப் பழமொழி புத்தகம் வாங்கி பரிசு கொடுத்தா நல்லா இருக்கும். உங்க கட்சி ஆட்சியிலே இருக்குது அப்படிங்கிறதுக்காகப் பழமொழியை எல்லாம் மாற்ற முடியாதுங்க. இதோ, இந்தப் பேட்டியைக்கூட நான் இங்கேதான், மக்கள் நீதி மய்யம் கட்சி ஆஃபீஸிலில் உட்கார்ந்துட்டுத்தான் கொடுத்துட்டிருக்கேன்.  போதுமா?'' என்று அமைதியாக அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்தார் ஶ்ரீபிரியா.

 


டிரெண்டிங் @ விகடன்