வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (29/04/2018)

கடைசி தொடர்பு:18:30 (29/04/2018)

'தினகரன் மற்றும் திவாகரனால் எவ்விதப் பலனுமில்லை!' - ஜெயக்குமார் பளீச்

'துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட  11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில், நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சனம் செய்யக் கூடாது’ என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

ஜெயக்குமார்

பாவேந்தர் பாரதிதாசனின் 128-வது பிறந்தநாளான இன்று, சென்னை மெரினா கடற்கரையில் அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு வாங்கப்பட்டுள்ளதாகத் தினகரன் அணி தங்கதமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டுகிறார் என்று நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ''எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சனம் செய்யக் கூடாது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அரசியல் தலையீடு இல்லை'' என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். அதனால், தினகரனும் திவாகரனும் புதிய கட்சிகள் தொடங்குவதால் மக்களுக்கு எவ்விதப் பலனுமில்லை. எங்களுக்கு அவர்களைப் பற்றிக் கவலையில்லை எனக் கூறினார்.