இப்படியெல்லாம் பொய் சொல்வார்களா? - பிரசார சிக்கலில் கர்நாடக பா.ஜ.க. | Ashok Poojary is still alive Karnataka BJP campaign in trouble

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (05/05/2018)

கடைசி தொடர்பு:12:46 (05/05/2018)

இப்படியெல்லாம் பொய் சொல்வார்களா? - பிரசார சிக்கலில் கர்நாடக பா.ஜ.க.

கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்துவிட்டதாகப் பா.ஜ.க-வினர் பொய் பிரசாரம் செய்த தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

மோடி

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே 12-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் ஆளும் காங்கிரஸை வீழ்த்த பா.ஜ.க-வின் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு, தேர்தல் பணிகளைக் கவனித்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சித்தராமையாவை கடுமையாகப் பா.ஜ.க-வினர் விமர்சித்துவருகின்றனர். மேலும், இந்தத் தேர்தலில் கடந்த 2015-ல் ஏற்பட்ட கலவரத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 23 தொண்டர்கள் மதவாத அமைப்புகளால் கொல்லப்பட்டச் சம்பவத்தை முன்னிறுத்தி பிரசாரத்தில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தால் கலவரங்கள் அதிகரிக்கும் என்பதே பா.ஜ.க-வினர் பிரசாரமாக இருந்துவருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியும், மதவாதக் கொலை குறித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், 'இந்துத்துவா அமைப்புக்கு உதவுவதாகக் கூறி மதவாத அமைப்பினரால் பா.ஜ.க-வைச் சேர்ந்த இரண்டு டஜன் தொண்டர்களை கொலை செய்துவிட்டனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சித்தராமையா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று கடுமையாக விமர்சித்தார். 

இந்த நிலையில், பா.ஜ.க. சட்ட வல்லுநர் ஷோபா கரண்ட்லஜே, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 2015-ல் நடந்த கலவரம் சம்பந்தமாகக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், மதக் கலவரத்தால் இறந்த 23 பா.ஜ.க-வினர் பெயர்களும் முழு விவரங்களையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

அசோக் பூஜரி

அசோக் பூஜரி என்பவர் குறித்து அந்தக்கடிதத்தில், வேலை முடிந்து வீடு திரும்பும்போது பைக்கில் வந்த மர்மநபர்கள், காவி நிறத்துண்டை தலையில் கட்டியதற்காக அவரைக் கொலை செய்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இறந்ததாகச் சொல்லப்பட்ட அசோக் பூஜரி, உடுப்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உயிரோடு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை, ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்து அம்பலப்படுத்தியது. இதனால், காங்கிரஸ் கட்சியினர், அசோக் பூஜரி விவகாரத்தைக் கையில் எடுத்து பா.ஜ.க.வினருக்கு எதிராகக் குற்றம்சாட்டிவருகின்றனர். இது. பா.ஜ.க.வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

அசோக் பூஜரி விவகாரம் குறித்து கர்நாடக பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் கூறுகையில், 'பா.ஜ.க. சட்ட வல்லுநர் ஷோபா கரண்ட்லஜே எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே பேசினோம். அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. பா.ஜ.க என்றும்பொய் கூறாது' என்றார்.