`மறைமுகக் கூட்டணி.. இவர்களை நம்பாதீர்கள்' - கர்நாடகாவில் நரேந்திர மோடி பிரசாரம் | modi speak in public meeting people need to know the tacit alliance between Congress and Janata Dal

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (05/05/2018)

கடைசி தொடர்பு:20:00 (05/05/2018)

`மறைமுகக் கூட்டணி.. இவர்களை நம்பாதீர்கள்' - கர்நாடகாவில் நரேந்திர மோடி பிரசாரம்

கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது,`காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் இடையில் மறைமுக உடன்பாடு இருக்கிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

மோடி

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே நேரிடையாகப் போட்டி நிலவுகிறது. மும்முனைப் போட்டியால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காகப் பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தேவகவுடா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பம்பரமாகச் சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து துமாகுரா என்ற இடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``கர்நாடகாவில் காங்கிரஸைக் காப்பாற்றுவதற்காக தேவகவுடா தலைமையிலான கட்சி செயல்பட்டு வருகிறது. நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பொய்யான வாக்குறுதிகளை அளித்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்துவிட்டது. விவசாயிகள் மீது அக்கறை காட்டாமல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. விவசாயிகளையும், ஏழைகளையும் புறந்தள்ளிய காங்கிரஸ், தேர்தல் பிரசாரத்தின்போது வறுமையை ஒழித்துவிடுவோம் என்று கூறி வருகிறது. அதை மக்கள் நம்ப வேண்டாம். 

காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி ஆதரித்து வருகிறது. கர்நாடகாவில் எதிரிகளாகப் போராடுகிறார்கள். ஆனால், பெங்களூரில் ஜனதாதளக் கட்சியினர் காங்கிரஸ் மேயரை ஆதரிக்கிறார்கள். இந்தக் கட்சிகளுக்கும் இடையேயான மறைமுக உடன்பாடு இருக்கிறது. இரு கட்சிகளையும் கர்நாடக மக்கள் நம்ப வேண்டாம்" என்றார்.