'மேற்குவங்கத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணியா?!' - ட்விட்டரில் கொந்தளித்த சீதாராம் யெச்சூரி

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மம்தாவை வீழ்த்துவதற்காக, பா.ஜ.க-வுடன் சி.பி.எம் கைகோக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மறுத்துள்ளனர். 

சிபிஎம்

மேற்குவங்கத்தில், வரும் 14-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக, பா.ஜ.க-வும் சி.பி.எம் கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக, நேற்று தகவல் வெளியானது. 'இருவருக்கும் பொது எதிரியான மம்தாவை வீழ்த்துவதற்காக இப்படியொரு கூட்டணி உருவாகிறது' எனவும் காரணம் சொல்லப்பட்டது. இதற்கு உதாரணமாக, ' கடந்த வாரம் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நடந்த பேரணியில், இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்பட்டுள்ளன. மேற்குவங்கத்தின் சில இடங்களில் பா.ஜ.க-வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளன. அந்த இடங்களில், இவ்விரு கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த உள்ளன' எனவும் பேசப்பட்டுவருகிறது. ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்த மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், ' சில இடங்களில் மட்டுமே இணைப்புச் சூழல் உருவாகியுள்ளதாகவும், மற்றபடி தொகுதி பங்கீடுகள் எதுவும் இல்லை. இந்த அரசியல் நிலைப்பாடு கீழ்மட்ட அளவில்தான் எடுக்கப்பட்டுள்ளது. கொள்கை அளவில் எந்த மாற்றமும் இல்லை' எனத் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ` தங்கள் மீதுள்ள  ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்புவதற்காகவே இதுபோன்ற பொய்யான புகார்களையும் வதந்திகளையும் திரிணமுல் காங்கிரஸ் தெரிவித்துவருகிறது. இந்த இணைப்புச் செய்தியை நாங்கள் மறுத்துள்ளோம். பா.ஜ.க மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் எதிர்க்கிறோம்' எனக் கூறியிருக்கிறார். 

இதுகுறித்து சி.பி.எம் கட்சியின் தமிழ் மாநில முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். " இது தவறான தகவல். திரிணமுல் காங்கிரஸ் கட்சி தரப்பில்தான் இதுபோன்ற தகவல்களைப் பரப்புகின்றனர். இதுகுறித்து மேற்குவங்க சி.பி.எம் நிர்வாகிகளிடம் பேசினோம். அவர்களும் இந்தத் தகவலை மறுத்துள்ளனர்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!