Published:Updated:

உயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு! பாகம் - 1

உயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு! பாகம் - 1
உயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு! பாகம் - 1

செத்துக்கொண்டே செய்தி தந்தவர்கள்..! - முள்ளிவாய்க்காலில் புதையுண்ட வரலாறுகள்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் போர்க்குற்றம் என்றும் உலக மனிதவுரிமை இயக்கங்களால் பெரும் இனப்படுகொலை என்றும் அழுத்தமாகக் கூறப்படும் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் இனப்படுகொலையை சர்வதேச கவனத்துக்குப் போய்விடாமல் மறைக்க சிங்கள இனவெறிக் கொள்கையைக் கொண்ட இலங்கை அரசு, பகீரத பிரயத்தனங்களைச் செய்தது. பன்னாட்டு ஊடகச் செய்தியாளர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினருக்கு உயிராபத்து உண்டாக்கி அவர்களை வெளியேறச் செய்ததன் மூலம் இனப்படுகொலைக் குற்றத்தை மறைக்கமுடியும் என நினைத்தது, இலங்கை அரசு.

மானுட குலத்துக்கு எதிரான அந்த எண்ணத்தைப் பொசுக்கும்வகையில், ஈழத்தின் இறுதிப்போர் நடந்த சமயத்தில், விமானக் குண்டுவீச்சுகள், பல்குழல் உந்து எறிகணைகள், கொத்துக்குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகளின் தாக்குதலுக்கு நடுவில், உடல் உறுப்புகளும் உயிரும் எந்நேரமும் பறிக்கப்படும் அபாயச் சூழலில், போர்ச்செய்திகளை இறுதிவரை வெளியுலகத்துக்குத் தந்துகொண்டே இருந்ததும் முக்கியமான வரலாறு! 

முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் காலஞ்சென்ற மனிதர்களின் ரத்தமும் சதைகளுமாக அந்த உண்மைகள் புதையுண்டுபோகும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது எனப் பணியாற்றி, முள்வேலி முகாமுக்குள்ளும் அடைபட்டு, இன்று கனடாவின் வான்கூவர் நகரில் வசித்துவரும் வன்னி செய்தியாளர் சுரேன் கார்த்திகேசுவிடம் உரையாடினோம். 

அப்போது அவர் பகிர்ந்துகொண்டது :

``வன்னியில் இயக்கத்தின் தலைமையகம் இருந்தவரையில் கிளிநொச்சியில் வைத்தே `ஈழநாதம்’ நாளேடும் வெள்ளிநாதம் இதழும் அச்சிடப்பட்டுவந்தது. மூன்று அச்சு இயந்திரங்கள், 20 கணினிகள், நான்கு ஆண்டுகளுக்குத் தேவையான காகிதம், மை ஆகியன அப்போது கைவசம் இருந்தன. 2008 செப்டம்பரில் கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையின் தாக்குதல் நகரவும், அங்கிருந்து தருமபுரத்துக்கு ஈழநாதம் அலுவலகம் மாற்றப்பட்டது. தருமபுரம் வைத்தியசாலைச் சந்தியில் ஈழநாதம் அலுவலகம் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த வாய்க்காலில் படுத்திட்டம்.. எறிகணைகளின் வீச்சு நின்றபிறகு விசுவமடு பக்கம் நகந்திட்டம்.

பிறகு பொங்கலுக்கு உடையார்கட்டுக்குப் போயிட்டம். ஒரு உழவு எந்திரத்தில வச்சுத்தான் கொண்டுபோனம். அடுத்து தேவிபுரத்துக்கு நகர்ந்தோம். அந்த சமயம், ஆமி அடிச்சதில சுதந்திரபுரம் பகுதியில இருந்து சனம் கிளம்பிட்டது. அங்கு ஓர் அச்சகம் கைவிடப்பட்டிருந்தது. அதைப் பயன்படுத்தமுடிஞ்சது. பிறகு தேவிபுரத்துக்குப் போனது.. பிப்ரவரி 10 அன்றுவரை அங்கவச்சு பேப்பரை அடிச்சம். 11 காலையில் ஈழநாதம் இருந்த காணிக்குள்ள பல்குழல் எறிகணைகளின் தாக்குதல் கடுமையா விழுந்தது. இருந்த ஜெனரேட்டர் பழுதாகிட்டது. பிளேட்மேக்கரில கண்ணாடி உடைஞ்சிட்டது. ஆஃப்செட் இயந்திரமும் கணினிகளும் பழுதாகிப்போச்சு. அதனால ஈழநாதத்தை நிறுத்தவேண்டிய நிலைமை!

எல்லாத்தையும் எடுத்திட்டுப்போய் இரணைப்பாலையில திருத்தி எடுத்திட்டுவந்தம். மீண்டும் பிப்.20 முதல்.. அன்று இன்னும் நன்றா நினைவிருக்கு இரணைப்பாலைக்கும் புதுமாத்தளனுக்கும் இடைப்பட்ட ஒரு பகுதியில, சாரத்தை(லுங்கி) விரிச்சுப்போட்டு, அதில கணினிய வச்சு வடிவமைப்பைச் செய்து, வழமைபோல அச்செடுத்து ஈழநாதத்தைக் கொண்டுவந்தம்.

மார்ச்சில வலைஞர் மடம், ஏப்பிரலில் இரட்டைவாய்க்கால் என அடுத்தடுத்து ஈழநாதமானது நகர்ந்துகொண்டே வெளியாகிவந்தது. 1990 முதல் கடைசிவரையிலும் பொன்னையா ஜெயராஜை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளியாகிய ஈழநாதம் பேப்பர் மே 9 ம் நாள்வரை வந்துகொண்டிருந்தது.

சனம் செத்துக்கொண்டிருக்கையில பேப்பரைக் கொண்டுவரவேண்டிய தேவை என்னஎண்டு வெளியேவந்து என்னிடம் நிறைய பேர் கேட்டாங்கள்.. உள்ளே நிண்ட சனத்துக்குத் தெரியும் பேப்பர் தேவையென்றது.. பத்து மீட்டர் தொலைவில நிண்ட உறவுகளோ நண்பர்களோ என்ன ஆனாங்கள்.. அவங்கள் உயிரோடத்தான் இருக்கிறாங்களா எண்டு அறிய, ஈழநாதம் அவாவுக்கு அவசியமா இருந்தது. நெருங்கின மனிசரோட சாவுக்குப் போய் அழமுடியாத சூழலில அவங்களுடைய கதியத் தெரிஞ்சுகொள்றதுக்கு ஈழநாதம் அவசியமா இருந்தது.

எனக்கு ஏப்.25 அன்று தாக்குதலில் சிக்கினன். கடுமையான காயம். உறவுகளும் சக பணியாளர்களும் ஆமிப்பக்கம் போகச் சொன்னாங்கள். நான் மறுத்திட்டன்.. மே 9,10வரைக்கும் தாக்குதலில காயம்பட்ட ஆக்களில் ரொம்பவும் மோசமான காயக்காரரைக் கூட்டிக்கொண்டுபோக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திண்ட கப்பல், முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு அப்பப்போ வந்துபோனது. அதில போகிறதுக்கு எனக்கு பாஸ் தரப்பட்டது. கடைசிவரைக்கும் என்ன நடக்குதெண்டு தெரியாமல் அங்கயிருந்து நகர எனக்கு விருப்பமில்ல..

ஒரு கட்டத்துக்கு மேல என் காயங்கள் மோசமாகிட்டது. ஆமிப்பக்கம் போகவேண்டிய நிலை. 17 மாலையில எங்களை ஆமிவண்டியில ஏத்தி, திருகோணமலைக்கும் மணலாற்றுக்கும் இடையில பதவியான்ற இடத்தில நிறுத்தினாங்க. பிறகு குருநாகல் சிறிலங்கா படைமுகாமுக்குக் கொண்டுபோய், இரவோடு இரவாக அங்குமிங்குமாக அலைக்கழிச்சதில, 18 காலையில ஒரு புல் தரையில மயங்கி விழுந்திட்டன்.. அதுக்குப் பிறகு வவுனியா மருத்துவமனையில சேர்த்தாங்க.. அங்கயிருந்து செட்டிகுளம் முள்வேலி முகாமுக்கு மாத்தி, ஒருவழியா கனடாவுக்கு வந்து நிக்கிறன்” என்று சுரேன் சொல்லி முடிக்கையில், ஒன்பதாண்டுகளுக்கு முந்தைய அனைத்தும் நம் கண்முன் வந்துநிற்கின்றன. 

களமுனை அதிதைரியசாலி சகிலா அக்கா!

போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெள்ள மெள்ள ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறார்கள்.

இறுதியுத்தகாலப்பகுதியில் செய்தியாளராகக் கடமையாற்றியவர் சகிலா. செய்தியாளராகப் பணியாற்றியவர்களில் ஒரே பெண் செய்தியாளரும் இவரே. குடும்பத்தில் இருவர் மாவீரர்கள். யுத்தத்தின் பின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. சிறையிலிருந்து விடுதலையாகியதும் அவளுக்குக் கிடைத்தது, சமூகப் புறக்கணிப்பு. பல துயரங்களைச் சுமந்த ஒரு பெண்ணாக, சகிலா அக்காவின் துணிச்சல் மிக்க ஊடகப்பணிக்காகவே அவர் மதிக்கப்படவேண்டியவர்.

அதிகாலை நேரம், அநேகமான மக்கள் நித்திரையில் இருக்க, அநேகமான மக்கள் அங்கயும் இங்கயும் என்று மாறி மாறி ஓடிக்கொண்டிருந்த நேரமது. எறிகணைகள் வீழ்ந்து படுகாயமடைந்துகொண்டிருப்பார்கள். குண்டுச்சத்தங்கள் கேட்கும் திசையை நோக்கி சகிலாவின் கமரா விரைந்துசெல்லும்.

மார்ச் 24 அன்று காலை 5 மணி புதுமாத்தளன் நீர்ப்பரப்பினைத் தாண்டி படையினரின் நிலைகளிலிருந்து ஏவப்பட்ட ஆர்.பி.ஜி. உந்துகணை ஒன்று வைத்தியசாலையின் பின்புறத்தில் வசித்த பெண் ஒருவரின் கால்கள் துளைத்துக்கொண்டு வெடிக்காதநிலையில் இருந்துள்ளது. யுத்த காலத்தில் வெளியான ஒளிப்படங்களில் இதைப் பார்த்திருக்கலாம். சத்தம் கேட்கும் திசையை நோக்கி ஓடிச்சென்ற உறவினர்கள் வெடிக்காதநிலையில் இருந்த உந்துகணையோடு காயமடைந்த பெண்ணை வைத்தியசாலைக்குக் கொண்டுவந்திருந்தனர். அங்கு கடமையிலிருந்த மருத்துவர்கள் உடனடியாகச் செயற்பட்டு அப்பெண்ணைக் காப்பாற்றியிருந்தனர். இது எவ்வளவு பெரிய சவால் நிறைந்தது என்று அனைவருக்கும் தெரியும். அன்று அந்த உந்துகணை வெடித்திருந்தால் வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட பலர் இறந்திருப்பார்கள்.

``அக்கா நீங்கள் எப்படி பயமில்லாமல் அதில நிண்டீங்கள்“ என்று கேட்க...

``உனக்கு தெரியாதடா, நான் விடியப்பறமே எழும்பிடுவன். பகலில் சனமென்று ஒரு கிணற்றடியில குளிக்கப்போறனான். வழமையாக வெள்ளனவே நான் வைத்தியசாலைக்குப் போடுவன். அன்றும் அப்படித்தான் போனன். நான் பயப்படேல. எப்படியாவது அந்தப் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வரவேணும் என்று அதில் கிடந்த துணியில கிடத்தித்தான் தூக்கிகொண்டு வந்தது. வைத்தியசாலைக்குக் கொண்டுவந்தவுடன்; அதில் இருந்த எல்லாரும் ஓடிட்டினம். யாரோ ஒரு இயக்க டொக்டர், நிறைய பேரைக் காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும்தான் அந்தப்பிள்ளையைக் காப்பாற்றினாங்கள்” என எப்போதும்போல அப்பாவித்தனமாகப் பேசும் சகிலா அக்கா, இப்போது ஊடகத்துறையினை விட்டு விலகியிருந்தாலும் நிச்சயம் மதிக்கப்படவேண்டிய ஒருவர். இணையதளங்களில் கிடக்கும் இறுதியுத்தகால புகைப்படங்களைப் பலவற்றை அவரே எடுத்திருந்தார்.

ஒரு முறை ... பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், களுவாவாடி, இரட்டைவாய்க்கால், தனிப்பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு,வட்டுவாகல் மேற்கு ஆகிய பிரதேசங்களே இறுதியுத்தப் பிரதேசங்கள். இதில் வட்டுவாகல் மேற்கு மட்டும் இறுதி நாள்களிலேயே மக்கள் அதிகளவு ஒதுங்கிய பிரதேசம்.

இதை நான்காகப் பிரிக்கலாம்.

1) பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை

2) வலைஞர்மடம்,களுவாவாடி,இரட்டைவாய்கால்

3) தனிப்பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு

4) வட்டுவாகல் மேற்கு

இதில் முதல் பிரிவில் உள்ள பகுதி, 2009 ஏப்ரல் 20, 21 ஆகிய நாள்களில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் படையினரின் பகுதிக்குச் சென்று விட்டார்கள்.

இதில் அம்பலவன்பொக்கணைப் பிரதேசத்திலேயே சகிலா அக்காவும் அவரது தாயாரும் வசித்து வந்திருந்தனர்.

சிறிலங்கா படையினர் அம்பலவன்பொக்கணையை அண்மித்துக்கொண்டு இருந்தபொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவலரண்கள் வலைஞர்மடம் பகுதியினை அண்மித்து அமைக்கப்பட்டிருந்தது. வலைஞர்மடத்தினைத் தாண்டி யாரும் முள்ளிவாய்க்காலுக்கு வரமுடியாதநிலை. அம்பலவண்பொக்கணையில் இருந்த பெரும்பாலானவர்கள் படையினரின் பக்கமும் முள்ளிவாய்க்கால் பக்கமும் முதல்நாள் சென்றுவிட்டனர். அதற்குள் அகப்பட்டிருந்த சகிலா அக்காவும் தாயாரும் உண்மையிலே படையினரின் பக்கமே செல்லவேண்டும். முள்ளிவாய்க்கால் வருவதற்கு வழியேதும் இல்லை. வருவதென்றால் விடுதலைப்புலிகளின் காவலரண்களைத்தாண்டித்தான் வரவேண்டும். அப்படி வந்தால் அரசபடையினரின் எறிகணைத் தாக்குதலை எதிர்கொண்டே ஆகவேண்டிய நிலை. இந்த நேரத்தில்தான் தற்துணிவோடு வலைஞர்மடம் கடற்பகுதிக்குச் சென்ற சகிலா அக்கா, கடலுக்குள் இறங்கி கழுத்தளவு தண்ணியால் அவரின் தாயாரையும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச்சென்றார்.

இறுக்கமான சூழல், சாப்பாடு பிரச்னை, வயதான பெற்றோர்களைப் பராமரிப்பதில் சிரமம். குழந்தைப் பிள்ளைகளுக்கான உணவுப்பொருள்கள் இல்லை. காயமடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் காயமடைகிறார்கள்; இப்படியான நெருக்கடியில் அப்பகுதியில் வசித்த பல ஊடகத்தினர் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படையினரின் பக்கம் சென்றுவிட்டனர். படையினரின் பக்கம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தும் அங்கே போகாமல் இறுதிநாள்வரை அந்தப் பணியைச் செய்திருந்தார். இன்றுவரை அனைவரும் இறுதியுத்தகாலப் படங்களைப் பார்க்கின்றீர்கள் என்றால் அதற்கு சகிலா அக்காவின் உழைப்பும் அதில் நிறையவே இருக்கின்றது. ஊடகப்பணி மீதான அவரின் அதீத ஈடுபாடுதான் காரணம்!

அடுத்த கட்டுரைக்கு