Published:Updated:

`குற்றச்சாட்டை நிரூபித்தால் ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வேன்' - ஜெயக்குமாருக்கு சவால்விடும் கீதாஜீவன்

`குற்றச்சாட்டை நிரூபித்தால் ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வேன்' - ஜெயக்குமாருக்கு சவால்விடும் கீதாஜீவன்
`குற்றச்சாட்டை நிரூபித்தால் ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வேன்' - ஜெயக்குமாருக்கு சவால்விடும் கீதாஜீவன்

``ஸ்டெர்லைட் ஆலையில் எனக்கு ஒரு லாரி கூட ஓடவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் அதை நிரூபித்துவிட்டால் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்" என தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., கீதாஜீவன் ஆவேசத்துடன் கூறினார். 

``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணிக்குத் தலைமைதாங்கிவரும் தி.மு.க எம்.எல்.ஏ., கீதாஜீவன், ஸ்டெர்லைட் ஆலையில் கான்ட்ராக்ட் எடுத்திருப்பதாகவும், அவரது பெயரில் 600 லாரிகள் ஓடுவதாகவும் ஒரு தகவல். அதேபோல, மு.க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என அடம்பிடித்துவரும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ-வின் மருமகனும் கான்ட்ராக்ட் எடுத்திருப்பதாக ஒரு தகவல் உள்ளது'' என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருந்தார். 

இக்குற்றச்சாட்டு குறித்து தி.மு.க எம்.எல்.ஏ., கீதாஜீவனிடம் போனில் தொடர்புகொண்டு பேசினோம். ``எனக்கு ஸ்டெர்லைட் ஆலையில் எந்தவித கான்ட்ராக்ட்டும் இல்லை. எனக்கோ, என் குடும்ப உறுப்பினர்களுக்கோ சொந்தமாக ஒரு லாரிகூட இல்லை. ஜெயக்குமார் ஒரு அமைச்சராக இருந்துகொண்டு, உண்மைத் தன்மை தெரியாமல், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என்மீது அபாண்டமாகப் பொய் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். அவர், என்மீது சொல்லும் குற்றச்சாட்டை உண்மை என நிரூபித்துவிட்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய தி.மு.க தலைவர் நடிகர் விஜய.டி.ராஜேந்திரர், ``ஸ்டெர்லைட் ஆலையில் தி.மு.க எம்.எல்.ஏ., கீதாஜீவன் மற்றும் வைகோவின் மருமகன் ஆகியோருக்குப் பங்கு உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே, ஆளும் கட்சியினர் யாருக்குமே பங்கு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.