
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோரை நிரந்தரமாக நீக்கி, போலீஸில் புகார் கொடுக்கத் தீர்மானித்தனர் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதுபற்றி சங்க நிர்வாகிகளிடம் பேசினோம்.
பழைய முறைகேடு - 1
``கடந்த 1987-ம் ஆண்டு நடிகர் ராதாரவி புது அறக்கட்டளை உருவாக்கி அதைப் பதிவுசெய்தார். அந்த அறக்கட்டளைக்கான விதிகளை வரையறுக்கும் ‘பை-லா’ படி, அறக்கட்டளையில் மொத்தம் 9 பேர் அறங்காவலர்களாக இருக்க வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால், சரத்குமார், ராதாரவி கட்டுப்பாட்டில் நடிகர் சங்கம் இருந்த 6 ஆண்டுகளில், இந்த விதிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. அத்துடன் இவர்கள் இருவரும் ‘வாழ்நாள் அறங்காவலர்’ என்று தங்களைத் தாங்களே பதிவுசெய்துள்ளனர். அதற்கேற்ப விதிகளை மாற்றி உள்ளனர். இதை தன்னிச்சையாக, பொதுக்குழுவைக்கூட்டாமல் செய்துள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘வாழ்நாள் அறங்காவலர்’ என்ற அடிப்படையில் எஸ்.பி.ஐ. சினிமாவுடன் இவர்கள் ஒப்பந்தம் போட்டு, நடிகர் சங்க இடத்தை விற்க முயற்சித்தனர். அதை எதிர்த்து பூச்சி முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011-ல் வழக்குத் தொடர்ந்தார். அதில் நீதிபதி சந்துரு, “சரத்குமாரும், ராதாரவியும் போட்ட ஒப்பந்தம் செல்லாது” என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்துப் போடப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதி பானுமதி அமர்வு விசாரித்தது. அங்கும், தனி நீதிபதியின் தீர்ப்பே உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு தேர்தல் நடந்து புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.பி.ஐ சினிமாவுடன் முன்னாள் நிர்வாகிகள் போட்ட ஒப்பந்தமும் ரத்தானது. அதன்பிறகு, பொறுப்புக்கு வந்த விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அடங்கிய பொதுக்குழு, சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பழைய நிர்வாகிகளிடம் சங்க வரவு செலவு கணக்குகளைக் கேட்டது. அவர்கள் அதைத் தரவில்லை. இதையடுத்து, சிறப்பு தணிக்கையாளர் குழுவை அமைத்து சங்க வரவு செலவுகளை நடிகர் சங்கம் ஆய்வுசெய்தது. அப்படிச் செய்தபோது, முன்னாள் நிர்வாகிகளான சரத்குமாரும் ராதாரவியும் ஒருகோடியே 60 லட்சம் முறைகேடு செய்துள்ளது தெரியவந்தது. இதுபற்றி போலீஸில் புகார் கொடுக்கப்பட்டபோது, ‘அது சிவில் பிரச்னை. எனவே, நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி விட்டனர். அந்தப் பிரச்னை நிலுவையில் உள்ளது.
முறைகேடு - 2
9 பேர் இருக்க வேண்டிய அறங்காவலர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை, ராதாரவியும் சரத்குமாரும் 5 பேராகக் குறைத்துள்ளனர். இந்த முடிவை எடுக்க பொதுக்குழுவைக் கூட்ட வில்லை. மாறாக, 5 பேராக குறைக்கும் முடிவை மூன்று பேர் எடுத்துள்ளனர். அந்த மூன்று பேர் யார் என்றால், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச் செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் காளை ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதுவும் மிகப்பெரிய முறைகேடு.

முறைகேடு - 3
1980-ம் ஆண்டு, நடிகர் சங்கத்துக்காக, வேங்கடமங்கலம் என்ற பகுதியில் 11 ஆயிரத்து 500 சதுர அடி நிலம் வாங்கப்பட்டு இருந்தது. அதை, சரத்குமாரும், ராதாரவியும் இந்தியா செல்வம் என்ற நபருக்கு விற்றுள்ளனர். அதைப் பதிவு செய்வதற்காக, சரத்குமார், ராதாரவிக்கு பவர் கொடுத்துள்ளார். இதனால், நடிகர் சங்கத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு. வாழ்நாள் அறங்காவலர் என்ற போலிப் பதவியை சரத்குமாரும், ராதாரவியும் தங்களுக்காக, தாங்களே உருவாக்கி இவ்வளவு மோசடிகளையும் செய்துள்ளனர். இதற்காகத்தான் இவர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்க உள்ளோம்.’’ என்றார்கள்.
- ஜோ.ஸ்டாலின்