Published:Updated:

“சங்கப் பணத்தில் வாழ வேண்டிய அவசியம் இல்லை!”

“சங்கப் பணத்தில் வாழ வேண்டிய அவசியம் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“சங்கப் பணத்தில் வாழ வேண்டிய அவசியம் இல்லை!”

பொங்கும் சரத்குமார்

“சங்கப் பணத்தில் வாழ வேண்டிய அவசியம் இல்லை!”

பொங்கும் சரத்குமார்

Published:Updated:
“சங்கப் பணத்தில் வாழ வேண்டிய அவசியம் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“சங்கப் பணத்தில் வாழ வேண்டிய அவசியம் இல்லை!”

டந்த நவம்பர் 28-ம் தேதி நடத்தப்பட்ட நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் அதன் முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச்செயலாளர் ராதாரவி இருவரும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து நடிகர் சங்க விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுபற்றிய கேள்விகளுடன் சரத்குமாரைச் சந்தித்தோம்.

“சங்கப் பணத்தில் வாழ வேண்டிய அவசியம் இல்லை!”

“எதற்காக உங்களை நிரந்தரமாக நீக்கி இருக்கிறார்கள்?”   
                   
“என்னைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணம். நடிகர் சங்கச் செயல்பாடுகளில் ரஜினி, கமல் தலையிடுவதில்லை என்பதற்காக அவர்களை நீக்கம் செய்துவிட்டோமா? இல்லையே. தற்காலிகமாக  நீக்கம் செய்தார்கள். அது தொடர்பான விவகாரம் ஏற்கெனவே போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் என்னிடமோ அல்லது ராதாரவியிடமோ எவ்வித விளக்கமும் கேட்காமல் இப்படி ஒரு செயலைச் செய்திருப்பது நடிகர் சங்கத்தை எப்படி நிர்வகிப்பது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இவர்கள் சொல்வதுபோல நான் நடிகர் சங்கத்திலிருந்து பணம் எடுத்துத்தான் வாழ வேண்டும் என்றில்லை. நான் நடிகன். நடித்துச் சம்பாதிக்கிறேன். இன்றைக்கும்கூட, என்னுடன் அவர்கள் போட்டி போட முடியாது, எங்கே நான் அவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிவிடுவேனோ என்பதால்தான் இப்படியான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். முழுக்க முழுக்க இது தனிப்பட்ட பிரச்னை. இதை நடிகர் சங்கப் பிரச்னையாக்கப் பார்க்கிறார்கள்.”   
 
  “அப்படி என்ன தனிப்பட்ட பிரச்னை?”

“இந்தப் பிரச்னையை ஆரம்பித்த பூச்சி முருகனை, ராதாரவி திட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள். தனிப்பட்ட தாக்குதலை மனதில் வைத்துக்கொண்டு இப்படி பூச்சி முருகன் செய்கிறார். விஷாலுக்கு தனிப்பட்ட பிரச்னை என்ன என்று எல்லோருக்குமே தெரியும். நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. உங்க பொண்ணுக்கு கல்யாணம் செய்து வெச்சிடுங்க என்று யார் யாரோ வந்து கேட்கிறார்கள். இதுவரை அப்படி மூன்று நான்கு பேர் கேட்டுவிட்டார்கள். விஷாலே நேரடியாக வந்து பேசி இருக்கலாம். அதற்கு அடுத்து என்ன முடிவு செய்ய வேண்டும் என்பதை அப்போது பேசியிருப்போம். சிவகுமார் திடீரென ஒரு நாள் காலை 6 மணிக்கு ராதிகாவை அழைத்து, ‘என்னம்மா, சரத் உன்னோட சொத்தை எல்லாம் வாங்கிக்கிட்டாராமே’ என்று  கேட்டிருக்கிறார். கார்த்தி எதோ சொல்லித்தான் இப்படி நடந்திருக்கிறது. எனக்கு ராதிகாவின் சொத்தை அபகரிக்கும் எண்ணம் இல்லை. அது  தேவையும் இல்லை. எங்க தாத்தா ஓ.ராமசாமி நாடார், மவுன்ட்பேட்டன் பிரபுவுக்கு பணம் கொடுத்தவர். நான் எம்.பி-யாக  இருந்தபோது தென்காசியில் 17 லட்சத்துக்கு என் செலவில் பூங்கா ஒன்றைக் கட்டிக் கொடுத் திருக்கிறேன். என் குடும்பப் பாரம்பர்யம் தெரியாமல் பேசுகிறார்கள். சிவக்குமாருக்கு அப்படி உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் வீட்டுக்கு வந்து எங்கள் இருவரிடமும் கேட்டிருக்க வேண்டும். அது தவறு என நான் கோபித்துக் கொண்டதால்தான் கார்த்தி இந்த விவகாரங்களைப் பெரிதாக்குகிறார். இத்தனை தனிப்பட்ட பிரச்னைகளுக்கும்தான், அவர்கள் பொதுவெளியில் நடிகர் சங்க விவகாரங்களைக் கொண்டு வருகிறார்கள்.”

“நீங்களும் ராதாரவியும் நிரந்தர அறங்காவலர்களாக  இருக்க முடிவு செய்தது தவறு என்றும் இது நடிகர் சங்கத்தில் எவரையுமே கேட்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கார்த்தி வாதிடுகிறாரே?”

“ஆறு பேர் அறங்காவலர்களாக இருக்கலாம் என்கிற விதி இருக்கு, ஆனால், நடிகர் சங்கப் பொறுப்புகள், கூட்டங்கள் என நடைபெற்றபோது அதற்கு பொதுக்குழுவில் இருந்தவர்களோ அறங்காவலர்களாக விருப்பப்பட்டவர்களோ யாரும் வரவில்லை. நாங்கள் மட்டும்தான் அங்கே இருந்தோம். டிரஸ்டிகளைக் காப்பாற்றவே அப்படியொரு முடிவெடுத்தோம். ஆனால், உடனடியாக அந்த முடிவும் திரும்பப் பெறப்பட்டது. நிர்வாகத்தில் தவறுகள் ஏற்படுவதும் திருத்திக்கொள்வதும் இயல்புதான். அது புரியாமல் நாங்கள் நிரந்தர அறங்காவலர்களாக முடிவெடுத்தோம் என்பதையே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”

“நடிகர் சங்க இடத்தின் மீது SPI சினிமாவுடனான ஒப்பந்தத்தில்  நீங்களும் ராதாரவியும் தனிப்பட்டு முடிவுகளை எடுத்ததுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணமா?”

“கடனாக இருந்த 4 கோடிக்கும் மேலான பணம் திருப்பித் தரவேண்டும், மொத்த செட்டில்மென்ட்டாக ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய் எனப் பேசி முடிக்கப்பட்டது. அதற்காகத்தான் நட்சத்திரக் கலைவிழா நடத்தி, அதில் கிடைத்த பணம் 1 கோடியே 45 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தோம். மீண்டும் நடிகர் சங்கம் கடனில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த SPI சினிமாவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். தனிப்பட்டு முடிவுகளை எடுக்கவில்லை. பொதுக்குழுவில் குஷ்பு, அப்பாஸ் இருந்தார்கள். கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யா கூட இருந்தார். எஸ்.வி.சேகர்கூட அப்பார்ட்மென்ட் கட்டலாம் என்று யோசனை சொன்னார். ஆனால், மூன்றில் ஒரு பங்கு பணம் நாம் அதற்குத் தரவேண்டும். அதனால் அந்தத் திட்டம்  வேண்டாம் எனக் கைவிடப்பட்டது. கிளப் ஆரம்பிக்கலாம் என்கிற யோசனையும் வந்தது. ஆனால் பொதுமக்கள் அதனைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்பதால் நிறுத்தப்பட்டது.  சினிமாவுக்காக சினிமா இடம் என்கிற அடிப்படையில்தான் SPI ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் செயல்படுத்தப் பட்டிருந்தால் சங்கத்துக்கு 300 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்திருக்கும். கடனில் இருந்திருக்க வேண்டிய நிலையே வந்திருக்காது.
அப்படி ஒரு முடிவெடுத்தபோது ‘இந்த ஒப்பந்தம் வேண்டாம், வேறு யோசனை செய்யலாம்’ என யாரும் சொல்லவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அவர்களிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க தாஜ் ஹோட்டலில் சந்தித்தோம். அப்போதுகூட நாசர் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பவில்லை. இன்று, விஷாலும் கார்த்தியும், நாங்கள் இந்த விவகாரத்தில் 150 கோடி ஊழல் செய்துவிட்டோம் என்கிறார்கள். SPI சினிமா தரப்பே அப்படி பணப் பரிமாற்றம் நிகழவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இப்போது 40 லட்சம் பணம் எடுத்து வைத்துள்ளேன் என்கிறார்கள். கோடிகள் லட்சமாகக் குறைந்திருக்கிறது. அதுவும் ஆடிட்டிங்கில் அப்படி ஒரு கணக்குக் காட்டப்படவில்லை.”
 
“இரு தரப்புமே நடிகர் சங்க விவகாரத்தில் அரசியல் பின்னணியுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறதே?”

“பூச்சி முருகன் தி.மு.க பின்னணியுடன் செயல்படுகிறார். விஷாலும் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் உதவியுடன்தான் இவை அத்தனையும் செய்து வருகிறார், அது யார் என்பது கூடிய விரைவில் தெரியவரும். ஆனால் என்னைப் பொறுத்தவரை சங்கத்துப் பிரச்னை வேறு, கட்சி என்பது வேறு. நான் தலைவராக இருந்தபோதும் அப்படி அனுமதிக்கவில்லை. இப்போது கட்சிப் பணிகளுக்காகச் செல்லும்  இடங்களில் நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதில்லை. இது நாளுக்கு நாள் அசிங்கமான அரசியலாக மாறிக் கொண்டிருக்கிறது. நிச்சயம் இனிமேல் சங்கம் ஒன்றுபட்டு இருக்கப் போவதில்லை.”

- ஐஷ்வர்யா
படம்: மீ.நிவேதன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கேள்வியை சிவாஜியில் இருந்து தொடங்க வேண்டும்!”

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ராதிகா, “தலைவர் பொறுப்பிலிருந்து சரத் விலகும்போது 1 கோடியே 25 லட்சம் பணம் வைத்துவிட்டு வந்தார். நந்தா ப்ளாட்ஸ் ஒரு கோடியே ஐம்பது லட்சம் பெருமானமுடையது. இவ்வளவு இருக்கும்போது இவர்கள் எதற்கு பணம் வாங்கிக் கடன் அடைக்க வேண்டும். கடனை அடைத்தோம் என்று விஷால் சொல்வதே தவறு. ராதாரவியைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? நடிகர் சங்கத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விஜயகாந்த்துடன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார். நானே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவர் நினைத்திருந்தால் அப்போதே விலகி இருக்கலாம். ஆனால், 2015-ல் சரத் தலைவராக இருந்த காலம் வரை சங்கத்துக்காகதான் உழைத்தார்.  என்னைப் பொறுத்தவரை அவர்கள் தலைமையேற்க தகுதியற்றவர்கள்.

சிவாஜி கணேசன் அறக்கட்டளை உறுப்பினராக இருந்தபோது, வாரிசுகள்தான் சங்கப் பொறுப்புகளுக்கு உரிமை என்று மாற்றம் கொண்டுவந்தார். அதனை எஸ்.எஸ்.ஆர் தவறு என்று சுட்டிக்காட்ட பின்னர் சிவாஜி அதனை மாற்றி அமைத்தார்.  இந்த வரலாறு கார்த்திக்கு தெரியவில்லை என்றாலும் அவருடைய அப்பா சிவகுமாருக்கு நன்கு தெரியும். இவர்கள் கேள்வி கேட்பதை சிவாஜி சாரிடம் இருந்து தொடங்க வேண்டும். அப்படிச் செய்ய முடியுமா?

நடிகர் சங்கத் தேர்தல் வந்தபோதுகூட சிவகுமாரிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். சரத்குமாருக்கு போட்டியிடவே விருப்பமில்லை என்றும் தெரிவித்தேன். அவர் தன் கையில் எதுவும் இல்லை என்றார். விஷாலைச் சந்திக்கச் சென்றேன். ஆனால், அதற்குள் கார்த்தி விஷாலுக்கு போன் செய்து என்னிடம் பேசவேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்

நடிகர் சங்கக் கட்டடம் கட்டிய பிறகு அதில்தான் தன் திருமணம் என்று விஷால் கூறி இருக்கிறார். கட்டடம் ஒரு வருடத்தில் கட்டப்படும் என்றவர், இப்போது மூன்று வருடம் என்று கூறி இருக்கிறார். அவர் கட்டடம் கட்டுவார் என்பதைக்கூட ஒப்புக்கொள்ளலாம். ஆனால், திருமணம் செய்துகொள்வார் என்பதை எல்லாம் நம்ப முடியாது” என்று படபடப்பாகப் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism