Published:Updated:

“நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது”

“நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது”
பிரீமியம் ஸ்டோரி
“நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது”

நளினியின் சிறை சித்ரவதைகள்!

“நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது”

நளினியின் சிறை சித்ரவதைகள்!

Published:Updated:
“நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது”
பிரீமியம் ஸ்டோரி
“நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது”

‘‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்” என்ற தலைப்பில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் நான்காவது பகுதி இது...

‘‘நான் சொன்னதை மிக நிதானமாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. அவசியம் என்றால் மட்டுமே கேள்விகேட்டார். அப்போதுதான் எனக்கொரு மன உறுத்தல் இருந்தது.  ‘என்னைப் பற்றியும் என் கணவரைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோமே, என் கணவருடன் தூக்குமர நிழலில் இருக்கும் மற்ற இருவரைப் பற்றியும் பேசவேண்டும்; அவர்களும் குற்றமற்றவர்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிவிட வேண்டும்’ என்று அவர்களைப் பற்றி பேசினேன். அதை அவர் விரும்பவில்லை. ‘அவர்களும் நிரபராதிகள்தான்’ என்று சொல்ல வந்தேன். ‘ஒரு தேசத்தின் மிகப்பெரிய தலைவர், முன்னாள் பிரதமரின் கொலை வழக்கு,  இவ்வளவு மோசமாகவா விசாரணை நடத்தப்பட்டது?’  என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும் அவரது கோபம் இருந்திருக்கலாம்.

“நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது”

எங்களின் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நீண்டது. 50 நிமிடங்கள் வரை நான் சொன்ன விளக்கத்தை எல்லாம் உள்வாங்கிக் கொண்டே சின்னச் சின்னக் கேள்விகளை எழுப்பியிருந்தார். நான் பேசி அவர் கேட்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவருக்கு வேண்டிய விளக்கங்களை, சந்தேகங்களைப் பெற்றுக்கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் பார்க்காமல், என்னிடம் வந்தார். என்னைச் சுதந்திரமாகப் பேசவிட்டு கேட்டுக்கொண்டிருந்தார். தேவையான இடங்களில் மட்டுமே குறுக்கிட்டுப் பதில் பெற்றார். மற்றபடி என்னை முற்றாகப் புறக்கணித்துவிடவில்லை என்பதே அவரின் மேலான குணத்தைக் காட்டியது.

எல்லாமும் பேசி முடித்து அவர் கிளம்பியபோது, ‘மேடம், நீங்கள் நல்லபடியாக வீடு போய் சேர்ந்தீர்கள் என்ற செய்தி எனக்கு வரும்வரை நான் சாப்பிடாமல்தான் இருப்பேன். நல்லபடியாக சென்றடைந்தீர்கள் என்ற தகவல் வந்த பிறகே சாப்பிடுவேன். அதனால், நீங்கள் நல்லபடியாக சென்றடைந்தேன் என்ற தகவலை எனக்கு கிடைக்க வழி செய்தால் எனக்கு நிம்மதி’ என்று நான் கூறியபோது அவரும் சாந்தமான முகத்தோடு, ‘ஒன்றும் பிரச்னை இல்லை. அப்படியே செய்கிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பிப் போனார்.

நான் இப்படிக் கேட்டதற்கு எனது 17 வருடகால வலியே காரணம். போகிறபோது தற்செயலாக ஏதாவது அவருக்கு நடந்தாலும் அந்தப் பழி என்னை வந்து சேர்ந்துவிடும் என்ற பயம் என்னை கவ்விக்கொண்டிருந்தது. அப்படி மீண்டும் ஒரு பழி வருவதை தாங்கும் சக்தி துளி அளவும் இல்லை. ஏற்கெனவே நடைபிணமாக உள்ளோம். இனி என்ன இருக்கிறது?

சொன்னபடியே அடுத்த நாள் மதியம் நான் உணவை மறுத்து இருந்தேன். அந்தத் தகவல் சிறை அதிகாரிக்குப் போனது. அவர் டெல்லிவரை தொடர்புகொண்டு விசாரித்து, ‘மேடம் நல்லபடியாக வீடு போய் சேர்ந்திருக்கிறார்’ என்ற தகவலை மாலையில் கூறி அனுப்பினார். அதன் பிறகுதான் நான் இரண்டாவது நாளன்று இரவு உணவைச் சாப்பிட்டேன்.

இந்தச் சந்திப்பை பற்றி நான் வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. வக்கீலையும் அம்மாவையும் வரவழைத்து அவர்களிடம் மட்டும் சொல்லிவைத்தேன். அவர்களும் அதை வேறு யாரிடமும் கூறவில்லை. கமுக்கமாகவே வைத்திருந்தார்கள். பிரியங்கா அவர்கள் சந்தித்து சென்ற பிறகு 11 நாள் கழித்துதான் என் கணவர் என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இதைச் சொன்னேன். ஒரு மாதம் கழித்து வேறு ஒரு வழக்கறிஞர் மூலம் அந்தத் தகவல் பரப்பப்பட்டது. அதன் பிறகு எங்கள் சந்திப்பின் சாதக பாதகம் பற்றி மீடியாக்கள் விதம் விதமாக எழுதித் தள்ளின. நாங்கள் வெளியிடாத ரகசியம் வேறு யாரால் தெரியத் தொடங்கியது; அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்றும் தெரியத் தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது”

பிரியங்கா அவர்கள் என்னைச் சந்தித்தது வேறு வேறு விஷயங்களை எல்லாம் முடிச்சுப்போட்டு பேச வைத்துவிட்டது. அதில் முதலாவது அவர் என்னைச் சந்தித்த பிறகுதான், ‘நான் எதையோ சொல்லிவிட்ட பிறகுதான்’ இலங்கையில், இன அழிப்பு போர் தீவிரமடைந்து கோரமாக முடிந்தது என்று விஷமத்தனமானப் பிரசாரத்தை இங்கே சிலர் செய்தார்கள். இந்த உண்மை தெரியாத சிலரும் வலியின் காரணமாக என்னைத் தவறாகப் பேசினார்கள். சிலர் எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம் என்று அவதூறு பரப்பினார்கள். சிலர் எனது விடுதலைக்கான ஆதரவினை முழுமையாகத் தடுத்துவிடத் திட்டமிட்டு அந்தப் பழிகளை என்மீது சுமத்தி பிரசாரம் செய்தார்கள். அப்படி பிரசாரம் செய்தவர்கள் நான் அப்படி என்னதான் சொன்னேன் என்றும் சொல்லி இருக்கலாமே? அப்படி என்னதான் என்னிடம் இருந்தது? வெளியில் உள்ள அவர்களுக்குத் தெரியாத விஷயமா உள்ளே இருக்கும் எனக்குத் தெரிந்திருக்கப்போகிறது?

எங்களை 60 நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தார்கள். பல அதிகாரிகளிடம் பல தகவல்கள் இருந்திருக்கலாம். ஒரு வருடம் புலனாய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்கள், சிறப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது, பிறகு பல்நோக்கு விசாரணை ஒன்று போடப்பட்டதே, அவர்களும் 15 வருடம் விசாரித்தபடி இருக்கின்றார்களே, இதிலெல்லாம் கிடைக்காத ஒரு தகவலுக்கா பிரியங்கா என்னைத் தேடி வந்திருக்கப் போகிறார்?

அவருக்கு ஏதோ ஒரு அவநம்பிக்கை இருந்திருக்க வேண்டும். நாங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை விரும்பிக் கொடுத்திருந்தோம் என்பதை அவர் நம்பவில்லை. பல ஆண்டுகளாக அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை அறிந்துகொள்வதற்காகக்கூட என்னை சந்தித்திருக்கலாம்.

சோனியாவை சந்தித்த பெங்களூரு ரங்கநாத் சொல்லாத தகவலையா நான் சொல்லி இருக்க முடியும்?

இலங்கையில், இறுதி  இன அழிப்புப் போர் 2007-ம் ஆண்டு வேகம் எடுக்கத் தொடங்கியது. அதற்கு முந்தைய ஆண்டே அந்தப் போருக்கு ‘ஆபரேஷன் பெக்கான்’ எனப் பெயரே வைத்துவிட்டிருந்தார்கள். இதற்கு ஓராண்டு கழித்து 2008-ல்தான் இங்கே வேலூர் சந்திப்பு நடந்தது. எனவே எனது சந்திப்புக்கும் இறுதிப் போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரியங்கா எதிர்பார்த்து வந்தது என்னிடம் இருந்து அவருக்குக் கிடைத்து இருந்தால், அவர் திருப்தி அடைந்து இருக்க வேண்டும்; அவர் எனது விடுதலைக்கு வழிவகை செய்து இருக்க வேண்டும். ஆனால், எனக்கு சாதகமாக இருந்த சூழ்நிலைகள் அப்படியே எதிராக அல்லவா மாற்றப்பட்டுவிட்டன. சிறையிலும் எனக்குத் திட்டமிட்ட துன்பங்கள் இழைக்கப்பட்டன. விடுதலையைத் தடுக்க பல பழிகள் சுமத்தப் பட்டன. சிறைக்குற்றம் என ஒரு வழக்கும் ஜோடிக்கப்பட்டது. பின்பு உயர் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.

இது தவிர அந்தச் சந்திப்புக்குப் பிறகு சிறையில், எனக்குத் திட்டமிட்ட உளவியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று நான் பைத்தியம் ஆகிவிட வேண்டும் அல்லது தற்கொலை செய்திட வேண்டும். இதனைக் குறிவைத்து விதம் விதமான இம்சைகள் என்மீது ஏவப்பட்டன. சிறைமாற்றம் செய்யப்பட்டேன். அவதிப்பட்டேன். கணவரைச் சந்திக்க அனுமதி இல்லாது  ஒரு வருடத்துக்கு மேல் அவதிப்பட்டேன். வாயும், வயிறும் அவிந்துபோய் உணவு எடுக்க முடியாமல், பல மாதங்கள் அவதிப்பட்டேன்.  இப்படி எனக்கு ஆக வேண்டும் என ஏதோ ஒரு மாத்திரையை எனக்கான உணவில் கலந்து தினமும் கொடுத்துள்ளார்கள். இதனை ஒரு மனச்சாட்சி கொண்ட காவலர் என்னிடம் சொன்ன பிறகு அவர்கள் தருகிற உணவினை அப்படியே வாங்கி ரகசியமாகக் கொட்டிவிடுவேன். பழங்கள், பிஸ்கட்டுகள் மட்டும் சாப்பிட்டு பல மாதங்கள் கழித்தேன். இவை எல்லாம் ஏன் நடந்தன... எப்படி நடந்தன என்பதை வெளியுலகுக்கு சொல்லக்கூடப் பயந்து கொண்டிருந்தேன். ஆனால், இவை அனைத்தையும் சிறைத்துறைத் தலைவருக்கு அவ்வப்போது புகாராக நானும் என் கணவரும் அனுப்பி இருக்கிறோம்.

 ஏதோ ஒரு வகையில், இந்தப் பெண் நிரபராதி என என்னைப்பற்றிப் பிரியங்கா நினைத்திருக்கலாம். ரகசியச் சந்திப்பை இந்தப் பெண் அம்பலப்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை இருந்து அதனாலும் பார்க்க வந்திருக்கலாம்.  ஆனால், அந்தச் சந்திப்பு, மனித நேயச் சந்திப்பாகத்தான் பேசப்பட்டது. இப்போது திரும்பிப் பார்க்கிறேன். அந்தச் சந்திப்பு நடந்து ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்களுக்கு நல்லது ஏதும் நடக்கவில்லை. ‘என்னோட காயத்தை ஆற்றிக்கொள்ள நடந்த சந்திப்பு’ என அறிக்கை கொடுத்திருந்தார் பிரியங்கா. ஒரு பேட்டியில், ‘அவரை மன்னித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அங்கே (வேலூர்) போனேன். போனபிறகுதான் அது தேவை இல்லை என்றாகிவிட்டது. அவரைச் சந்தித்தப் பிறகுதான் என் வேதனையும் நளினியின் வேதனையும் ஒன்றாக இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்’ என மூன்று வரிகளில் கூறியிருந்தார். ஆக என்னை ஏதோ ஒரு வகையில் நிரபராதி என்பதை உணர்ந்துள்ளார். அதே நேரத்தில், அவரால் வெளிப்படையாக என் விடுதலையைப் பேசவும் முடியவில்லை. இந்தியா, சி.பி.ஐ என்ற கட்டமைப்பு குலைந்துபோய்விடக் கூடாது என்ற காரணமாகவும் இருக்கலாம்.

“நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது”

அவரைப் போலவே அவரது சகோதரர் ராகுல் காந்தியும் சொன்னார். ஜார்கண்ட் மாநிலத்தில், மாவோயிஸ்ட்டுகளால்  கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி பிரான்ஸிஸ் இந்துவார் வீட்டுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூற சென்றிருந்தார். அப்போது பிரான்ஸிஸினுடைய பிள்ளைகளிடம் பேசியபோது, ‘நானும் தீவிரவாதத்துக்கு என் தந்தையைப்  பலி  கொடுத்தவன் தான். அதன் வலி எனக்குத் தெரியும். அப்போது என்னுடைய வயது 19-தான். அதனால் உங்களின் வேதனை எனக்குப் புரிகிறது. துக்கத்தில் இருந்து மீண்டு வாருங்கள்’ என்று ஆறுதல் கூறினார். அப்போது அந்தப் பிரான்ஸிஸின் பிள்ளைகள், ‘எங்கள் தந்தையைக் கொன்றவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம். நீங்கள்....?’ என்று கேட்க, ‘நானும் உங்களைப் போலத்தான். அந்தக் கொலையாளி களை நான் என்றைக்கோ மன்னித்து விட்டேன்’ என்று பட்டென்று பதில் கூறியிருக்கிறார் ராகுல். இந்தச் செய்தி 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவலாக வெளிவந்தது. அதன் பிறகும் ஆறு ஆண்டுகள் கடந்திருக்கிறது. ஆனாலும் எங்களை விடுவிக்க விருப்பமின்றியே இருக்கிறார்கள்.

இதையெல்லாம் சுட்டிக்காட்ட காரணம், பிரியங்காவின் சந்திப்பு எங்களை விடுதலை செய்வதற்கானது அல்ல. வேறு அரசியல் காரணங்களுக்கானது என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது.’’

(சிவராஜனை சி.பி.ஐ ஏன் பிடிக்கவில்லை என்பது பற்றி அடுத்த இதழில்)


தொகுப்பு: ஜோ.ஸ்டாலின், ஆ.நந்தகுமார்
படம்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism