Published:Updated:

தமிழ்க் கவிதையின் உக்கிரக் குரல்!

தமிழ்க் கவிதையின் உக்கிரக் குரல்!
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்க் கவிதையின் உக்கிரக் குரல்!

தமிழ்க் கவிதையின் உக்கிரக் குரல்!

தமிழ்க் கவிதையின் உக்கிரக் குரல்!

தமிழ்க் கவிதையின் உக்கிரக் குரல்!

Published:Updated:
தமிழ்க் கவிதையின் உக்கிரக் குரல்!
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்க் கவிதையின் உக்கிரக் குரல்!

னது பெயருக்கு தகுந்த குணத்தையும் வாழ்க்கையையும் மனிதர்கள் கொண்டிருப்பது வெகு அரிது. ‘இன்குலாப்’ அப்படியான அதிசயங்களுள் ஒருவர். புரட்சி என்கிற பொருள் தரக்கூடிய பெயரைச் சூட்டிக்கொண்ட கவிஞர் இன்குலாப் தன் இறுதி மூச்சுவரை அந்த சொல்லின்மீது கொண்ட வேட்கை தணியாத வாழ்க்கையையே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஒரு எளிமையான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் இன்குலாப். இயற்பெயர், எஸ். கே. எஸ். சாகுல் ஹமீது. மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டம்பெற்று, சென்னை புதுக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிவர். பேராசிரியர், பேச்சாளர், சிறுகதையாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், மார்க்ஸியச் சிந்தனையாளர், களச்செயல்பாட்டாளர் என பல்வேறு அடையாளம் கொண்ட ஆளுமையாக அவர் இருந்த போதிலும் அரசியல் தீவிரம் கொண்ட ‘மக்கள் கவிஞர்’ என்கிற முகமாகவே பெரிதும் அறியப்பட்டார்.

தமிழ்க் கவிதையின் உக்கிரக் குரல்!

கவிதையில் மட்டும் அரசியல் எழுதி பெயரளவில் மட்டும் அரசியல் கவிஞராக வாழ்பவர் பலர். இன்குலாப்போ அசலானவர். ஆதிக்கம் எதன் வழியாக வந்தாலும் எதிர்ப்பது என்கிற கொள்கையை தீவிரமாகக் கொண்டவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு காவலர்களால் தாக்கப்பட்டார், சிறை சென்றார். தமிழ்ச் சமூகத்தின் பெரு நோயான சாதிய ஒடுக்குமுறைகள்மீது கடுமையான கோபம் கொண்டார். கீழ்வெண்மணியில் 43 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்வு இன்குலாப்பை ஆழமாகப் பாதித்தது.

அடிப்படையில் மார்க்ஸிய கொள்கையை ஏற்றுக்கொண்டவர் என்கிற போதிலும் மார்க்ஸிய லெனினிய அடிப்படையிலான தமிழ்த் தேசிய விடுதலை சார்ந்த கருத்தியலையே அவர் கொண்டிருந்தார். அவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை ஒருமுறை சந்தித்திருக்கிறார். ஈழத்தில் மக்கள் கொல்லப்பட்டபோது தனது ‘கலைமாமணி’ விருதை தமிழக அரசிடம் திருப்பி அளித்தார். அந்தக் கடிதத்தில் இப்படி அவர் குறிப்பிட்டிருந்தார்: “‘கலைமாமணி’ விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும். தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த் தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது.”

இந்த நூற்றாண்டின் படைப்பாளிகளில் தனது மக்கள் நல அரசியல் நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாக நின்றவர் இன்குலாப். அவருக்குக் கிடைத்த அரசியல் தொடர்புகள் வழியாக அவர் தனது பொருளாதார நிலையை, அதிகார எல்லையை எவ்வளவோ வளர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால், அவர் இறுதிவரை எளிமையான வாழ்வையே வாழ்ந்தார்.

பாரதிதாசனுக்குப் பிறகு தமிழ் மண்ணை, மக்களை அதிகம் நேசித்த அரசியல் கவிஞர் இன்குலாப். அவரது படைப்புகளில் சமூகச் சிக்கல்கள், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான சிந்தனைகளே அதிகம் மையம் கொண்டிருந்தன. தமிழ்க்கவிதை உலகம் தனிமனித அகவாழ்வின் சிக்கல்களை முனங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உக்கிரக் குரலாக ஒலித்தார் இன்குலாப். அவரது கவிதைகள் பறையொலியோடு பாடல்களாக தமிழகத் தெருக்களில் முழங்கின. வரிகள் வழக்கமான அழகியல் பாவனைகள் அற்று ரத்தமும் சதையுமாய் தெறித்தன.

“சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே - ஒங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே
எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க - நாங்க
எரியும்போது எவன் மசுரைப் புடுங்கப் போனீங்க?
மனுசங்கடா... நாங்க - மனுசங்கடா”


இந்த கவிதையில் எழுந்து பரவும் கலைவெப்பம் இன்குலாப்பின் உண்மையான கோபத்தில் இருந்து பிறந்தது. இந்தக் கலைஞனின் வெப்பம் அநியாயங்களுக்கு எதிராக எழுகிற யாவரின் குருதியிலும் கலக்கட்டும். இன்குலாப்பின் சமூகச் செயல்பாடுகளுக்கு அர்த்தமளிக்கிற வகையில் தமிழ்ச் சமூகத்தால் அவர் கொண்டாடப் படவில்லை. அவர் அதை விரும்பியதும் இல்லை. இதோ இன்குலாப் தனது கவிதைகளை மட்டும் நம்மிடம் விட்டுவிட்டு சலனமற்று இயற்கையில் கலந்துவிட்டார். அவரது கவிதைகளையும் நினைவுகளையும் கொண்டாடுவோம். அவரது கவிதைகளில் துடித்துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் கோபத்தின்மீது தூசு படியாமல் பார்த்துக்கொள்வோம்.

“ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்”


- இது உங்கள் வரிகள்தான் இன்குலாப்! நீங்கள் பறவைகளோடு எல்லை கடப்பதை கண்களில் நீர் நிறைய பார்க்கிறோம். உங்களுக்கு எம் ஈர அஞ்சலி!

- வெய்யில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism