சென்னையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், ‘குர்குரே’ என்ற நொறுக்குத் தீனியை சாப்பிட்டதால் மரணம் அடைந்தார் என்று சமூக வலைதளங்களில் வைரலான தகவல், பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள செயின்ட் மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தவர் ஷிரிஷ் ஸாவியோ. இவரின் திடீர் மரணத்தால், அவரது பெற்றோரும் அவர் படித்துவந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் தீராத சோகத்தில் உள்ளனர்.

‘குர்குரே’, ‘லேஸ்’ உட்பட பல்வேறு பிராண்டுகளில் பலவிதமான நொறுக்குத்தீனிகள் கடைகளில் கிடைக்கின்றன. பாக்கெட்களில் விற்கப்படும் அந்த நொறுக்குத் தீனிகளுக்கு பெரும்பாலான சிறுவர், சிறுமியர் அடிமைகள்போல ஆகிவிட்டனர். கடந்த 29-ம் தேதி திடீரென மரணம் அடைந்தார், ஷிரிஷ். குர்குரே சாப்பிட்டதால்தான் அவர் மரணம் அடைந்தார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. அவரது மறைவுக்கு துக்கம் அனுஷ்டிப்பதாகக் கடந்த 30-ம் தேதி செயின்ட் மைக்கேல் பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
ஷிரிஷ் உடல் இந்திரா நகரில் உள்ள அவரின் வீட்டில் இருந்து பெசன்ட் நகர் சர்ச்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, இறுதிச் சடங்குகள் நடந்தன. உறவினர்கள், செயின்ட் மைக்கேல் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஷிரிஷ் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
“என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டை இழந்துட்டேன்” என்று சர்ச் வாசலில் அழுதுகொண்டிருந்த ரெனோ என்ற மாணவரிடம் பேசினோம். “ஷிரிஷும் நானும் 9-ம் வகுப்பிலும், 10-ம் வகுப்பிலும் சேர்ந்து படிச்சோம். அவன் ரொம்ப நல்லா படிப்பான். 11-ம் வகுப்புல நாங்க வேற வேற குரூப் எடுத்ததால, வேற வேற வகுப்புகளுக்குப் போயிட்டோம். ஆனாலும், பள்ளிக்கூடத்துல நாங்க ரெண்டு பேரும் இணைபிரியாத நண்பர்கள். அவன் காமர்ஸ் குரூப். நல்ல மார்க் எடுத்து சி.ஏ படிக்கணும் என்பது அவனோட கனவு. கம்ப்யூட்டர் கேம்ஸ் நிறைய ஆடுவான். அவனை அதுல ஜெயிக்கவே முடியாது. இப்படி திடீர்னு இறந்துட்டான்” என்று கண்ணீர் வழியப் பேசிய அந்த மாணவரிடம், “ஷிரிஷ் எப்படி இறந்தான்?” என்று கேட்டதற்கு, “குர்குரே சாப்பிட்டது
தான் காரணம்னு சொல்றாங்க. கடந்த 29-ம் தேதி நைட் பத்து மணி அளவுல, குர்குரே சாப்பிட்டுட்டு பெப்சி குடிச்சானாம். அப்புறம், ஜீரணம் ஆகலைனு அவங்க அம்மாகிட்ட சொல்லி இருக்கான். அதுக்கப்புறம், ‘ஈனோ’ குடிச்சிருக்கான். கொஞ்ச நேரத்துல ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துட்டானாம். உடனே, ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க. அவனைக் காப்பாத்த முடியாம போயிருச்சு” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிசினஸ்மேன் சதீஷ், மென்பொருள் பொறியாளர் தம்பதிக்கு ஒரே மகன்தான் ஷிரிஷ். இந்திரா நகரில் உள்ள ஷிரிஷ் வீட்டுக்கு நாம் சென்றிருந்தோம். மகனை இழந்த துக்கத்தில் யாரிடமும் பேசும் மனநிலையில் ஷிரிஷ் பெற்றோர் இல்லை. ஷிரிஷின் மாமா என்று நம்மிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், “நாங்க யாரும் பேசுற மனநிலையில் இல்லை. திடீரென ஷிரிஷ் இறந்து விட்டான். ஆனால், குர்குரே சாப்பிட்டுத்தான் இறந்தான் என்று வாட்ஸ்அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் தகவல் பரவியது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. அந்தத் தகவல் யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை” என்றார்.
ரத்த வாந்தி எடுத்து மயங்கியதும், சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஷிரிஷை கொண்டு சென்றுள்ளனர். அவரது உடலை சோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிர் போய்விட்டதாகக் கூறியுள்ளனர். அந்த மருத்துவமனை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “சிகிச்சைக்கு வரும் முன்பே ஷிரிஷ் மரணம் நிகழ்ந்துள்ளது. அந்த விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு, உடனடியாக உடலை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றனர்.
ஷிரிஷ் முகநூல் பக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன், பாக்கெட்களில் அடைத்து கடைகளில் விற்கப்படும் நொறுக்குத்தீனிகளுக்கு எதிரான தங்களின் கருத்துக்களை கோபாவேசத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.
- சி.தேவராஜன்