Published:Updated:

சேகர் ரெட்டி காட்டி கொடுக்கப்போவது யாரை?

சேகர் ரெட்டி காட்டி கொடுக்கப்போவது யாரை?
பிரீமியம் ஸ்டோரி
சேகர் ரெட்டி காட்டி கொடுக்கப்போவது யாரை?

107 கோடி பணம்... 127 கிலோ தங்கம்

சேகர் ரெட்டி காட்டி கொடுக்கப்போவது யாரை?

107 கோடி பணம்... 127 கிலோ தங்கம்

Published:Updated:
சேகர் ரெட்டி காட்டி கொடுக்கப்போவது யாரை?
பிரீமியம் ஸ்டோரி
சேகர் ரெட்டி காட்டி கொடுக்கப்போவது யாரை?

‘ஆளும் கட்சியின் புதிய கஜானா’ என்ற தலைப்பில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் அட்டைப்பட கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், அ.தி.மு.க அமைச்சர்களின் துணையோடு கார்டன் வட்டாரத்தின் நெருங்கிய நட்பில் சேகர் ரெட்டி இணைந்ததைப் பற்றி விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது மத்திய அரசின் வருமான வரித்துறை, சேகர் ரெட்டியின் வீடுகளில் ரெய்டை நடத்தி முடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கியிருக்கிறது ஆந்திர அரசு. அவரது வீட்டில் பெட்டி, பெட்டியாகக் கைப்பற்றப்பட்ட பணமும் மூட்டைகளில் அள்ளப்பட்ட தங்கமும் ஆளும்கட்சி வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது.

சேகர் ரெட்டி காட்டி கொடுக்கப்போவது யாரை?

திவாகரன் நட்பும் கார்டன் தொடர்பும்

வேலூர், காட்பாடியைப் பூர்விகமாகக் கொண்ட சேகர் ரெட்டியின் வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளில்தான் உச்சத்தைத் தொட்டது என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். ‘‘சசிகலாவின் தம்பி திவாகரனின் உதவியாளர் சிவராஜ் மூலமாகத்தான், அதிகாரத்தில் உள்ளவர்களுடன் சேகர் ரெட்டி நெருக்கமானார். தஞ்சாவூரைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருடன் நல்ல நட்பில் இருந்தார். கார்டன் வட்டாரத்தில் நுழைந்ததும், பொதுப்பணித் துறையில் அவருடைய வளர்ச்சி, யாரும் அவரை நெருங்க முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது. யாருக்கு என்ன வேண்டும் என்பதைக் கண்டறிந்து கரன்சிகளை வாரி இறைப்பதில் ரெட்டியைப் போல் ஒருவரைப் பார்க்க முடியாது. வருமான வரித்துறையின் வலையில் ரெட்டி சிக்குவதற்கு மிக முக்கியக் காரணமே, அரசுச் செயலர் ஒருவர்தான். பணப் பரிமாற்றத்திலும் வர்த்தகத்திலும் இருவருக்கும் உள்ள தொடர்புகள், அதன் மூலம் ஆந்திராவில் நடந்துவரும் வர்த்தகம் ஆகியவை வருமான வரித்துறையின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. மேலும், டெல்லியில் ஜெயலலிதா தொடர்பான வழக்கு விவகாரங்களைக் கையாள்வதில் அரசுச் செயலரும் ரெட்டியும் சேர்ந்து செயல்பட்ட விவரங்கள் அனைத்தையும் கண்காணித்து வந்தனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருந்தபோது, திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் குழுவில் இடம் பெற்றார் சேகர் ரெட்டி.

கஜானாவைக் காட்டிக் கொடுத்த ‘புள்ளி’!

சிறையில் இருந்து ஜெயலலிதா வந்ததும் திருப்பதியில் மொட்டை போட்டார் ஓ.பி.எஸ். அப்போது அவருடன் ரெட்டியும் சேர்ந்து இருக்கும் படங்கள் வெளியாகின. அந்தக் காலகட்டத்தில், பொதுப்பணித் துறைக்கும் அமைச்சராக இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நிதித்துறைக்கு மட்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஓ.பி.எஸ். தற்போது சசிகலாவின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் ஒருவரோடு வலம் வந்தார் ரெட்டி. இவர்கள் மூலம், ஆட்சி அதிகாரத்தின் பரிவர்த்தனைகளை முழுமையாக வளையத்துக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பதற்காகவே ரெய்டு நடத்தியுள்ளனர். இந்த ரெய்டு விவகாரத்தால், அ.தி.மு.க-வின் சீனியர் அமைச்சர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஏனென்றால், ‘திருப்பதிக்குச் செல்கிறோம்’ என ஒற்றை வார்த்தை சொன்னால்போதும். தங்கும் இடம் முதல், வேண்டிய லட்டுகளை வாங்கித் தருவது வரையில் ரெட்டி ஆட்களின் உபசரிப்பு சிறப்பாக இருக்கும். கடந்த 3 நாட்களாக நடக்கும் ரெய்டால் மன்னார்குடி தரப்பினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதுகுறித்து ‘முக்கிய’ அமைச்சரை நேரில் வரவழைத்துப் பேசியிருக்கிறார் சசிகலா. அவரிடம், ஏற்கெனவே தாங்கள் ரெட்டியோடு இணைந்து மேற்கொண்ட வர்த்தகம் பற்றியும் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் பற்றியும் விவரித்திருக்கிறார். ஆனால், ரெட்டியின் பணமும் தங்கமும் இருக்கும் இடத்தை இவ்வளவு துல்லியமாகக் காட்டிக் கொடுத்தது யார் என்ற கேள்வி, கார்டன் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது” என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

“வருமான வரித்துறையின் சோதனையால், தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் அச்சத்தில் உறைந்துள்ளனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப்பின், ரெட்டி தொடர்பில் உள்ள நிறுவனங்கள் மூலம்தான் பணப் பரிமாற்றத்தை நடத்தியுள்ளனர் இவர்கள். பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மட்டுமல்லாமல், அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரிகள் பலரும், ரெட்டியின் குட்புக்கில் இருந்துள்ளனர். குறிப்பாக, ‘உயர்’ அதிகாரியின் வட்டத்தில் உள்ளவர்கள்தான் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ரெட்டி தரப்பில் இருந்து என்ன மாதிரியான தகவல்கள் பெறப்பட்டன என்பது பற்றி, டெல்லியில் உள்ள சிலரிடம் கேட்டு வருகின்றனர். மாநில அரசின் உயர் அதிகாரி களையும் தங்கள் பக்கம் திருப்பும் வேலையில் மத்தியில் உள்ளவர்கள் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம்தான் வலுத்துள்ளது” என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேகர் ரெட்டி காட்டி கொடுக்கப்போவது யாரை?

காக்க வைத்த ‘அந்த’ 2 நாட்கள்!

மத்திய நிதியமைச்சகம் கட்டுப்பாட்டின்கீழ் வரும் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவில், கடந்த சில வாரங்களாகவே தீவிர ஆலோசனை நடந்து வந்துள்ளது. ஆனால், யாரைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்பட இருக்கிறது என்ற தகவல் மிகுந்த ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

‘‘ ‘சேகர் ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி, பிரேம் உள்ளிட்டவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்பட இருக்கிறது’ என்ற தகவல், வருமான வரித்துறையின் புலனாய்வுத்துறை துணை இயக்குனர் ராய் ஜோஸ் மற்றும் டெல்லியில் உள்ள நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தின் தலைவர் ஆகியோருக்கு மட்டுமே தெரியும். அவருடைய வீடு, அலுவலகம், ஆந்திரா தொடர்புகள் ஆகியவற்றைக் குறிவைத்து, கடந்த இரண்டு மாதங்களாக தகவல் சேகரித்து வந்தனர். இந்த நிலையில், ‘ரெட்டியின் பணப் பரிவர்த்தனைகள் எந்த வகையில் நடத்தப்படுகின்றன’ என்ற தகவலை ஆளும் கட்சியில் உள்ள சிலரது மூலமாகத் தெரிந்துகொண்டுள்ளனர். அதனால்தான், ரெட்டி வீட்டில் இருந்து ரூ.107 கோடி பணமும் 127 கிலோ தங்கமும் பிடிபட்டன’’ என்று விளக்கிய வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்து, “முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த காலத்திலேயே சேகர் ரெட்டி உள்ளிட்ட சிலருக்கு செக் வைக்கும் வேலைகள் நடந்துவந்தன. ஜெயலலிதா மரணமடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ரெய்டுக்குச் செல்லத் தயாரானது 150 பேர் கொண்ட அதிகாரிகள் குழு. அதற்குள் டெல்லியில் உள்ள நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தில் இருந்து அவசர போன்கால் வந்துள்ளது.

சேகர் ரெட்டி காட்டி கொடுக்கப்போவது யாரை?

‘இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னையிலும் வேலூரிலும் ஆய்வை நடத்துங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘முதல்வர் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்’ என்பதால்தான், இவ்வாறு சொல்லப்பட்டது என்பதை பின்னர்தான் புரிந்துகொண்டோம். தற்போது கணக்குக் காட்டப்பட்டுள்ளது குறைவான தொகைதான். ரெட்டி மூலமாக ஆளும் கட்சியின் அனைத்து பரிவர்த்தனைகளும் சேகரிக்கப்பட்டுவிட்டன. அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட 9.63 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. வங்கிகள் மூலமாக அவை பெறப்பட்டிருக்கலாம் என்பதை நம்ப முடியவில்லை. ரெட்டியின் திருப்பதி தேவஸ்தான தொடர்புகள் மூலம், புதிய பணக்கட்டுகள் பெறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் தேவஸ்தான பொறுப்பிலிருந்தும் ரெட்டியை நீக்கியிருக்கிறார்கள். மேலும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் ரெட்டிக்கு உதவியிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. ஏனென்றால், அவர் வீட்டில் பிடிபட்ட அட்டைப் பெட்டிகளில் இருந்த பணக்கட்டுகள் சீல் பிரிக்கப்படாமலே இருந்தன. அவர் வீட்டிலும் அலுவலகத்திலும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஆவணங்களையும் காட்சிப்படுத்திவிட்டோம். அவருடைய வாக்குமூலத்தில் இருந்து அடுத்தகட்ட நடவடிக்கையை டெல்லியில் உள்ளவர்கள் தீர்மானிப்பார்கள்” என்றார் விரிவாக.

சேகர் ரெட்டி, ஸ்ரீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், என்னென்ன பிடிபட்டன என்பதை அறிவித்திருக்கிறது நிதித்துறை அமைச்சகம். அரசியல் ஆட்டத்தின் அடுத்தகட்ட காட்சிக்காக காத்திருக்கிறார்கள் சசிகலாவுக்கு எதிர் அணியினர்.

- ஆ.விஜயானந்த்
படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism