Published:Updated:

‘NO' சொன்ன ஜெ., - ‘OK' செய்த ஓ.பி.எஸ்! - நடந்தது என்ன?

‘NO' சொன்ன ஜெ., - ‘OK' செய்த ஓ.பி.எஸ்! - நடந்தது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
‘NO' சொன்ன ஜெ., - ‘OK' செய்த ஓ.பி.எஸ்! - நடந்தது என்ன?

உதய் திட்டம் முதல் மதுரவாயல் பறக்கும் சாலை வரை...

மிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கடந்த 6-ம் தேதி பதவி ஏற்றதில் இருந்தே அதிரடிகள் ஆரம்பித்துவிட்டன. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரையிலும் தமிழக அரசு உறுதியுடன் எதிர்த்து வந்த மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி, உணவுப் பாதுகாப்பு திட்டம், உதய் மின் திட்டம் மற்றும் நீட் தேர்வு ஆகிய ஐந்து திட்டங்களுக்கும் தற்போதைய ஓ.பி.எஸ் தலைமையிலான தமிழக அரசு உடனடி ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தடாலடி முடிவு, அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது.

‘NO' சொன்ன ஜெ., - ‘OK' செய்த ஓ.பி.எஸ்! - நடந்தது என்ன?

மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் துறைமுகம் - மதுரவாயல் திட்டம்

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், 2007-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதலுடன் தொடங்கப்பட்டது.  அடுத்து 2012-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கூவம் நீரோட்டத்தினை இந்தத் திட்டம் தடுக்கிறது எனக் கூறி தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றார். இந்த வழக்கின் மீதான மேல்முறையீட்டு மனுவை விவாதித்த உச்ச நீதிமன்றம், ‘நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இந்த விவகாரம் தீர்க்கப்படும்’ என்று கூறியது. நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்த இந்தத் திட்டம், அண்மையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக மறைந்ததை அடுத்து புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் பன்னீர்செல்வத்தால் தற்போது ‘ஓகே’ செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசு கடந்த 10-ம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், சிலபல நிபந்தனைகளுடன் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி இரட்டைத் தூண் அமைக்க வேண்டிய இடத்தில் ஒற்றைத் தூண் அமைக்க வேண்டும் என்றும், அதற்கான செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் கூவம் நதியின் நீர்ப்போக்கு பாதிக்கப்படக் கூடாது என்றும் கூறியுள்ளது. தற்போது இந்தத் திட்டம் தொடர்பான பணிகளும் துரிதப் படுத்தப்பட்டுள்ளன. அரசின் திடீர் நிலைமாற்றம் குறித்தும் இந்தக் காலதாமதத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை எந்த அரசு ஏற்றுக்கொள்ளப் போகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், கடந்த ஜூன் மாதத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த ஜெயலலிதா, ‘மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணத்தைப் புதுப்பிக்கும் உதய் திட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்; கூடவே மாற்று மின் உற்பத்திக்கான பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்ட பின்னரே உதய் திட்டம் குறித்தான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தமிழகத்தில் எடுக்கப்படவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த அக்டோபரில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இது தொடர்பாக இரு தரப்பும் கூடிப் பேசியது. மாநில மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் தமிழக அரசு அதிகாரிகளும் அந்த சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர். விரைவிலேயே தமிழகத்தில் உதய் திட்டம் நடைமுறைக்கு வரும் என பியூஷ் கோயல் அப்போது தெரிவித்தார். ஆனால், முதல்வர் உடல்நிலை சீராக இல்லாததால், மாநில அரசின் நிலைப்பாடு என்ன என்பது அப்போது சரிவரத் தெரியவில்லை. இந்த நிலையில், ‘உதய்’ திட்டத்துக்கும் ‘சரி’ எனக் கூறியுள்ளது மாநிலத் தரப்பு. `மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் புதுப்பிக்கப்பட்டால், இந்தச் சிக்கலை தமிழக மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?’ என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

 அடுத்து, ‘மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தால் மாநில அரசுக்குச் சேர வேண்டிய வரித்தொகைகள் கிடைக்காது. தமிழகத்துக்கு இதனால், ரூ.9,270 கோடி வரை இழப்பீடு ஏற்படும். எனவே, இந்த திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கவே முடியாது’ என்ற நிலைப்பாட்டை ஜெயலலிதா பிரதமருடனான ஜூன் மாத சந்திப்பிலேயே கூறி இருந்தார். மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின்போது அ.தி.மு.க வெளிநடப்பு வரை சென்றது. ஆனால், எவ்வித நிபந்தனையுமின்றி தற்போது சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கும் மாநில அரசு `சரி’ என்று கூறி இருக்கும் நிலையில், ஏற்கெனவே மாநிலத் தரப்பில் குறிப்பிட்டிருந்த கோடிக்கணக்கிலான இழப்பீட்டை எப்படி சரிகட்டப்போகிறது என்பதற்கான எவ்வித விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘NO' சொன்ன ஜெ., - ‘OK' செய்த ஓ.பி.எஸ்! - நடந்தது என்ன?

‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்றால் ஆதார் எண்களை ரேஷன் அட்டையுடன் இணைக்கவேண்டியது அவசியம். அதன் அடிப்படையிலேயே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை சரிவரக் கணக்கிட முடியும். தமிழகத்தில், ஆதார் அட்டை திட்டமே தற்போதுதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதால், இந்தத் திட்டத்தில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும்’ என்று ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்திவந்தார். இந்த நிலையில், ஜெயலலிதா அப்போலோவில் இருந்த  கடந்த நவம்பர் 1-ம் தேதியே தமிழகத்தில், ‘உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வரும்’ என அறிவிக்கப்பட்டது.

சமூகப் பொருளாதாரத்தை கருத்தில்கொண்டே இங்கு மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு கட்டமைக்கப்பட்டிருப்பதால் கிராமப்புற மாணவர்களின் மேற்படிப்பு வாய்ப்புகளை பாதிக்கும் மருத்துவப் படிப்புக்கான `நீட்’ நுழைவுத் தேர்வையும் ரத்து செய்யும்படி ஜெயலலிதா கேட்டிருந்தார். சென்ற ஆண்டு முதலே தமிழகத்தில் மேற்படிப்புக்கான எவ்வித நுழைவுத் தேர்வும் அமலில் இல்லை. இந்த நிலையில், 2017-ம் ஆண்டு தொடங்கி நுழைவுத் தேர்வு முறையை தமிழகத்தில் மீண்டும் அமல் படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மாநில அரசைக் கலந்தாலோசிக்காமலே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒருபுறம் சொல்லப்பட்டாலும் மற்றொரு பக்கம் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இந்தத் திட்டம் வர இருப்பதை அண்மையில் உறுதிபடுத்தி இருக்கிறார். அப்படியென்றால், இந்தத் திட்டத்தினால், தற்போது கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்பு பாதிக்கப்படாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இதே காரணத்தை சுட்டிக்காட்டி முன்னர் தடை கோரிய தமிழக அரசு தற்போது என்ன நடவடிக்கையை எடுக்க இருக்கிறது என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

‘NO' சொன்ன ஜெ., - ‘OK' செய்த ஓ.பி.எஸ்! - நடந்தது என்ன?

இது தொடர்பாகக் கருத்து கூறிய  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘‘நீட் தேர்வு முறை  மத்திய அரசின் பாடத்திட்டத்தின்படி இருக்கும். அது நம் மாநில மாணவர்களின் மருத்துவப் படிப்பு வாய்ப்பை பாதிக்கும். மற்ற திட்டங்களும் தமிழக மக்களுக்கு நன்மை விளைவிக்கும் என்றால் மட்டுமே கொண்டுவரப்படவேண்டும். ஆனால், நிர்பந்தத்தின் பேரில் எந்தத் திட்டத்தையும்  பி.ஜே.பி செயல்படுத்துமானால், அதனை காங்கிரஸ் எதிர்க்கும். தற்போது அமலுக்கு வரும் திட்டங்களும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டங்களிலும் பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா முடிவெடுப்பதைப் போன்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கவேண்டும்” என்றார்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “பறக்கும் சாலை திட்டம் தொடர்பாக, ஜெயலலிதாவை 2012-க்குப் பிறகு மூன்று முறை சந்தித்துப் பேசி இருக்கிறேன். பன்னீர்செல்வத்தை இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன். மேலும்,  தமிழக அதிகாரிகள் தரப்புடனும் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இறுதியாக கடந்த செப்டம்பர் 16 அன்று நான் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியபோது, ‘திட்டத்தின் மீதான ஒப்புதல் தரப்படும்’ என உறுதிபடக் கூறி இருந்தார். மேலும் கிழக்குக் கடற்கரை சாலை திட்டத்தையும் தமிழக அரசு, மத்திய அரசின் வசம் ஒப்படைக்கும் எனவும் சம்மதம் தெரிவித்திருந்தார். நீட் தேர்வு தமிழில் எழுதலாம் என்னும் வசதி இருக்கிறதே. அதுவும் ஜெயலலிதா முன்னரே ஒப்புதல் கொடுத்ததன் அடிப்படையில்தான் நிறைவேற்றப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் உணவுப் பாதுகாப்பு சட்டம் அனைத்து திட்டங்களும் மற்ற மாநிலங்களில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இங்கு கொண்டுவரப்படுகிறது. பிரதமரின் நிர்பந்தத்தின் பேரில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாதது” என்றார்.

- ஐஷ்வர்யா