Published:Updated:

வந்தது புயல்... வாட்டப்போகுது வெயில்!

வந்தது புயல்... வாட்டப்போகுது வெயில்!
பிரீமியம் ஸ்டோரி
News
வந்தது புயல்... வாட்டப்போகுது வெயில்!

வந்தது புயல்... வாட்டப்போகுது வெயில்!

வந்தது புயல்... வாட்டப்போகுது வெயில்!

ஓர் ஓய்வு நாளுக்குப் பின் விடிந்த கடந்த திங்கட்கிழமை (டிச, 12), நரகமாக இருக்கும் என சென்னைவாசிகள் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 110 கி.மீ வேகத்தில் வீசிய வர்தா புயல், சென்னையைப் புரட்டிப் போட்டதுடன், 16 உயிர்களைக் காவுவாங்கிச் சென்றுள்ளது.

ஒப்பீடற்ற பெருங்காற்று!

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று கடந்த நான்கு நாட்களுக்கு முன், ‘வர்தா’ புயலாக உருப்பெற்றது. சென்னையை நோக்கி நகர்ந்த இந்தப் புயல், ‘12-ம் தேதி கரையைக் கடக்கும்’ என்றும், அந்தச் சமயத்தில் பெரும் மழையுடன், காற்று வீசுமென்றும் வானிலை ஆராய்ச்சி மையம் கணித்திருந்தது. இது, சென்னையை நெருங்க நெருங்க, டிசம்பர் 11-ம் தேதி இரவே சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. சென்ற ஆண்டின் கசப்பான நினைவுகளை உதிர்த்து மீண்ட மக்களின் மனங்களை, மீண்டும் இருள் கவ்வத் தொடங்கியது. மழை குறித்த அச்சத்தில் மக்கள் நேரத்தை நகர்த்திக் கொண்டிருக்க... 12-ம் தேதி காலை 11 மணிவாக்கில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல காற்றின் வேகம் தீவிரமடைந்து மதியம் 3 மணிக்கு உச்சத்தைத் தொட்டது.

வீழ்ந்த மரங்கள்... சாய்ந்த வாகனங்கள்!

புயலின் “Eye wall” என்ற பகுதி சென்னையைத் தொட்டதும், காற்றின் வேகம் பன்மடங்காகி, மணிக்கு 110 கி.மீ ஆனது. மின்சாரக் கம்பங்கள் வீழ்ந்ததால்... சென்னை முழுவதும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனே மின்சாரம் நிறுத்தப்பட்டது. வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களின் மேற்கூரைகள், நெடுஞ்சாலை பெயர் பதாகைகள் பறக்கத் தொடங்கின; வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன; மரங்கள் வேர்களுடன் பெயர்ந்துவிழுந்தன. மாலையில், காற்றின் வீரியம் சென்னையில் கொஞ்சம் தணிந்து, திருவள்ளூர் மாவட்டம் பழவந்தாங்கல் பகுதியில் கரையைக் கடந்து, பெங்களூரு நோக்கி நகரத் தொடங்கியது.

வந்தது புயல்... வாட்டப்போகுது வெயில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு லட்சம் மரங்கள் சாய்ந்தன!

சென்னையின் கான்கிரீட் காடுகளுக்கு மத்தியில் தன் பச்சையத்தை உயிர்ப்புடன் வைத்திருந்த 4 லட்சம் மரங்களில் 40 சதவிகித மரங்கள் வேரோடு வீழ்ந்துவிட்டன. மாநகராட்சி ஊழியர் ஒருவர், “எங்கள் கணக்கில் மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் மரங்கள் இருந்தன. இதில், ஏறத்தாழ 1 லட்சம் மரங்கள் வரை வீழ்ந்திருக்கின்றன. இன்னும் கணக்கெடுக்கும் பணி முடியவில்லை” என்றார்.

துரித நடவடிக்கைகள்!


கடந்த ஆண்டு மழைபோல் இல்லாமல், இந்த ஆண்டு ‘வர்தா’ புயலை எதிர்கொள்ள, தமிழக அரசு அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தது. புயலின் தாக்கத்தை முன்பே கணித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அத்துடன், பேரிடர் மீட்புக் குழு, வருவாய்த் துறை, போலீஸ் என அனைத்துத் துறைகளும் நல்ல திட்டமிடலுடன் இணைந்து துரிதமாகச் செயல்பட்டன. குறிப்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனைத்துத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடுக்கிவிட்டார். புயலினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க ஏதுவாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு 29 கண்காணிப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 6 குழுக்கள், 30 படகுகளுடன் கடற்படை வீரர்கள், இரண்டு கப்பல்கள் தமிழகக் கடற்கரைகளில் தயார் நிலையில் இருந்தன.

மேற்கண்ட மாவட்டங்களின் கடலோர வட்டங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அல்லது வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனியார் நிறுவன ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

அதே நேரம், காற்றின் காரணமாகத் தொலைதொடர்பில் சேதம் ஏற்பட்டதால், சென்னையின் பெரும் பகுதி மக்களின் கைபேசி, தொலைபேசி செயலிழந்தது. கோடம்பாக்கத்தைச் சேர்ந்த முத்து, ‘‘எங்கள் ஏரியாவில் இருந்த அனைத்து மரங்களும் சரிந்து விழுந்துவிட்டன. புயலின் காரணமாக தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் எங்களால் மாநகராட்சி ஊழியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை” என்றார். நம்மிடம் பேசிய  மாநகராட்சி அலுவலர்களும் இதனை ஆமோதித்தனர்.  “நாங்கள் பல்வேறு அவசர உதவி எண்களை அறிவித்திருந்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தொலைதொடர்பிலும் இடையூறு ஏற்பட்டதால், எங்களுக்கு வெறும் 235 புகார்கள்தான் வந்தன” என்றனர்.

தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசித்துவந்தவர்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். புயல் கரையைக் கடந்த 12-ம் தேதி இரவு எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட தற்காலிக நிவாரண முகாம்களுக்குச் சென்ற முதல்வர், அமைச்சர்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை ஆய்வு செய்தனர். மேலும், மருத்துவ முகாம்கள், சாலைச் சீரமைப்பு, சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தல் ஆகிய பணிகளையும் முதல்வர் ஓ.பி.எஸ் முன்னின்று பார்வையிட்டார்.

“ஜீரோவிலிருந்து தொடங்க வேண்டும்!” 

எல்லாப் பேரிடரையும்போல, இந்தப் புயலிலும் மோசமாகப் பாதிக்கப்பட்டது அரசு சொல்லும் வறுமைக்கோட்டுக் கணக்கின் கீழ் வாழ்பவர்கள்தான். கூவம் ஆற்றை ஒட்டிவாழும் பல்லவன் நகரில் தண்ணீர் புகுந்தது மட்டுமல்லாமல், பல வீடுகளின் மேற்கூரைகளும் பறந்து சென்றிருந்தன. அங்கு வசிக்கும் பீட்டர், “நாங்கள் ஒவ்வொரு புத்தாண்டின் போதும், எங்கள் வாழ்கையை ஜீரோவிலிருந்து தொடங்கவேண்டி இருக்கிறது. யாரை நொந்துகொள்வது என்றுதான் தெரியவில்லை” என்கிறார் கண்ணீருடன்.

வந்தது புயல்... வாட்டப்போகுது வெயில்!

மணல் குன்றுகள் பாதுகாப்பு!

புயலில் இருந்து நம்மைப் பாதுகாப்பது குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன், ‘‘சென்னையில் புயல் அடிப்பது ஒன்றும் எதிர்பாராமல் நடப்பவை அல்ல. சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் நடுவே வங்கக் கடல் மட்டுமே இருப்பதால், கடலின் தாக்கம் சென்னை, கடலூர் பகுதிகளில் அதிகமாக இருப்பது இயல்பான ஒன்றே. புயலில் இருந்து நம்மை முதலில் பாதுகாப்பது கடற்கரையில் இருக்கும் மணல் குன்றுகளே. 20 - 25 வருடங்களுக்கு முன்பு, ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் உயரமான மணல் குன்றுகள் இருக்கும். அதன் மேல் பனை மரங்கள் இருக்கும். 30 - 40 அடி உயரத்தில் இருக்கும் இந்தச் சுவர், இயற்கையாகவே புயலில் இருந்து நம்மைப் பாதுகாத்து வந்தது. நாவல், வேப்ப மரம், முந்திரி, தாழச்செடி, பனை, ஈச்சை ஆகியவை மணல் குன்றுகளை வலுவாக வைத்திருக்க உதவும். நகர விரிவாக்கம் என்ற பெயரில் மணல் குன்றுகளையும், மரங்களையும் அழிக்காமல் வைத்திருந்தாலே புயலில் இருந்து நாம் தப்பித்து இருக்கலாம். இனியாவது, நெய்தல் பகுதிகளில் வளரும் மரங்களை அரசும், மக்களும் முன்வந்து வளர்க்க வேண்டும். வேறு தன்மை கொண்ட அலங்கார மரங்களால் இங்கு அடிக்கும் காற்றைத் தாங்கிக்கொள்ள முடியாது. மேலும், புயல் காலங்களில் மரத்தின் கிளைகளை அகற்றிவிட்டால் பெரும்பாலான மரங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்’’ என்றார்.

 பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசியபோது, “வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடலில் வெப்பநிலை அதிகமாகியுள்ளதால், இந்திய கிழக்கு கடற்கரையை தீவிரமான புயல்கள் தாக்கக்கூடும் என 2014-ல் வந்த ஒரு ஆய்வு அறிக்கை எச்சரித்து இருந்தது. கடலுக்குள் என்ன நடக்கிறது, சுற்றுச்சூழல் என்ன மாற்றங்களை கண்டுவருகிறது என்பதை என்பதை அறிந்துகொள்ள நம்முடைய அரசாங்கங்கள் அக்கறைக் காட்டுவது இல்லை. புயல், வெள்ளம் வந்த பிறகு நிவாரணம் அளிப்பதை மட்டுமே முழு கடமையாக அரசுகள் கருதுகின்றன. இயற்கை பேரிடர்களை சந்திக்கக் கூடிய நகரமாக உள்ள சென்னையை, பேரிடர்களைத் தாங்கக் கூடிய நகரமாக முதலில் மாற்ற வேண்டும்.

தமிழகத்துக்கு 50 சதவிகித மழை வடகிழக்கு பருவகாலத்தின் போதே கிடைக்கிறது, அதே சமயம் இந்தக்காலத்தில்தான் அதிக பாதிப்புகளையும் தமிழகம் சந்திக்கிறது. கடற்கரைகளை ஒட்டியுள்ள அணுமின் நிலையங்கள், தொழிற்சாலைகளை முறைப்படுத்தினாலே பாதிப்புகளில் இருந்து தமிழகம் தப்பித்துக்கொள்ள முடியும். மேம்பாலம், மெட்ரோ, சாலை விரிவாக்கம், மால் ஆகியவற்றுக்காகக் கடந்த 20 வருடங்களில் 90 சதவிகிதம் மரங்களை சென்னை இழந்துள்ளது. மீதமிருந்த மரங்களும் தற்போது சாய்ந்துள்ளதால், சென்னையில் வெப்பம் பல மடங்கு அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது’’ என்றார்.

- மு.நியாஸ் அகமது, ஆ.நந்தகுமார்
படங்கள்: கே.கார்த்திகேயன், சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார். ப.சரவணகுமார்

பணமில்லா பரிவர்த்தனை...

பாடம் புகட்டிய வர்தா!


`ரொக்கமாக அல்லாமல் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என அட்டைகள் மூலமான பரிமாற்றங்களை நோக்கிச் செல்லுங்கள் என மத்திய அரசு வலியுறுத்திவரும் நிலையில், கார்டு பரிமாற்றங்களில் உள்ள சிக்கல்களை வர்தா புயல் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டிவிட்டது. வர்தா புயல் கரையைக் கடக்க தொடங்கிய 12-ம் தேதி காலை முதலே சென்னை முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் அடித்து இரண்டு நாட்கள் ஆனபிறகும் பல இடங்களில் மின்சாரம் வரவில்லை. செல்போன் சிக்னல்களும் துண்டிக்கப்பட்டன. உணவகங்கள், சூப்பர் மார்கெட்களில், கார்டுகளை ஸ்வைப் பண்ணும் இயந்திரங்கள் செயலிழந்து போயின. கையில் பணம் இல்லாமல் ஏற்கெனவே மக்கள் தவித்து வரும் நிலையில், ஸ்வைப் இயந்திரங்களும் வேலை செய்யாததால், அன்றாட உணவுப் பொருட்களைக்கூட  வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். கடந்த ஒரு மாத காலமாக அங் கொன்றும் இங்கொன்றும் வேலை செய்துகொண்டிருந்த ஏ.டி.எம்-களும் மூடிவைக்கப்பட்டன.

வந்தது புயல்... வாட்டப்போகுது வெயில்!

உறுதிமிகுந்த உள்நாட்டு மரங்கள்!

இந்தப் புயலில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நம்முடைய உள்நாட்டு மரங்களான வேம்பும், வேங்கையும் புயலைச் சமாளித்து, தன் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டபோது, வெளிநாட்டு மரவகைகள்தான் வேரோடு சாய்ந்திருக்கின்றன. இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தாவரவியல் பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, “ ‘இந்திய தாவரவியலின் தந்தை’ என்று அழைக்கப்படும் வில்லியம் ரோக்ஸ்பர்க், வெளிநாட்டுத் தாவரங்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தார். இந்த மரங்கள் எல்லாம் பெருங்காற்றை எதிர்கொள்ள முடியாமல் வேரோடு சாய்ந்தபோது, நம் உள்நாட்டு மரங்களான மகிழம், புங்கை, வேம்பு, பூவரசு போன்றவை தன் கிளைகளை மட்டும் இழந்து, உறுதியுடன் நிற்கின்றன” என்றார். கடந்த ஆண்டு டிசம்பரில் பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட அளவுக்கு பெரும் பாதிப்புகள் இல்லை என்றாலும், இந்தப் புயலும் வறியவர்களை வீதிக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.