Published:Updated:

வில்லங்கம் செய்தாரா விக்கிரமராஜா?

வில்லங்கம் செய்தாரா விக்கிரமராஜா?
பிரீமியம் ஸ்டோரி
News
வில்லங்கம் செய்தாரா விக்கிரமராஜா?

சலசலக்கும் நாடார் சங்கம்

‘நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம்’ சார்பில், சென்னை கொட்டிவாக்கத்தில், ‘நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் செயலாளராக உள்ள வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் 15 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாகப் பகீர் குற்றச்சாட்டை எழுப்புகின்றனர் நாடார் சங்கப் பிரமுகர்கள்.

பள்ளியின் முன்னாள் தாளாளரும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான ராஜ்குமார் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது, ‘‘2008-ல் நடைபெற்ற சங்கத் தேர்தல் மூலமாக செயலாளர்  பொறுப்புக்கு வந்த விக்கிரமராஜாதான் பள்ளியின் தாளாளர் பொறுப்பையும் கவனித்துவருகிறார். 3,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கல்வி பயிலும் இப்பள்ளியில் அரசு விதிமுறைகளை மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். கட்டணத்துக்கான ரசீது கொடுக்காமல், ரோஸ் கலர் துண்டுச் சீட்டில் பெய்டு சீல் குத்தி கொடுக்கிறார்கள்.

வில்லங்கம் செய்தாரா விக்கிரமராஜா?

பள்ளியின் நிலத்தையே இரண்டாக மறித்து, புதிதாக ‘ராமச்சந்திரா பப்ளிக் ஸ்கூல் ட்ரஸ்ட்’ என்ற புதிய பள்ளிக் கட்டடத்தை சங்க அனுமதி இன்றி கட்டியுள்ளனர். மேலும் இந்த அறக்கட்டளைப் பள்ளியின் நிர்வாகிகளாகவும் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டுள்ளனர். அடுத்தகட்டமாக நாடார் சங்கப் பள்ளியின் இடத்தை, விக்கிரமராஜாவுக்கு மாதம் 100 ரூபாய் வாடகையில் 31 வருட லீசுக்கு கொடுப்பதாக இன்னொரு செயலாளரான சந்திரன் ஜெயபால் எழுதிக் கொடுத்துள்ளார். இவற்றையெல்லாம் பொதுக்குழுவில்  தீர்மானமாக நிறைவேற்ற முடியாது என்பதால், பொதுக்குழுவைக் கூட்டாமலே முன் தேதியிட்டு பொய்யான ஆவணங்களைத் தயார் செய்துள்ளார்கள்.

மேலும், இந்தப் பள்ளியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை நடத்துவதற்கான அனுமதியும் எங்கும் பெறப்படவில்லை. அங்கீகாரம் பெறாத இப்பிரிவில் படித்துவரும் 452-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரின் எதிர்காலம் இதனால் கேள்விக்குறியாகியுள்ளது. இதுதவிர, புதிதாக பில்டிங் கட்டிய வகையில் 13 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாகப் பொய்க் கணக்கு காட்டுகிறார்கள்’’ எனக் குமுறினார்.

இந்த முறைகேடுகள் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும், ராகவன் நம்மிடம் பேசும்போது, ‘’சங்க வரவு செலவு கணக்குகளில் ஆரம்பித்து உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வருடந்தோறும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. இதனாலேயே சங்கப் பதிவும் கடந்த 14 வருடங்களாகப் புதுப்பிக்கப்படவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வில்லங்கம் செய்தாரா விக்கிரமராஜா?

2008-ம் வருடம் தேர்தலுக்கு முந்தைய நாளில் மட்டும், 3,700 புதிய உறுப்பினர்களை விதிமுறை மீறி சங்கத்தில் சேர்க்கிறார்கள். ஒரு ஆளுக்கு 250 ரூபாய் ஆயுள் சந்தா என்றால்கூட கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாயைக் கணக்கில் காட்ட வேண்டும். ஆனால், அப்படி எதையும் காட்டவில்லை. முகவரி மாறியவர்கள், இறந்துபோனவர்கள் என்று உறுப்பினர்களின் விவரம் குறித்த எந்தத் தகவலும் வாக்காளர் பட்டியலில் புதுப்பிக்கப் படவில்லை. இன்றைய தேதி வரையில், தேர்தலும் நடத்தப்படவில்லை. இதனால் தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாகப் பதவியில் இருப்பவர்களே  இருந்துகொண்டிருக் கிறார்கள்.’’ என்றார் காட்டமாக.

குற்றச்சாட்டுக்கள் குறித்து சங்க செயலாளரும் வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவருமான விக்கிரமராஜாவிடம் பேசினோம். ‘`அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவானவாக நான் வளர்ந்து வருவதைப் பிடிக்காத சிலர்தான் இதுபோன்ற பொய்க்குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்துகிறார்கள்.  இப்படிக் கேள்வி கேட்பவர்கள் ஒவ்வொருவரின் பின்னணி குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும். இவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் என் வசம் நியாயமான பதில் உள்ளது’’ என்றார் சுருக்கமாக.

இந்த நிலையில், குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளித்துப் பேசிய சங்கத்தின் மூத்த செயலாளரான சந்திரன் ஜெயபால், ‘’வருடந் தோறும் முறையாக சங்கத்தைப் புதுப்பித்து வருகிறோம். சங்கம் மீது நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்தபோது, சங்கத்தோடு சேர்ந்து பள்ளி நிர்வாகமும் முடக்கப்படும் சூழல் உருவானது. எனவே, கல்விக்கென தனி அறக்கட்டளையைத் தொடங்கினோம். சி.பி.எஸ்.இ பள்ளிக்கான அனுமதி என்பது ஆரம்பத்திலேயே வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. பள்ளியை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும்போதே விண்ணப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளலாம்.

உறுப்பினர் சேர்க்கையில் நாங்கள் நியாயமாக நடந் திருப்பதாக நீதிமன்ற விசாரணையிலேயே சொல்லி விட்டார்கள். பொதுக்குழுவில் செயற்குழு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற விதி உள்ளது. இதை விடுத்து தேர்தல் நடத்தி, ஒருவரை எதிர்த்து இன்னொருவர் நின்றால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். ஒற்றுமைக்காக ஏற்படுத்தப்பட்ட சங்கத்தில் பிளவுகள் வரலாமா? இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாமல், சொந்த வீட்டுக்குள்ளேயே பானை சட்டியை உடைத்துக்கொண்டிருக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?!’ என்று நொந்துகொண்டார்.

வில்லங்கம் செய்தாரா விக்கிரமராஜா?

இதற்கிடையில், சங்கத்துக்குள் நடைபெற்றுள்ள மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. சங்கத் தலைவர் பத்மநாபனிடம் அதுகுறித்துக் கேட்டோம். ‘’ஆமாம்.... 15 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சுமத்துகிறார்கள். எந்த வகையில் ஊழல் நடைபெற்றுள்ளது என குற்றச் சாட்டுக்களை கூறுபவர்களே ஆய்வு செய்து அறிக்கை தருமாறு ஆய்வுக் கமிட்டி அமைத்துள்ளோம். ஊழல் நிரூபிக்கப்பட்டால், மேல் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார் முத்தாய்ப்பாக.

உழைத்து முன்னேறிய ஒரு சமூகம் ஊழல் உள்குத்துகளால் உடைந்து நிற்பது உண்மையிலேயே வருத்தமடைய வைக்கிறது!

- த.கதிரவன்
படம்: வீ.நாகமணி, பா.காளிமுத்து