Published:Updated:

ஐ.நா மீதான பழியைத் துடைப்பாரா குட்டெரெஸ்?

ஐ.நா மீதான பழியைத் துடைப்பாரா குட்டெரெஸ்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.நா மீதான பழியைத் துடைப்பாரா குட்டெரெஸ்?

ஐ.நா மீதான பழியைத் துடைப்பாரா குட்டெரெஸ்?

லகத்துக்கு ஒரு புது ஹெட்மாஸ்டர்  வரப்போகிறார். அவர் பெயர் அன்டோனியோ குட்டெரெஸ். அதாவது ஐக்கிய நாடுகளின் சபை பொதுச்செயலாளராக இவர் நியமிக்கப்பட்டு இருப்பதை உலகம் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளது.

உலகின் மிக உயரிய, பொறுப்பான பதவிகளில் ஒன்று ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் பதவி. ‘சர்வதேச பிரச்னைகளைக் கையாள வேண்டும், உலக அமைதிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும், யாருக்கும் பாரபட்சம் பார்க்கக்கூடாது’ என்பது போன்ற விதிமுறைகளுக்கு மிகச்சரியாகப் பொருந்திப்போகக்கூடிய நபரைத்தான் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வரிசையில், தற்போது ஐ.நா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்டோனியோ குட்டெரெஸ், போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர். 

ஐ.நா மீதான பழியைத் துடைப்பாரா குட்டெரெஸ்?

ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நாடுகள் உள்ளன. இதில், சிக்ஸ்த் சீக்ரெட் பேலட்டின் இறுதி வாக்கெடுப்பில் (sixth secret ballot) குட்டெரெஸுக்கு எதிராக யாருமே வாக்களிக்க
வில்லை. 15 பேர் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலிலும், 13 ஆதரவு ஓட்டுகளும், கருத்து தெரிவிக்க விருப்பமில்லை என 2 ஓட்டுகளும் விழுந்தன. ஆக மொத்தத்தில், அவருக்கு எதிராக யாருமே வாக்களிக்கவில்லை.

தற்போது பதவியில் இருக்கும் பான் கி மூன் 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பதவி விலகுகிறார். அன்றைய தினமே அன்டோனியோ குட்டெரெஸ் பதவியேற்க இருக்கிறார்.

போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்பன் என்ற மாகாணத்தில், 1949-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30- தேதி பிறந்த அன்டோனியோவின் இயற்பெயர் அன்டோனியோ மேனுவேல் டீ குட்டெரெஸ்.  நாட்டிலேயே சிறந்த மாணவர் என்ற பட்டம் பெற்றவர். பொறியியல் படிப்பை முடித்த இவர், உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். 2010-ம் ஆண்டில் இருந்து 4 டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார். 1974-ம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அதன்பிறகு, 1995-ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டுக்குப் பிரதமர் ஆனவர்  2001-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். போர்ச்சுகலை சொந்த நாடாகக் கொண்ட குட்டெரெஸ் போர்ச்சுகீஸ் தவிர்த்து, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகளை யும் மிகத் தெளிவாகப் பேசக் கூடியவர்.

உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான (அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை) UNHCR அமைப்பில், உயர் ஆணையராக 2005-ம் ஆண்டு ஜூன் முதல் 2015-ம் ஆண்டு டிசம்பர் வரை பதவி வகித்தார். இந்த அமைப்பு, 10,000 வேலையாட்களுடன் 125 நாடுகளில் இயங்கி வந்தது. UNHCR-ல் சேர்வதற்கு முன்பு 20 ஆண்டுகள் அரசு மற்றும் பொதுப்பணித் துறையில் பணியாற்றி வந்தார். 2000-ம் ஆண்டு ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவராக இவர் இருந்தபோதுதான் ‘லிஸ்பன் செயல்திட்டம்’ ஏற்கப்பட்டது. 1991-ம் ஆண்டிலிருந்து 2002-ம் ஆண்டு வரை மாநில போர்த்துகீசிய கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார்.

குட்டெரெஸ், போர்த்துகீசிய சட்டமன்ற உறுப்பினராக தேர்வான பிறகு 17 ஆண்டுகள் பணியாற்றினார். அந்த சமயத்தில், அவர் பாராளுமன்றக் குழுவின் பொருளாதாரம், நிதி திட்டமிடல், பிராந்திய நிர்வாகம், நகராட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றுக்கும் தலைமை தாங்கினார். பிறகு, தன் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இருந்தார்.

சமூக ஜனநாயக அரசியல் கட்சிகளின் ஓர் உலகளாவிய அமைப்பாக இருந்த சோஷலிச சர்வதேச அமைப்பில் பல ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தார். 1992 -ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை குழுவின் துணை ஜனாதிபதியாக இருந்தார். 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை சோஷலிச சர்வதேச அமைப்புக்கு ஜனாதிபதியாக இருந்தார். குட்டெரெஸ், மாட்ரிட் கிளப்-ன் உறுப்பினராகவும் இருந்தார்.

தற்போது ஐ.நா. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் உலக அமைதி, தொடர்ச்சியான மேம்பாடு, பாலின வேறுபாடின்றி உரிமைகளை வழங்குவது, மேனேஜ்மென்ட் சீர்திருத்தங்கள் போன்றவற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். ஜனவரி மாதம் குட்டெரெஸ் பதவியேற்கும் நிகழ்ச்சியில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சாங் சூகியும் ஐ.நா-வின் முக்கியத் தலைவர்களும், கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவார் கூறும்போது, ‘‘பான் கீ மூனின் இடத்தை நிரப்ப சரியான நபர் குட்டெரெஸ்தான். அவர் உலகின் தொடர்ச்சியான மேம்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவார்’’ என்றும் கூறியுள்ளார். குட்டெரெஸை சந்தித்துப் பேசிய இந்திய தூதரக அதிகாரியிடம் ‘இந்தியாவுடனான ஐ.நா-வின் தொடர்பு தொடரும்’ என்று கூறியுள்ளார். ஈழத்தமிழர் பிரச்னையில் சரியான நிலைப்பாடு எடுக்காமல் பான் கீ மூன் வழுக்கினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. போர்க்குற்றம், ஈழத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைப் படலம் நடந்து கொண்டுவரும் நிலையில் குட்டெரெஸ் சரியான நிலைப்பாடு எடுப்பாரா என்பதை காத்திருந்துதான் கவனிக்க வேண்டும். 

வாழ்த்துக்கள்.... அன்டோனியோ குட்டெரெஸ்!

- நந்தினி சுப்பிரமணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz